பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்249

 

1440.

"அரியானை" யென்றெடுத்தே யடியவருக் கெளியானை யவர்தஞ் சிந்தை
 பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந் தமிழ்பாடிப் பிறங்கு சோதி
 விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன் னம்பலத்து மேவி யாடல்
 புரியா நின்றவர் தம்மைப்பணிந்துதமி ழாற்பின்னும் பாடல்செய்வார்,


1441.

"செஞ்சடைக்கற்றைமுற்றத் திளநிலாவெறிக்கு" மெனுஞ்சிறந்த வாய்மை
 யஞ்சொல் வளத்தமிழ் மாலையதிசயமாம் படிபாடியன்புசூழ்ந்த
 நெஞ்சுருகப் பொழிபுனல்வார் கண்ணிணையும் பரவியசொன் னிறைந்தவாயுந்
 தஞ்செயலி னொழியாத திருப்பணியு மாறாது சாரு நாளில்,


1442.

கடையுகத்தி லாழியின்மேன் மிதந்ததிருக் கழுமலத்தினிருந்த செங்கண்
விடையுகைத்தார் திருவருளால் வெற்பரையன் பாவைதிரு முலைப்பா லோடும்
அடையநிறை சிவம்பெருக வளர்ஞானங் குழைத்தூட்ட வமுது செய்த
வுடையமறைப் பிள்ளையார் திருவார்த்தை யடியார்க ளுரைப்பக் கேட்டார்.

177

1440. (இ-ள்.) "அரியானை" என்று ... தமிழ்பாடி - அரியானை என்று தொடங்கி, அடியவர்களுக்கு எளியவராகிய சிவபெருமானை, அந்த அடியவர் மனத்தினின்றும் பிரியாத பெரிய திருத்தாண்டகமாகிய செந்தமிழ்ப் பதிகத்தைப்பாடி; பிறங்குசோதி விரியாநின்று எவ்வுலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் புரியா நின்றவர் தம்மை - விளங்கும் ஒளி விரிகின்றமையாலே எல்லாவுலகங்களிலும் நிறைந்து விளங்கிய பொன்னம்பலத்திலே பொருந்தி அருட்கூத்தாடுகின்ற பெருமானை; பணிந்து ... செய்வார் - வணங்கித் தமிழ்ப் பதிகத்தால் மேலும் போற்றுவாராய்.

175

1441. (இ-ள்.) செஞ்சடை ... பாடி - "செஞ்சடைக்கற்றை முற்றத் திளநிலா எறிக்கும" என்று தொடங்கும் சிறப்புடைய வாய்மையாகிய அழகிய சொற்களாலான வளமுடைய தமிழ்ப் பதிகத்தினை அதிசயமாம்படி பாடி; அன்பு சூழ்ந்த நெஞ்சுருக - அன்பினால் சூழ்ந்துகொள்ளப்பட்ட மனம் கரைந்துருக (அதனாலே); வார் புனல் பொழி கண்ணினையும் - வார்ந்த மழைபோன்ற நீர்பொழிகின்ற இரண்டு திருக்கண்களும்; பரவியசொல் நிறைந்த வாயும் - சிவபெருமானைத் துதிக்கின்ற பதிகச்சொல் நிறைந்த திருவாயும்; தம் செயலின் ஒழியாத திருப்பணியும் - தமது செய்கையில் நீங்காத திருவுழவாரத் திருப்பணியும்; மாறாது சாரும் நாளில் - மாறாமல் இவ்வாறு சிவச்சார்பினிற்கும் நாட்களில்;

176

1442. (இ-ள்.) கடையுகத்தில் ... திருவருளால் - உகக் கடைநாளில் பொங்கி எழும் கடல் வெள்ளத்தில் மேலே மிதந்த திருக்கழுமலத்தில் எழுந்தருளியிருந்த செங்கண் விடையினை ஊர்தியாக உடைய தோணியப்பருடைய திருவருளினாலே; வெற்பு அரையன் பாவை - திருமலையரசன் மகளாராகிய பெரிய நாயகியார்; திருமுலைப்பாலோடும் அடைய நிறை சிவம்பெருக வளர்ஞானம் குழைத்து ஊட்ட - அடைய நிறைகின்ற சிவம் பெருகும்படி வளரும் ஞானத்தைத் தமது திருமுலைப்பாலுடனே குழைத்து ஊட்ட; அமுது செய்த உடைய மறைப் பிள்ளையார் திருவார்த்தை- உண்டருளிய ஆளுடைய மறைப்பிள்ளையாரது திருவரலாற்றினை; அடியார்கள் உரைப்பக் கேட்டார் - அடியார்கள் சொல்லக் கேட்டருளினார்.

177

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.