1432. | கையுந் தலைமிசை புனையஞ் சலியன; கண்ணும் பொழிமழை யொழியாதே பெய்யுந் தகையன; கரணங் களுமுட னுருகும் பரிவின; பேறெய்து மெய்யுந் தலமிசை விழுமுன் பெழுதரு; மின்றாழ் சடையொடு நின்றாடும் ஐயன் றிருநட மெதிர்கும் பிடுமவ ரார்வம் பெருகுத லளவின்றால். |
167 (இ-ள்.) வெளிப்படை. கைகளும் தலையின்மேல் புனைந்த அஞ்சலியாகக் குவிந்தனவாயின; கண்களும் இடைவிடாது பொழிகின்ற மழைபோல நீரைப் பெய்யும் தன்மையுடையனவாயின; உட்கரணங்களும் உடன் உருகுகின்ற அன்பினை உடையனவாயின; பேறு பெறும் திருமேனியும் நிலத்தின்மேல் விழுமுன்னரே எழுகின்றதாகும்; மின்போலத் தாழ்ந்து விளங்கும் சடையுடன் நின்று ஆடுகின்ற ஐயரது திருநடனத்தைக் கும்பிடும் அவரது ஆர்வம் (இவ்வாறு) பெருகும் நிலை அளவிடக் கூடாததாயிற்று. (வி-ரை.) கை - கண் - சாதியொருமை - கைகள் அஞ்சலியன; கண்கள் அஞ்சலியன; பெய்யுந் தகையன; கரணங்கள் உருகும் பரிவின; மெய்யும் எழுதரும்; (இவ்வாறு) அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்று என்பது. ஆர்வம் பெருகிய நிலையினை மெய்ப்பாடுகளால் அறிவித்தபடி. அஞ்சலியன; தகையன; பரிவின; எழுதரும் என அவ்வத் தொழில்களை அந்தந்தக் கருவிகளின்மேல் ஏற்றிக் கூறினார்; வேறொன்றின் பிரேரணையும் முயற்சியுமின்றி அவையே அவ்வச் செயல்களை நிகழ்த்தியன போலக் காணப்பட்டன என்பது. poemntaneous எனபது நவீனர். அஞ்சலி - இருகையும் கூப்பிக் கும்பிடுதல். மழை - மழை போன்றதனை மழை என்றதுபசாரம். உடன் உருகும் பரிவு - மேற்கூறியபடி கைகளும் கண்களும் நிகழ்த்து மவற்றுக்குக் காரணமாய் முன்னே உட்கரணங்கள் உருகுதல் நிகழவுள்ளதாயினும், விரைவுபற்றி இரண்டும் உடன் - ஒருசேர - நிகழ்வனவாகக் காணப்பட்டன என்பதாம். பேறெய்தும் மெய் - பேறு - கீழ்வீழ்ந்து வணங்குதலால் உளதாம் பேறு. "பூக்கை" லட்டிப் போற்றியென் னாதவிவ், வாக்கை யாற்பய னென்?" என்ற திருவங்கமாலையினும், "வணங்காத் தலையும் பொறையாம், அல்லா வவயவந்தானு மனிதர்க் கசேதனமே" என்ற பொன்வண்ணத் தந்தாதியினும் (42) அருளப்பட்டபடி இவ்வாறு வீழ்ந்து வணங்கிப் பேறுபெறா தொழியும் மனிதர் உடம்புகளும் பல உள்ளன! "கோளில் பொறியிற் குணமிலவே....வணங்காத்தலை" - (குறள்). விழும் முன்பு எழுதரும் - வணங்கிக் கீழே விழும்; அவ்வணக்கம் முற்று முன்பு மீண்டும் விழுவதற்காக எழும். "வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண்பார்போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்" (திருஞான - புரா - 1022) என்ற கருத்துக் காண்க. மேல்வரும் பாட்டில் "இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ" என்ற கருத்தும் காண்க. ஆர்வம் பெருகுதல் - அளவின்றால் - அளவு கடந்து ஆர்வம் பெருகியதால் மேற் கூறியவாறுள்ள மெய்ப்பாடுகள் நிகழ்ந்தன. அளவு - எல்லை. நூல்களிற் குறித்த அளவு. ஒழியாமே - தரைமிசை - என்பனவும் பாடங்கள். 167 |