பக்கம் எண் :


242திருத்தொண்டர் புராணம்

 

பதிகக் குறிப்பு :- நாடொறும் நம்வினை போயறும்; இடரில்லை; அல்லலில்லை; அருவினையில்லை; துன்பமில்லை; இனித் துயரில்லை; வினையாயினபாறும்; ஆதலின் வேட்களங் கைதொழுது இட்டமாகி யிரு நெங்சே; அடிபோற்றினால் கறைமிடற்றர் நம்மைக் காப்பர்; சூழ்ந்தவர் குட்ட வல்வினையுந் தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர்; நினைமின்; சேர்மின்; என்றும் இன்பம் தழைக்க விருக்கலாம். "சேவுயர் கொடியார்" என்று ஆசிரியர் காட்டிய குறிப்பும் இது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (3) ஆக்களேறுவர் - பசுபதி; ஏறுதல் - பசுக்களுக்குள் இருந்து நல்வழி காட்டி ஏற்றுதல். -(6) பொட்ட - விரைவாக. -(7) எட்டு ஒன்று மிரண்டு மூன்று ஆயினார். எட்டு - அட்ட மூர்த்தம். ஒன்று - பதிப்பொருளாகிய ஒன்று. "ஒன்றென்ற தொன்றே காண் ஒன்றே பதி" (சாத்திரம்). இரண்டு - சிவம் சத்தி; "இருமையினொருமையு" (திருஎழுகூற்றிருக்கை). மூன்று படைப்பாதி முத்தொழிற் றலைவர். -(9) சுட்ட கொள்கையராயினும் - குளிர்விக்கும் - முரண் அணி. -(10) ஊன்றிட வாங்கிய - ஊன்றுதலும் பின்னர் வாங்குதலும் செய்தவர். வாங்குதல் - எடுத்தல்.

தலவிசேடம் :- திருவேட்களம் என்பது தில்லைக்குக் கிழக்கே (புகைவண்டி நிலையத்திலிருந்து) ஒரு நாழிகை யளவில் அடையத்தக்கது. அருச்சனருக்குப் பாசுபதம் கொடுத்த தலமென்று கருதப்படுகின்றது. சுவாமி பெயர் பாசுபதேசுவரர் என்பதனாலும், இத்தலத்தில் அருச்சுனன் றிருவுருவமும், பாசுபதமேந்திய சுவாமி திருவுருவமும் வைத்து வணங்கப்படுவதனாலும், நாயனாரது திருக்குறுந்தொகையுள் வேடனார் என்ற குறிப்பினாலும் இக்கருத்து வலியுறுகின்றது. இத்தலத்தில் ஆண்டுதோறும் வைகாசித் திங்கள் முழு மதிவிசாக நாளில் இறைவனார் வேடனாக அருச்சுனனுடன் பொருது பாசுபதப்படை நல்கும் விழாவும் நடைபெறுகின்றது. இத்தலப் பெயரை திருப்போர்க்களம் எனவும் வழங்குவர். இது மூங்கில் வனம் எனவும் பெயர் பெறும். அம்பிகை - நல்ல நாயகி. பதிகம் 2. களம் - குளம் - கா - தனி - குடி - துறை என்பனபோல இருப்பிடம் என்ற பொருள் தருவது. சிவதருமங்கள் பலவும் செய்துவரும் "செட்டிநாட்" டரசர் - திரு - இராசா - சர் - அண்ணாமலை செட்டியாரவர்களால் தாபிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்ற கலைக்கூடம் இத்தலத்தைச் சுற்றி இற்றை ஞான்று செழித்து வளர்ந்து நாடெங்கும் கலைஞானங்களை வளர்க்கும நிலையமாக விளங்குகின்றது. இது அண்ணாமலை நகரம் என்ற பெயரால் இப்போது பெரு மாட மாளிகைகளுடன் பெருநகரமாகத் திகழ்கின்றது. கோயில் திருப்பணிகள் செய்யப்பெற்று அணிபெற விளங்குவது. இவ்வாறு கலைஞானங்களுக்கு நிலைக்களனாக இஃது இடம்பெறுவதன் காரணம் எமது ஞானப் பெருமக்களாகிய ஆளுடைய பிள்ளையாரும் திருநாவுக்கரசரும் ஈண்டு வதிந்தருளிய மாண்பேயாகும் என்க,

வேறு

1438.

 சினவிடையே றுகைத்தேறு மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
"வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே! யென்கின் றா"ளென்
 றனையதி ருப் பதிகமுட னன்புறுவண் டமிழ்பாடி, யங்கு வைகி,
 நினைவயயார் தமைப்போற்றி நீடுதிருப் புலியூரை நினைந்து மீள்வார்,

173