"கருணையின்" எனவும், "வரும் ஆனந்த மெய்த்தன்மையினில்" எனவும், இத்திருவிருத்தம் பாடிய இக்குறிப்பை ஆசிரியர் விளக்குதல் காண்க. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கருநட்ட - கரியவிடம் நிலைநிற்கின்ற; செருநட்ட - பகைபூண்ட; தீமுழங்கத் திருநட்டமாடி என்பது ஊழிமுடிவில் ஆடும் அக்கினிதாண்டவம்; சிற்றம்பலத்துப் பெருநட்டமாடி - என்பது நித்தியமாகிய ஐந்தொழினடனம். சிறு - பெரு - முரண் அணி. ஆடி - பெயர்.- (2) ஒன்றியிருந்து நினைமின் - ஒன்றுதல் - உட்கரண புறக்கரணங்கள் முதலிய யாவும் ஒருமுகப்படுதல்; இருத்தல் - அதனின்றும் பிறழாதிருத்தல்; நினைதல் - அழுந்தி அறிதல். தியானித்தல்; ஏகானாகியிருந்து நினைத்தல் என்றலுமாம். காலனைக் கடிந்தான் (ஆதலால்) ஊனமில்லை என்று காரணங் காட்டியபடி; என்று வந்தாய்.....திருக்குறிப்பு - இறைவரது திருமுகக் குறிப்பு; இதனைப் பின்னரும் "கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்" (4) என்றது காண்க. -(3) பொன்மலை - பொன்னம்பலத்துக்கும், வெள்ளிக் குன்று - இறைவரது நீறுபூசி நிமிர்ந்த திருமேனிக்கும் பண்புவமம். ஒன்றிப் புக்கனன்....போந்த சுவடில்லை - மனத்தினுள் வந்து புகுந்தனன்; எவ்வாறு புகுந்தனன் என்ற சுவடு ஒன்றும் காண முடியவில்லை. எனை அறியாமே புக்கனன். -(4) இறைவனுடைய திருவுருவிற் காண உள்ளவற்றைக் காட்டுகின்றது. அவை - புருவம் - சிரிப்பு - சடை - மேனி - நீறு - பாதம் என்பன. குனித்தல் - வளைத்தல். குமிண்சிரிப்பு - இதழ்கள் குவிந்து கூடிய புன்சிரிப்பு. "சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே" என்று இதனையே கூறியதும் காண்க. பனித்த - ஈரமுள்ள - நனைந்த. "ஈர வார்சடை தன்மேல்" (பிள்ளையார் தேவாரம்). பவளம் போல் மேனி - நிறம் பற்றி வந்த பண்புவமம். பால் வெண்ணீறு - பால் போன்ற வெண்மை என்க. இனித்தம் - எஞ்ஞான்றும் இனிதாந்தன்மை. காணப்பெற்றால் - காண்பதன் அருமை குறித்தது. மனித்தப் பிறவியும் - பெரியோரால் வேண்டப்படாத பிறவியும் என்று உம்மை இழிவு சிறப்பு. எதுகை நோக்கி மனித்த என வந்தது. "கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவி" (253), "ஊனடைந்த உடம்பின் பிறவி" (2) முதலியவை காண்க.-(5) வாய்த்தது.....ஓர் பிறவி - முன் பாட்டின் கருத்தையே தொடர்ந்து கூறியது. கூழைமை - கடமை.- (6) கோல்வளைக்கே - தாய் மகிழ்ந்து கூறிய மொழியாகிய அகப்பொருட்டுறை.- (7) குரைகழலே - மத்தமும் - நோக்கும் முறுவலிப்பும் - கையும் - நீறும் - பாகமும் - தோலும் என்றிந்த வண்ணமாக என் நெஞ்சிற் குடிகொண்ட ஆறு! நெஞ்சிலும் - என இழிவு சிறப்பும்மை தொக்கது.- (8) படைக்கலம் - பிறவிப் பகையை எறியும் படை. இடைக்கலம் - அல்லேன் - புது அடிமை யல்லேன். எழுபிறப்பு - எழுவகைப் பிறப்பிலும்.- (9) ஆடல் கண்டு (அதனால்) இருநிலம் இன்புற்றது - கண்ட வழியே இன்பம்; அல்லாதவழித் துன்பம் என்பது.- (10) எடுத்தது - எடுத்ததாகி. முற்றெச்சம். எடுத்திட்ட என்றதனோடு கூட்டி முடிக்க. இப்பதிக முழுமையும் இறைவனது அருட்கூத்தில் அழுந்தித் திளைத்து எழுந்த கருத்துக்களாதல் காண்க. கூத்தனை வானவர் கோனென்று வாழ்த்துவன்; கண்டாரை "என்று வந்தா"யென்ற குறிப்பினுடன் ஆடுகின்றார்; என் மனத்துள் என்னையறியாமே புகுந்து கொண்டனர்; அவரைக் காண்பதே மனிதப் பிறவியின் உறுதி; அவருக்காட்படுவது கடமை; அவர்போல எனது உயிரை ஆளும் நாயகரும் உளரோ? அவர் திருவடிவம் என் பாவிநெஞ்சிலும் குடிகொண்டதே!; நான் அவரது அடைக்கலம்; என்போலவே உலகமெல்லாம் கண்டின்புறுகின்றது; அவர் |