குறுந்தொகைப் பாட்டானதால் பன்மையாற் கூறினார். தில்லைக்கு நாயனார் பாடியனவாகிய குறுந்தொகைப் பதிகங்களுள் நமக்குக் கிடைத்துள்ளன இரண்டேயாம். அவற்றுள் இப்பதிகம் முதலிற் பாடி யருளப்பட்டது. பின்னர்ப் பாடியதனை 1439-ல் குறித்தல் காண்க. ஆதலின் இங்குப் பன்மை பாட்டுக்களைக் குறித்தது என்க. திருவுழவாரம் - இங்குத் திரு என்றது "கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்" என்ற அழகு. இது இப்பொருளில் வருதல் "திருவளர் தாமரை" என்ற திருக்கோவையாருக்குப் பேராசிரியர் உரைத்த உரையா லறிக. "அஃதென் சொல்லியவாறோ? வெனின், யாவனொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருண்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன்மே லவற்கு விருப்பஞ் சேறல் அதனிற் சிறந்த வுருவும் நலனும் ஒளியுமெவ்வகையானும் பிறிதொன்றற்கில்லாமையால் திருவென்றது அழகுக்கே பெயராயிற்று.....கோயிலைத் திருக்கோயிலென்றும், கோயில் வாயிலைத் திருவாயிலென்றும், அலகைத் திருவலகென்றும் பாதுகையைத் திருவடி நிலையென்றும் வழங்கும் இத்தொடக்கத்தன வெல்லாம் ... கண்டவனுடைய விருப்பத்தானேயெழுந்தது ..." என்று அவர் கண்டவுரை இங்கு மிகப்பொருந்துவது காண்க. நாயனாரது திருக்கையில் ஏந்தியதும் அவர் திருப்பணிசெய்ய உதவியதுமாகிய உழவாரம் அடியார்களது விருப்பங்களையெல்லாம் கவரும் தன்மையுடன் விளங்கும் அழகுடையது என்பதனை ஆசிரியர் காட்டியவாறு. அஃது ஆசிரியரது திருவுள்ளத்தை முதலிற் கொள்ளை கொண்டது என்க. பெருத்தெழு காதலோடும் பெருந் திருத் தொண்டு - செய்து - திருப்பதிகம் பாடித் திளைத்தலினும் இத்திருத் தொண்டினில் நாயனார்க்கு மிக்க காதல் எழுந்ததென்றும், இதனையே அதனினும் பெரிய தொண்டாக நாயனார் கருதினர் என்றும் அறிவிக்க இவ்வாறு கூறினார். பாடி என்றதன்பின் இதனை வைத்து முன்பாட்டில் பணிகள் செய்து வாக்கின்பணிகளும் என்று கூறிய முறையை மாற்றிய வைப்புமுறையும் இக்கருத்துப் பற்றியது. முன்னர்ப் பணிகளும் என்ற உம்மையின் தொனிக் குறிப்பும் இது. விருப்பு உறும்மேனி - விருப்பு - திருப்பணி செய்து தலைமுதல் கால்வரை உள்ள அங்கங்களை யெல்லாம் இறைவனது பணிக்குப் பயன்படுத்தும் விருப்பு. திருவங்கமாலைப் பதிகக் கருத்துக் காண்க. கண்ணீர் வெண்ணீற்று வண்டல் ஆட என்றது திருமேனியில் "தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியும்" (1405) என்றபடி நாயனார் திருவெண்ணீற்றை நிறைய அணிந்திருந்தனர்; "மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும்" (1490) என்னும்படி அருட்கண்ணீர் இடையறாது பெருக்கெடுத்து மார்பிலே வழிகின்றது; அதனால் திருநீறு நனைந்து வண்டல்போல ஆக என்க. வண்டல் - சேற்று நீர். வண்டல் - மகளிர் விளையாட்டு என்று கூறினர் முன் உரைகாரர். அது பொருந்தாமையறிக. 171 திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை- கோயில் |
| அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம், பொன்னம் பாலிக்கு, மேலுமிப் பூமிசை யென்னம் பாலிக்கு மாறுகண் டின்புற, வின்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.. |
1 | மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன், சதுரன் சிற்றம் பலவன் றிருமலை யதிர வார்த்தெடுத் தான்முடி பத்திற, மிதிகொள் சேவடி சென்றடைந்துய்ம்மினே |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- அருள்பெற்ற மகிழ்ச்சியிற் றிளைத்தது. தில்லைச்சிற்றம்பலம் அன்னமும், பொன்னும், இன்னும் எதுவும் பாலிக்கும்; இப்பிறவியில் |