1433. | இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ "வென்றெய் தினை"யென மன்றாடும் அத்தன் றிருவருள் பொழியுங் கருணையி னருள்பெற் றிடவரு மானந்த மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையு மேன்மேலுஞ் சித்தம் பெருகிய பரிவா லின்புறு திருநே ரிசைமொழி பகர்கின்றார். |
168 வேறு 1434. | "பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்றுமுன் னெடுத்துப் பண்ணால் "அத்தா!வுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வா"றென் றித்திறம் போற்றி நின்றே யின்றமிழ் மாலை பாடிக் கைத்திருத் தொண்டு செய்யுங் காதலிற பணிநது போந்தார். | 1433.(இ-ள்.) வெளிப்படை. இந்தத் தன்யைமராகிப் பல முறையும் தொழுதெழுதலும், "என்றைக்கு வந்தனை?" என்ற குறிப்புடனே திரு அம்பலத்திலே நடமாடும் அத்தனாரது திருவருள் பொழிகின்ற கருணையினால் அருளைப் பெறும்படி வரும், ஆனந்தமாகிய உண்மைப் பாட்டினாலே, திருவிருத்தத் திருமொழியினைப் பாடிப் பின்னரும், மேன்மேலும் சித்தத்தினுள்ளே பெருகி வளரும் அன்பின் மிகுதியினால் இன்பமுறும் திருநேரிசைத் திருப்பதிகத்தை அருளிச் செய்வாராகி, 168 1434.(இ-ள்.) வெளிப்படை. "பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்று முன் தொடங்கிப் பண்ணினால், "அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு" என்று முடியும் ஈற்றினை யுடையதாகிய பாட்டு முதலாக இத்திறத்திற் போற்றி நின்றே இனிய தமிழ் மாலையைப் பாடிக் கைத் திருத்தொண்டு செய்யும் ஆசையினால் பணிந்து வெளிப்போந்தனர். 169 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1433.(வி-ரை.) "என்றெய்தினை என் - இது நாயனார் கண்ட அளவில் இறைவரது திருமுகக்குறிப்பு. தம்மிடம் வந்து அடைந்தவரை "என்று வந்தாய்! வருக" என்று இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டது உட்குறிப்பு" இஃது "நட்டம், என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே" என்ற தேவாரத்தாற் பெறப்பட்டது. இத்தகைய குறிப்பினை நாயனார் நடராசரது திரு முகத்தினுட் காணப்பெற்றனர். உலகிற்போந்து பலநாட் பிரிந்து பின் வெள்ளையானையின்மீது வந்து திருக்கயிலையை அடைந்த நம்பிகளை இறைவர் ஏற்றுக் கொண்டது பற்றி "தனிப்பெருந் தொண்டரை நேரிழை வலப்பாகத், தொன்று மேனியர் ஊரனே! வந்தவனை யென்றன ருலகுய்ய" (வெள் - சருக் - 42) என்று ஆசிரியர் எடுத்துக் கூறுதல் காண்க. இவ்வாறு மூர்த்திகளின் திருவுருவத்திற், காண்பவர் தகுதிக்கேற்ப இறைவர், குறிப்புக்களைத் தோன்றச் செய்குவர். அவற்றைக் காணும் தகுதியுடையவர்களாக நம்மை ஆக்கிக் கொண்டால் அவை விளங்கும். திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிடவரும் ஆனந்த மெய்த்தன்மை - திருவருள் என்றது எல்லா உயிர்த்தொகைகளும் உய்ய வேண்டுமென்று, வரையறையின்றிப் பெருகும் சிவபெருமானது இரக்கம். கருணை என்றது அஃது உயிர் |