மருங்கு - மருங்கினின்றும். ஐந்தனுருபு தொக்கது. ஞாழல் - புன்னை. நெய்தனிலக் கருப்பொருள். நினைப்பவர்தம் ... உய்வனோ? என - தேவாரப் பதிகத்தின் கருத்தும் கறிப்புமாம். தேவார முதற்பாசுரச் சொல்லும் பொருளும் தழுவி விரிவுரை செய்தவாறு . பதிகக்குறிப்பும் பாட்டுக்குறிப்பும் பார்க்க. நினைப்பவர்தம் மனம் கோயில்கொண்டு அருளும் - எல்லா இடத்திலும் இருப்பவராயினும் இறைவர் அன்பால் நினைவாரது உள்ளத்தில் விரும்பி வெளிப்பட வீற்றிருந்து அருள் செய்பவர்; மற்றிடங்களில் அப்பிரகாசமாய் விளங்காது நிற்பர். மனம் கோயில்கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனார் - அம்பலத்தினும் பார்க்க மனத்தையே கோயிலாக் கொள்பவர் என்பது குறிப்பு. கோயில் - இத்தலமுங் குறித்தல் காண்க. தினைத்தனை - ஆம் பொழுது - சிறிது நேரமும். தினை - சிறிய அளவு குறித்து நின்றது. "தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே" திருவாசகம். "தினைத்துணை நன்றிசெயினும்" என்ற குறளுக்குத் "தினை - பனை - என்பன சிறுமைபெருமைகட்குக் காட்டுவனசிலவளவை" என்றுரை கூறினர் பரிமேலழகர். பொழுதும் - உம்மை இழிவு சிறப்பு. பிரியாமையினது சிறப்பையுணர்த்தலின் உயர்வு சிறப்பென்றலுமாம். உய்வனோ? - ஓகார வினா எதிர்மறை. பாடித் தில்லை சார்ந்தார் - இப்பதிகம் திருக்கழிப்பாலை மருங்கு நீங்கித் தில்லை வரும் வழியில் அருளிச்செய்யப்பட்டது. இது "கூத்தனை மறந்து உய்வனோ2 என்றதனாற் பெறப்படுதல் காண்க. "எந்தையா ரிணையடி யென்மனத் துள்ளவே", "முதுகுன்றடை வோமே", "அவனதா ரூர்தொழுது", "ஆரூரானை மறக்கலுமாமே" என்ற பதிகங்கள் அவ்வத் தலங்களின் புறத்திருந்து பாடப்பட்ட வரலாறு பதிகப் பகுதிகளானே விளக்கமுறுதல் இங்குக் கருதத்தக்கது. மனக்கோயில் - என்பதும் பாடம். 174 திருச்சிற்றம்பலம் திருக்குறுந்தொகை - கோயில் | பனைக்கை மும்மத வேழ முரித்தவன்; நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்; அனைத்தும் வேடமா மம்பலக் கூத்தனைத், தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ? |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- முன்னர் ஆசிரியர் காட்டியவாறு காண்க. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பனைக்கை - பனைபோன்று அடி பெருத்து நுனி சிறுத்து வருதல். மெய்யுவமம். அனைத்தும் வேடமாம் - உலகமெல்லாம் தனது திருமேனியாகக் கொண்டவன். -(2) தீர்த்தன் - தூய்மையுடையவன் -தூய்மைசெய்பவன். "ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடுந் தீர்த்தன்" (திருவாசகம்). -(3) எள்தனைப் பொழுது - எள் அளவுள்ள சிறுபொழுது. "தினைத்தனை" என்பதுபோல. -(4) மாணி - பிரமசாரி - சண்டீசர். நீணுலகெலாம் - நீள் உலகெலாம் - நள்ளனல் என்றது நண்ணனல் என மரீஇயினாற்போல நீளுலகு என்பது நீணுலகென மரீ இயிற்று. (சிவஞானபோதம் - 10 சூத். 2 அதி. உதா.) ஆணி - பொன் உரையாணி. -(6) ஓதி - பெயர். -(7) பைகொள் - நச்சுபபையையுடைய. செய்ய மாது - இலக்குமி. -(8) தேவர்கள் முதலில் அம்பலம் பொன்வேய்ந்தனர் என்பது வரலாறு. -(9) காருலாம் - கார்காலத்தில் பூக்கும். தேருலாவிய - கூத்தப்பெருமான் தேர்மீது திருவீதியில் எழுந்தருளும். ஆர்கிலா - உண்ணத் தெவிட்டாத. |