தெழுந்த செம்பொன்னையும் நவமணிகளையும் நாயனார் உழவாரத்தினில் ஏந்தி வாவியிற்புக எறியும் நிகழ்ச்சியையும் இங்கு நினைவுகூர்க. இந்த மணிகள் கோயிலின் திருமதிலிலும் கோபுரம் நாசி முதலியவற்றிலும் விளங்குபவை என்றும், தரிசிக்கவரும் தேவர் முதலியோர் அணிகலன்களில் விளங்குவன என்றும் உரைத்தலுமாம். ஆடுயர் கொடிசூழ் வீதி - தேர்வீதி - அணிவீதி - திருவீதி - என்று தனித்தனி கூட்டுக. வெண்கொடிகள் சூழ்தல் வீதிகளுக்கு அழகு தருதலுடன் சிறப்பும் தருவது. "விதானமும் வெண்கொடியு மில்லாவூரும்" "மாடந்தோறும்....சோதி வெண்கொடிகளாடும் சுடர்நெடுமறுகு" (474) முதலியவை காண்க. தேர்வீதி - அம்பலவாணரின் தேர் செல்லும் நான்கு திருவீதிகள். "தேரு லாவிய தில்லையுள்" (தேவா), "தேரார் வீதியிற் றேவர் குழாங்கள்" (திருவிசைப்பா) முதலியவை காண்க. திருவீதி - முத்தித் திருவைக் கூட்டுவிக்கும் வீதி; "மாதவங்ணல்கும்", "பொய்ப்பிறவிப் பிணியோட்டும்" என்பன காண்க. அணி - நேர்மை - பெருமை - அழகு - அலங்காரம். மாடும் - உள்ளும் - என்ற பொருள் கருதுக. முன்றிலின் பக்கங்களே கைத்தொண்டால் விளக்கவும், திருவீதி முழுதும் பணிசெய்யவும் உள்ளன என்பதாம். வீதிகளை அலகிடுதல் பற்றி 1428-ல் உரைத்தவை பார்க்க. கூடிய பணிகள் தம்மாலியன்றன எல்லாம் என்றும் வேணடிய பணிகள் எல்லாம் என்றும் கொள்க. பணிகள் - உழவாரப் பணிகளாகிய கைத்திருத்தொண்டு. கும்பிடுதல் - மனத்தினாலும் வாக்கினாலும் பணிசெய்தலும் குடும்பிடுதலின் பாற்படும். பாடிய - முன்னரே பாடிப் பயின்ற, இறைவனையே பாடிய என்றலுமாம். பயில - நிரம்ப. பிறரும் பயின்று பேறடைய என்ற குறிப்புமாம். செய்வார் - குறுந்தொகைகள் பாடித் - திருத்தொண்டு செய்து - வண்டலாடப் (1436) - பணிசெய்து விளங்கு நாள் - சென்று - பாடிச் - சென்று - நண்ணினார் (1437) என மேல்வரும் இரண்டு பாட்டுக்களுடன் கூட்டி முடித்துக்கொள்க. கூடிய பணிகளும் வாக்கின் பணிகளும் செய்த வகையினை மேல் வரும் பாட்டில் விரிக்கின்றதனால் செய்வார் என்றார். செய்து - செய்வார் - என்ற வினையெச்சங்கள், பாடி - செய்து என்று எதிர் நிரனிறையாக மேல்வரும் பாட்டின் வினையெச்சங்களுடன் முடிந்தன. பணிகளும் - என்ற உம்மை திருவீதிப் பணிசெய்து கும்பிடும் தொழிலுடன் என்று இறந்தது தழுவிய எச்சவும்மை. நிறைதருமுன்றில் - மாடுயர் - மாமணி வீதி - என்பனவும் பாடங்கள். 170 1436.(வி-ரை.) அருட்பெரு மகிழ்ச்சி - அருளைப் பெற்றேன் என்ற ஆர்வத்தால் மிக்கெழுகின்ற மகிழ்ச்சி. இஃது "இன்னம் பாலிக்குமோ? இப்பிறவியே" என்ற திருக்குறுந்தொகைக் குறிப்பினாற் பெறப்பட்டது. பதிகக் குறிப்புப் பார்க்க. பொங்கப் - பாடி என்று கூட்டுக. "அன்னம் பாலிக்கும்" என்னும் - இஃது அத்திருப்பதிகத்தின் தொடக்கம். முதற் குறிப்பு என்பர். பொங்கப் - பாலிக்கும் என்று தொடர்ந்து கூட்டி அருளால் வரும் மகிழ்ச்சி பொங்கும்படி அன்னத்தை வழங்கும் என்று உரைத்து, ("உண்டன மலமாம்" [11 - திருமுறை - கோயினான் - 28] என்றபடி மலமாய்க் கழியும் ஏனை அன்னம் போலல்லாது) தில்லையில் இறைவர் வழங்கும் அன்னம், அருளைப் பெறுவித்து மலத்தை நீக்கிச் சிவனது ஆனந்தத்தை விளைக்கும் என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும். திருக்குறுந்தொகைகள் - குறுந்தொகை என்பது யாப்பின் வகை; தாண்டகம் - திருவிருத்தம் என்பனபோல. பதிகத்தினுள் ஒவ்வொரு திருப்பாட்டும் |