சரிதஞ் சொல்லப்புகுகின்றார். பின்னர்ச் "செய்யமா மணியொளிசூழ்" (1489), என்றும், "சித்த நிலாவுந் தென்றிரு வாரூர்" (1500) என்றும் சரிதங் கூறப்புகும் யாப்பு வகைகளும், இவ்வாறு முன் வந்தனவும், பின் வருவனவும் காண்க. பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) வன பவள வாய் - அழகிய பவளம்போன்ற வாய். வாய் திறந்து - மனத்தினுள் வைக்கலாற்றாமையின் வாய்திறந்தும் கூறுகின்றாள் "இலவவிதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்தாற்றா மையின்வறிதேயின்ன சொன்னாள்" (320) என்ற தன்மை காண்க. உந்து ஆனவன் - மேலானவன், இடுக்கண்செய்யும் பகைவன் என்ற குறிப்புமாம். -(3) பிறந்திளைய திங்கள் - மூன்றாம் பிறை. -(4) பெரும்பாலன் - மிக்க இளைமை காட்டுபவன். -(5) பெரும் தடம் கண் இரண்டல்ல மூன்றுளவே - கண்களைக் கூறியது அக்கண்ணினோக்கத்துட்பட்டு அலைந்த குறிப்பு. விழிஉலாம் என்ற குறிப்புமது. கண் மூன்று என்றது விரகத்துட்படுவோர், நெற்றிக்கண்ணாற் காமனை முனியும் கருத்தன் என்றுட்கொள்ளும் குறிப்பு. -(7) மின்னிடுதல் - ஒளிவிட்டு விளங்குதல். -(8) ஒரோதம் - வேதம். பிரணவம். தலவிசேடம் :- திருக்கழிப்பாலை. இத்தலம் முன்னர்க் கொள்ளிடத்தின் வடகரையில் காரைமேடு என்னும் இடத்தில் இருந்தது; அக்கோயிலை ஆறு கொண்டு போய்ப் பழுதுபட்டுவிட்டபடியால், இப்போது திருநெல்வாயில் என்னும் சிவபுரியில் தனிக் கோயிலாக அமைத்துத் தாபிக்கப்பட்டுள்ளது. வன்மீக மாமுனிவர் பூசித்த தலமென்ப. சுவாமி - பால்வண்ணநாதர். வெண்மையான அழகிய திருமேனி. அம்மையார் - தேவநாயகி. பதிகங்கள் 8. இது சிதம்பரம் புகைவண்டி நிலயத்தினின்றும் தென்கிழக்கில் ஒன்றரை நாழிகையளவில் உள்ள சிவபுரித் தலத்திற்குத் தெற்கே கால்நாழிகையில் அடையத்தக்கது. இத்தலத்தைத் திருப்பணிகள் செய்து நிரந்தரமாகப் பூசை நிபந்தங்களும் அதை்தவர் பெருநிலக்கிழவரும் பெருஞ் சிவபுண்ணிய சீலருமாகிய திருக்கழிப்பாலை பழனியப்ப முதலியார் ஆவர். இப்பெருந்தகையாரால் சிதம்பரத்தில் முதன்மையாகத் தாபிக்கப்பட்டு நடைபெற்று வரும் தேவாரப் பாடசாலை ஏனைத் தேவாரப் பாடசாலைகளுக்கெல்லாம் வழிகாட்டிய உயர்ந்த தாபனமாகும். இப்புண்ணியர் சேக்கிழார் பெருமானிடம் மிக்க அன்பு வாய்ந்தவர். அவரது பூதவுடல் இப்போதைக்குப் பல ஆண்டுகளின் முன் மறைந்ததாயினும் புகழுடம்பாகிய சிவபுண்ணியச் சீலவுடல் அழிவில்லாது என்றும நிலைபெற்றுள்ளது. அன்புறு வண் தமிழ் - பிறபதிகங்கள். இவற்றுள் நமக்குக் கிடைத்துள்ளவை நான்கு. அவை : -I "வண்ணமும் வடிவும்" என்ற திருக்குறுந்தொகையும் II "கங்கையைப் பாகம் வைத்தார்" என்ற திருநேரிசையும், III "நெய்தற் குருகு" என்ற திருவிருத்தமும், IV "ஊனுடுத்தி" என்ற திருத்தாண்டகமுமாம். இப்பதிகக் குறிப்புக்கள் எல்லாம் முன்னர் உரைக்கப்பட்டன. I திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்; எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலன்; கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம், மண்ண லேயறி வானிவ டன்மையே. |
1 பதிகப் பாட்டுக் குறிப்பு :- (2) பரிந்து உரைக்கிலும் என்சொல் பழிக்குமே - செவிலி கூற்று; தாய் கூற்றெனினுமாம். "மாதி யன்று மனைக்கிரு வென்றக் கால், நீதி தான்சொல நீயெனக் காரெனும்; சோதி யார்தரு தோணி புரவர்க் |