(வி-ரை.) நீடும்திரு - என்றும் நீடியுள்ள அழிவில்லாத முத்தித்திரு பெருகுஒளி - "ஒளியுள்ள பொருட்கெல்லாம் ஒளிகொடுத்துச் சுயஞ்சோதியாயுள்ளது" என்பர் ஆறுமுகத்தம்பிரானார். "மெய்ச்சுடருக் கெல்லா, மொளி வந்த பூங்கழல்" (நீத் - 15) என்பது திருவாசகம். இங்குக் கூறிய ஒளி ஞான ஒளி. சிற்றம்பலம் எனப்படுவது காண்க. "மணி யொளிரம் பலநட நவில் கின்றான்", "திகழம் பலநட நவில்கின்றான்" என்று இக்கருத்தைக் கச்சியப்பமுனிவரர் பேரூர்ப் புராணத்தினுள் (நிருத்தப்படலம் - 60 - 69) பல வகையாலும் விரித்துரைத்தது காண்க. நினைவுற - என்றது நான்கு உட்கரணங்களுள் சிநதையின் றொழிலும் நிலையும் பற்றியது; நேரே கூறும்படி - என்றது ஐந்து புறக்கரணங்களுள் கண்ணின்றொழில்பற்றியது; அன்பால் இன்புறு குணமும் - என்றது குணமூன்றனுள் சத்துவச் சத்துவ குணத்தின் நிலைகுறித்தது. பெறவருநிலைகூட - இந்தநிலை "ஐந்து பேரறிவும்" (252) என்ற திருப்பாட்டில் உரைக்கப்பட்டது. ஆண்டுரைத்தவை பார்க்க. நினைவுற - நினைவு - நினைவினிற் பொருந்துதலாவது முன்சிந்தை முழுதும் திரு அம்பலமேயாகித் தியானத்தினால் எண்ணிறைந்து விளங்குதல். அவ்வாறே என்பதும் சொல்லெச்சம். நினைவுற நேரே கூடும்படி - என்றது சிந்தையுள் நிறைவாயினவாறே புறத்திலும் கண்ணுக்குப் புலனாக என்றதாம். "உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை யொழிவின்றி யுருவின்கண், அணையு மைம்பொறி யளவினு மெளிவரவருளினை" (திருஞான - புரா - 161) என்ற கருத்தைக் கருதுக. அன்பால் இன்புறு குணம் - அன்பின் நிறைவினால் முழுதும் இன்பமேயாகி விளையும் சத்துவகுணம். குணமும் - உம்மை நினைவிற் கண்டவாறு நேரே கூடுதலுடன் என்று இறந்தது தழுவிய எச்சவும்மை. குணமுன் என்பது படாமாயின், முன்னர்க் குணமூன்றும் திருந்து சாத்துவிகமேயாக, அதனால் கலக்கப்பட்ட சிந்தையின் வழியே புறக்காட்சி நிகழ்ந்தது என்று உரைத்துக் கொள்க. யோனிகள் - பலவகைப்பட்ட பிறவிகளில் வரும் உயிர்கள். அவைகள் தெளிவொன்றாமையாவது தேவர் முதலிய யாவரேயாயினும் உயிர்ப்போதத்தால் அறியவொண்ணாமை. "உலகெலா முணர்ந் தோதற்கரியவன்" என்ற கருத்து. தெளிவு ஒன்றா என்பதனைச் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமாக ஒன்றி என்று கொண்டு, உணர்வினுக்கு வெளிப்படடு விடயமாகிப் புரியும் நடம் என்று உரைப்பாருமுளர். அது பொருந்தாமையறிக. "நாரண னான்முகனுந், தேட வெடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம், ஆட வெடுத்திட்ட பாதம்" என்ற நாயனாரது இத்தலத் திருவிருத்தமுங் காண்க. ஆடுங்கழல் - எடுத்த பொற்பாதம். தூக்கிய திருவடி; அதுவே ஆடுவதாகலான். கழல்புரி அமுதத் திருநடம் - கழலினால் புரியும் என்க. அமுதம் - மரணம் போக்கிப் பிறவியும் இறவியு மில்லையாக்கி முத்தியின்ப மளிப்பது. "முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு" என்பது சாத்திரம் ஆராவகை தொழுதார்கின்ற வகையை மேல்வரும் பாட்டில் விரிக்கின்றார். ஆராவகை ஆர்தல் - என்பது முரண் அணி. ஆர்தல் - நிறைய உண்ணுதல். துய்த்தல். அமுத என்றதற்கேற்ப ஆர்கின்றார் என்றார். அவவாறு துய்த்த அனுபவம் நீடிக்கொண்டே நின்றது என்பார் நிகழ்காலத்தாற் கூறினார். நீடிந்திருவடி - என்பதும் பாடம். 166 |