பெருந்தகை என்ற கருத்துமது. பெருந்தகை - தமக்கென வேண்டப்படுவது ஒள்றுமின்றி உலகஞ் சைவத்திற் செழிக்கும் பொருட்டே அவதாரமாயின பெருமை குறித்தது. வல்ல - பெருந்தகை என்று கூட்டுக. கழல்கள் வணங்குதற்கு - எழுந்த - விருப்பு - கேட்டலும் அவரைக் காண வேண்டுமென்பதன்றி வணங்க வேண்டுமென்னும் விருப்பம் வாய்ந்தது நாயனாரின் பக்குவநிலை குறித்தது. "தாழ்வெனும் தம்மையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெற லரிது" என்ற ஞானநூற் கருத்துக்காண்க. பின்னர் சார்ந்தார் (1445) என்றதனால் அவரது மலர்க்கழல்கள் தமக்குச் சார்பாதலை உட்கொண்டனர் என்ற குறிப்புத் தருதலும் காண்க. அவர்க்கருளிய தோணிபு ரேசரதுகழல் வணங்குதலினும் அவரது கழல் வணங்கும் விருப்பமே மிக்கு நின்றது என்பது பின்சிரித நிகழ்ச்சியானு மறிக. 1447 - 1449 - பார்க்க. வாழி அவர் மலர்க்கழல்கள் - அடியார் மனத்துள் என்றும் நின்று வாழத்தக்க. சீர் கேட்டலும் அவரது கழல்கள் இவ்வாறு வாழத்தக்கவை என்பதனைத் தவத்தால் உணர்ந்ததனால் வணங்கும் விருப்பு வாய்க்கப் பெற்றனர் என்பதாம். "ஒப்பரிய தவஞ் செய்தே னாதலினா லும்மடிகள் இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யானென்றார்" (திருஞான - புரா - 935) என்று இக்கருத்தைப் பின்னர் விளக்குதல் காண்க. ஆளுடையபிள்ளையாரது கழல்கள் மனத்துட் பொருந்த வருதற்கு முன்னைத்தவம் வேண்டுமென்பதும், அவ்வாறு தவங்கிடந்தவரே அக்கழல்களை நேர்படப் பெறுவர் என்பதும், "அரும்பின வன்பில்லை; யர்ச்சனையில்லை; யரனடிக்கே, விரும்பினமாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலன்; பொய்க்கமைந்த, விரும்பின வுள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதாற், கரும்பன நீள்வயல் சூழ்காழி நாடம் கழலடியே" என்ற (ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி - 24) நம்பியாண்டார் நம்பிகளது திருவாக்காலறிக. மனத்து எழுந்த விருப்பு - மனத்துள் அடங்காது - மேல் எழுந்த ஆசை. வாய்ப்ப - வாய்க்கப்பெறுதலால். வாய்ப்பச் - செல்வார் (1444). சார்ந்தார் (1455) என்று மேல்வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடிக்க. திருமுலையமுதம் - என்பதும் பாடம். |