வேறெது வேண்டும்? இதனைச் சென்றடைந்துய்மின்! இதனை அடைந்து அடிமை பூண்ட என்னை அல்லலும் அருவினையும் தொல்வல்லினை தானும் என் செய்யும்? சிறுகாலன் தில்லையை அணுகிய சிட்டர்பால் அணுகான்; சிற்றம்பலவனார் அடியாரை யறிவர்; என் நெஞ்சினுள் அம்பலவன் பாதம் இருக்க, அதனை அயனு மரியும் தேடியும் திரிந்தும் காண வல்லரோ? பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) பாலிக்கும் - கொடுக்கும். -(2) அரும்பு அற்றப்பட - அரும்பு மலரும் பருவத்தில். -(3) அரிச்சுற்றவினை - அரிக்கின்ற - வருத்துகின்ற - சுற்றமாகச் சூழ்ந்தவினை. எரி(யாற்) சுற்றப்பட - வேவ. சிரிச்சுற்று - சிரிக்கலுற்று. -(4) தொல்லை வல்வினை - பழய சஞ்சித வினை. -(5) ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது - உடலில் உயிருள்ளளவும். -(6) சிட்டர் - நலமிக்கவர். -(9) வில்லை வட்டப்பட வாங்கி - வல்வினை வளைத்து; வாங்குதல் - வளைத்தல். எல்லை வட்டம் - தூர எல்லை. -(10) பாதம் என் நெஞ்சுள் இருக்க - "சிக்னெப் பிடித்தேன் எங்கெழந் தருந் தருளுவ தினியே" என்றபடி இறுகப் பிணித்து வைத்து. அடியார்க்குள்ள இறுமாப்பு. (10) மிதி கொள் சேவடி - மிதித்தமையால் தண்டனையும், கொள்ளுதலால் அருளும் செய்த திருவடி. கொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல். பாடல் கேட்டு இரங்கி நாளும் வாளும் கொடுத்தல். மிதிசேவடி - கொள்சேவடி என்க. "அன்னம் பாலிக்கும்" என்ற நாயனாரது மெய்த்திருவாக்கின் பயனாக இன்றளவும் தில்லைக்கூத்தன் திருமுன்பு அடைந்தார்க்கெலாம் அன்னம்பாலிக்கப்பட்டு சோற்றுச் சிறப்பு வளர்ந்தோங்கி வருதல் கண்கூடு. அன்றியும், திருவம்பல முடையாருக்கு நாளும் நிகழும் ஆறுகாலப் பூசையிலும் அன்னாபிடேக வழிபாடும், நாளும் பல திருப்பாவாடை நிவேதனங்களும் இத்தலத்துக்கேயுரிய சிறப்புக்களாம். கோயில் உறுப்புக்களுள் அன்னமய கோசமும் ஒன்றாகும் தத்துவமும் குறிக்கொள்க. இச்சிறப்புப் பற்றியே இத்திருப்பதிகத்தை மாகேசுவர பூஜையில் தேவார மோதும்போது நியதியாய் ஓதும் மரபு கையாளப்பட்டு வருகின்றது. இப்பதிக முழுதும் மனப்பாடம்செய்து பாராயணம் செய்தற்குரிய அருமைப்பாடுடையது. 1437. (வி-ரை.) மேவிய - தமது திருவுள்ளத்துப் பொருந்திய. சே உயர் கொடியார் - "சேவுயருந்திண் கொடியான்" - ஆளுடையபிள்ளையார். சே - இடபம். உயர் சேக் கொடியார் - என்க. இடபக்கொடியை உயர்த்தியவர். உயர்ந்த சேக் கொடியை உடையவர் என்றலுமாம். சே - பசுவகை எனக்கொண்டு பசுக்களைப் பாசப்பகை நீக்கி உயர்த்தும் கொடி என்றலுமொன்று. "சாலவும், ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி யேர்காட்டுங், கோதிலா ஏறாங்கொடி" (தசாங்கம் - 10) என்ற திருவாசகமும், "சுமைதுன்ப நீக்குந் துவசன்" (நெஞ்சுவிடுதூது - 74) என்ற ஞானசாத்திரமும் காண்க. முன் சென்று வணங்கி - என்க. வேட்களத்துச் சென்று - கொடியார் - முன் வணங்கி என்றுகூட்டி உரைத்தலுமாம். பாடி - குறுந்தொகைத் திருப்பதிகம் அருளிச்செய்து. காவியங் கண்டர் - காவி - நீலமலர். அதன் நிறத்துக்கு வந்தது. பண்புவமம். திருக்கழிப்பாலை தன்னில் சென்று நாவினுக்கரசர் மண்ணோர் வாழ நண்ணினார் என்க. மண்ணோர் வாழ்வடைதலாவது அவரைப பின்பற்றி அடைந்து துதித்துய்தல். திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை- திருவேட்களம் |
| நன்று நாடொறு நம்வினை போயறும்; என்று மின்பந் தழைக்க விருக்கலாம்; சென்றுநீர்திருவேட்களத்துள்ளுறை, துன்றுபொற்சடையானைத்தொழுமினே. |
திருச்சிற்றம்பலம் |