உழன்று மயங்கி நின்றுவிடாது, அவற்றுக் கப்பாற்பட்டதும் அவற்றாற் பெறப்படுவதுமான சிவஞானத்தை அவாவி என்ற பொருள்தந்து நின்றது. கரைகண்டு - (அதனால்) உடையவர் கழல்பேணும் என அடுத்துக் கூறியதும் இக்கருத்தை உணர்த்தும். கரைகண்டு அதனால் எனக் காரணப் பொருளில் வந்த வினையெச்சம். உடையவர் கழல்பேணும் - மாமறைமுதல் கல்வித்துறை பலவும் கரை கண்டதனால் ஆன்மாக்களாகிய தம்மை உடைமைப் பொருளாகவும், இறைவரைத் தம்மை ஆளாக உடைய தலைவராகவும், அவருக்கு எஞ்ஞான்றும் அடிமை செய்து அவருடைய கழல் பேணுதலே உயிர்க்கு உய்வுதரும் சாதனமாகவும் கண்டார்; அதனால் கற்றுக்கண்ட அவ்வாறே பேணிக், குறைவுபடாத சிவச்செல்வ நிறைவு பெற்றார் என்று கூறிய அமைதி காண்க. மாமறைமுதல் - பெரிய - அளவில்லாத - வேதங்களே எல்லாக் கலைஞானங்களுக்கும் பிறப்பிடமாவது என்பார் முதல் கல்வித்துறை பல என்றார். கழல்பேணும் செல்வக்குடி - தில்லைவாழந்தணர்களைக் குறித்தது. "கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே, செற்றார்வாழ்" என்னும் ஆளுடைய பிள்ளையாரது இத்தலத் தேவாரமும், "அருமறை நான்கி னோடா றங்கமும் பயின்று வல்லார்" (354) என்றதும் காண்க. செல்வக் குடிநிறை நல் வைப்பு - "செல்வ நெடுமாடம்", "செல்வ முயர்கின்ற செல்வர்வாழ்" என்ற தேவாரக் கருத்துக்கள் காண்க. வைப்பு - மாடங்கள். வைப்பிடைவளர் - திருவீதி என்றது, மாடங்கள் நிற்க, இடையே வளர்ந்து நீண்டு செல்வது போன்ற வீதி. வளர் என்பது தங்கும் என்றும், வளர்த்தப்படும் என்றும் உள்ள பல குறிப்புக்களும் தருவது காண்க. வீதியினிருபுறமும் மாடங்கள் உள்ளன என்பதை மாடங்களிடையே வீதி வளர்கின்றதென்றது ஓர் அணிநயமுமாம். இடையே செல்வக்குடி நிறை நல்வைப்பையுடைய வீதி என்க. சிவமே நிலவிய திருவீதி - தன்னைச் சார்ந்து பணிந்தோர்க்குச் சிவத்தினைப் பெறுவிக்கும் திருவீதி என்பது. "மாதவங்கள் நல்கும் திருவீதி நான்கும் தொழுது" (திருஞான - புரா) என்பது காண்க. இக்கருத்துப் பற்றியே நாயனார் "பொய்ப் பிறவிப் பிணியோட்டும் திருவீதி புரண்டு வலங்கொண்டு போந்தார்" (1444) எனப் பின்னர்க் கூறப்படுவதும் காண்க. அருட்கூத்தப் பெருமானாகிய பொன்னம்பலவாணர் தேரில் எழுந்தருளி உயிர்களை உய்யக் கொண்டருளும் தனிப் பெருஞ் சிறப்புடைமைபற்றி இவ்வாறு விதந்து கூறினார். ஆளுடைய பரிமாசாரியர்கள் எல்லாம் இவ்வாறு இத் திருவீதிகளைத் தொழுது சென்றிருத்தல் கேட்டும் நாம் அத்திரு வீதிகளை வணங்காமற் றலைநிமிர்ந்து செல்வதும், அவற்றுட் செய்யத்தகாத குற்றங்களைச் செய்வதும் அந்தோ? என்ன மதியீனம்! 162 1428. | நவமின் சுடர்மணி நெடுமா லையுநறு மலர்மா லையுநிறை திருவீதிப் புவனங் களின் முத லிமையோர் தடமுடி பொருதுந் தியமணி போகட்டிப் பவனன் பணிசெய வருணன் புனல்கொடு பணிமா றவுமவை பழுதாமென் றெவருந் தொழுதெழு மடியார் திருவல கிடுவார் குளிர்புனல் விடுவார்கள். |
163 |