அலமரும் ஆர்வம் - வரைநில்லா அளவிற் பெருகிய ஆர்வம் என்று கூட்டுக. அலமருதல் - சுழலுதல் - வருந்துதல். அலமரும் ஆர்வமாவது ஆர்வ மிகுதியினால் அப்பொருள் கிடைக்கத் தாழ்க்குந்தோறும் உள்ள மனநிலை. "வருத்தமுறுங் காதலினால்" (1056) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. அன்பின் கடல் நிறை உடல் - அன்பு கடல்போல நாயனாரது திருமேனியினுள் நிறைந்திருந்தது என்பது. "அருட்பெருகு தனிக்கடலு முலகுக் கெல்லா மன்பு செறி கடலுமாம்" (1450) என்பது காண்க. திருமலி பொற்கோபுரம் - முன் பாட்டில் நிலையேழ் கோபுரமென்றது மேலைக் கோபுரம். இங்குக் கூறியது திருவணுக்கன் றிருவாயிற் கோபுரம். திரு - முத்தித் திரு. பொன் - பொன்னணி மிகுந்த. முன் களனிற் பொலி விடம் உடையார் - விடம் பொலி களனுடையார் என்க. முன் பொலி - தேற்றமாக. விடம் கண்டோர்க்கும் தீமைசெய்து சாதல் பயக்கும் தனது இயல்புமாறி அமுதமாகக் கண்டோர்க்குச் சாவாமை விளைத்துப் பொலிதலாலும், அஃது அந்நிலையைக் களனிலிருத்தலாற் பெற்றமையாலும் இவ்வாறு கூறினார். "ஆயத்தி னாலமிர் தாக்கிய கோன்" என்ற திருக்கோவையாருங் காண்க. "நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்", "கருநட்ட கண்டனை", "நஞ்சடை கண்ட னாரை" என்று நாயனார் இதன் பொலிவினில் ஈடுபட்டு அருளிய திருவிருத்தங்களின் குறிப்புப் பெற இவ்வாறு கூறினார். ஆளுடைய நம்பிகளைத் "தெண்ணிலா மலர்ந்த வேணி"யும், ஆளுடைய பிள்ளையாரைத் "தமக் களித்த மெய்ஞ் ஞானமே யானவம் பலமும்.....தனிக் கூத்தும்" வசீகரித்ததுபோல, நாயனாரை நீலகண்டம் வசீகரிப்பதாம் என்பது குறிப்பு. நடம் நவில் கனகப்பொது - இறைவர் நடமாடும் வெளியாகிய பொற்பொது. சிற்றம்பலமும் பொன்னம்பலமும் கூடிய இடம். "பொற்கோபுரமது புகுவார், முன் (பொது) கண்ணுற்றார் என்றதனால் மேற்குக் கோபுரத்தினுள் புகுந்து திருமாளிகையை வலம்வந்த பின்பு, கீழ்த்திசைக் கண்ணுள்ள இரண்டாங் கோபுரத்திற் புகுந்தவர், திருவணுக்கன் றிருவாயில் புகுந்து கனகப்பொதுவை முன்னே தரிசித்தார் எனப் போந்தவாறறிக" என்பது ஆறுமுகத் தம்பிரானா ருரை. அலமருவரை - விரவி - என்பனவும் பாடங்கள். 165 1431. | நீடுந் திருவுட னிகழும் பெருகொளி நிறையம் பலநினை வுறநேரே கூடும் படிவரு மன்பா லின்புறு குணமும் பெறவரு நிலைகூடத் தேடும் பிரமனு மாலுந் தேவரு முதலாம் யோனிக டெளிவொன்றா வாடுங் கழல்புரி யமுதத் திருநட மாரா வகைதொழு தார்கின்றார். |
(இ-ள்.) நீடும்.....அம்பலம் - நீடுகின்ற முத்தித் திருவுடன் நிகழ்வதாகிய, மேன் மேலும் பெருகும் ஞானவொளி நிறையும் திருவம்பலமானது; நினைவுற - முன் மனத்தினுட் பொருந்திய அவ்வாறே; நேரே கூடும்படி வரும் - கண்ணினுக்கு எதிரிலும் கூடும்படியாகவரும்; அன்பால்....நிலைகூட - அன்பினால் இன்பம் பொருந்தும் குணச் சிறப்பும் வருகின்ற நிலை கைகூடியதனாலே; தேடும்.....திரு நடம் - தேடுகின்ற பிரமதேவனும், விட்டுணு மூர்த்தியும், தேவர்களும் ஏனைப்பிறவியில் வரும் உயிர்களும் தெளியமுடியாத, ஆடும் திருவடியினால் புரியும் அமுதத் திருநடத்தை; ஆராவகை தொழுது ஆர்கின்றார் - அமைதிபெற்று நிரம்பாத வகையினால் தொழுது உண்ணுகின்றாராயினார். |