பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்269

 

சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக்கண் ணிரண்டெனவும்" என்று இரண்டாவது உவமை கூறினார்.

திருப்பூந்துருத்தியில் தம் அப்பரைக் காணப் பிள்ளையார் சென்றருளியபோது நிகழ்ந்த இவர்களது வட்டம் மூன்றாவதாம். இங்குப் பிள்ளையைக் காண அப்பர் எழுந்தருளினார்; அங்கு அப்பரைக் காணப் பிள்ளை எழுந்தருளிற்று. பிள்ளை எழுந்தருளிய அருளிப்பாட்டுக்கேற்ப அரசுகள் அவர்தம் சிவிகையைத் தாங்கிச் சென்றருளினர். இச்செய்கைகளுக்குப் பிரித்துணரப்படாத இறைவனருளும் அம்மையார் அருளும் உவமையாயின என்று காட்ட மூன்றாவதாக "இருட்கடு வுண்டவ ரருளும் உலக மெல்லா மீன்றாடன் றிருவருளும் எனவும்" என்றார்.

அருட்பெருகு தனிக்கடல் - அருளினாற் பெருகும் என்றும், அருளைப் பெருக்கும் என்றும் உரைக்க நின்றது. அருள் பெருகு என்று எழுவாயாக வைத்தோதாது அருட்பெருகு என்றது இக்கடல் தனதருளை உலகுக்குப் பெருக உதவும் எழுவாயாம் என்றதாம். அருட் பெருகு என்றதில் கூறிய அருள் என்பது வேறு. பின்னர் கடுவுண்டவ ரருளும்...திருவருளும் - என்பனவற்றில் கூறிய அருள் வேறு. முன்னது உயிர்க்கண்ணின்று தோன்றி இறைவனருளால் ஏனைய வுயிர்களின் சுத்த நலத்திற்காக மேற்செல்வது. பின்னையவை எல்லா வுயிர்களுக்குள்ளும் உயிராய் அங்கங்கு நின்றியக்கும் இறைவனது அருள். ஆதலின் கூறியது கூறலன்மை புணர்க.

இருட்கடு வுண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திருவருளும் - கடுவுண்டவர் என்றது சாதலை இறப்பை - நீக்குவது; உலகமீன்றாள் என்றது பிறப்பைக் கொடுத்துச் சாதலையும் பிறப்பையும் நீக்கத் துணைசெய்வது என்க. "அன்புக்கும் அருளுக்கும் வேறு பாடின்றேனும் இரண்டாகப் பிரித்துக் கூறும் கருத்தால் அருளையே அன்பாகக் கூறினர்.பின் மூன்றாம் அடியில் சிவபிரான் றிருவருளும் உமாதேவியார் திருவருளும் ஒன்றாகவும் வேறு பிரித்துக் கூறினார் போலு மென்க" என்றும் "சக்தியும் சிவமும் ஒன்றே. அவ்வொன்றை இரண்டாகக் கூறுவது உபசாரம். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் வடிவால் வேறுபட்டிருப்பினும் திருவருளில் இருவரும் ஒருவர் என்னும் கருத்து ஈண்டு விளக்கப்பட்டிருக்கின்றது" என்றும் இங்கு விசேடவுரை காண்பார்களும் உண்டு. இவற்றின் பொருத்தங்கள் ஆராயத்தக்கன. அருளும், சைவ வலக்கண்ணும், சிவனருளும் பலமுடையவை. அவற்றால் அன்பும், சைவ இடக்கண்ணும், சத்தியருளும், விளக்கமடையவை என்ற குறிப்புக்களும் இவ்வுவமைகளாற் போதருதலும் காண்க.

கூடி - உவமைகள் மூன்றும் கூடியசெயலுக்கே யாயின. அருளும் அன்பும் கூடியனாற்போல, வலக்கண்ணும் இடக்கண்ணும் கூடினாற்போல, சிவனருளும சத்தியருளும் கூடினாற்போலக், கூடி என்க. வினைபற்றி எழுந்த உவமங்கள்.

கடல் - அளவுபடாத பெருமையும். கண் - காட்டக்காணும் தன்மையும், அருள் - காட்டிக்காணும் தன்மையும் குறித்து நின்றன.

தெருட்கலை ஞானம் - சிவஞானத்தை விளக்கும் கலைஞானம். சிவனைக்காட்டும் ஞானம். இது ஏனைக் கலைஞானங்களின் வேறாகிய "எண்ணரிய சிவஞானம் என்பார் தெருட்கலை - என்றார். "உயர்ஞானமிரண்டாம் மாறாமலமகல மன்னுபோதத் திருவருளொன்று; அதனைத் தெளிய வோதும் சிவாகமமென்றுலகறியச்செப்பும்" (சிவப்பிரகாசம்)

கன்றும் - அரசும் - என்றதனாற் பிள்ளை - அப்பர் - என்றும், அருள் - அன்பு என்றும் முன்போந்த கருத்துக்களைத் தொடர்ந்து கூறிய நயமும் காண்க.