பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்271

 

1455.

மேவுபுனற் பொன்னியிரு கரையுஞ் சார்ந்து
                           விடையுயர்த்ததார் திருச்செம்பொன் பள்ளி பாடிக்
காவுயரு மயிலாடு துறைநீள் பொன்னிக்
                           கரைத்துருத்தி வேள்விகுடி யெதிர்கொள் பாடி
பாவுறுசெந் தமிழ்மாலை பாடிப் போற்றிப்
                           பரமர்திருப் பதிபலவும் பணிந்து போந்தே
யாவுறுமஞ் சாடுவார் கோடி காவி
                           லணைந்துபணிந் தாவடுதண் டுறையைச் சார்ந்தார்.

190

1451. (இ-ள்.) வண்டு பயில் பண் அறை சோலை சூழ் காழி - வண்டுகள் முன் பயின்ற பண்கைளப் பாடும் சோலைகளாற் சூழப்பெற்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும்; பரமர் ...... எல்லை - இறைவனார் திருவுருவாகிய திருக்கோபுரத்தைப் பணிந்து திருக்கோயிலுக்குள் புகுந்து, விண்பணியும் படி ஓங்கும் பெரிய விமானத்தை வலமாகச் சூழ்ந்துவந்து தொழுது கீழேவீழ்ந்து வணங்கி எழுந்தபோது; சண்பைவரு பிள்ளையார் - சீகாழியில் அவதரித்த ஆளுடைய பிள்ளையார்; "அப்பர்! நீர் உங்கள் தம்பிரானாரைப் பாடீர்!" என்ன - அப்பரே! நீர் உங்களுடைய பெருமானைப் பாடுவீராக! என்று சொல்ல; அரசு - அதுகேட்ட திருநாவுக்கரசு நாயனாரும்; பயிலும் புனல் கண் பொழிய - பெருகிய நீரைக் கண்கள் பொழியவும்; கலைபயிலும் வாய்மை மொழி (வாய்) பொழிய - வாய்மைக் கலைகளிற் பொருந்திய மெய்த் திருமொழிகளை வாய் பொழியவும்; கசிந்து - மனம் உருகி; பாடி - பாடி,

186

1452. (இ-ள்.) பெரிய பெருமாட்டியுடன் ... நின்று - பெரியநாயகி யம்மையாருடன் திருத்தோணியில் விரும்பி வீற்றிருந்தருளும் தோணியப்பருடைய திரு முன்பு நின்று; பரிவுறு ...... போற்றி - அன்பு கூரும் செந்தமிழ் மாலையாகப் பத்தியோடும் "பார்கொண்டு மூடி" என்று தொடங்கும் திருப்பதிகத்தினாற்றுதித்து; அரியவகை ...... அமுது செய்து - அங்கிருந்து நீங்குதற்கரிய வகையாலே வெளியிற்போந்து ஆளுடைய பிள்ளையாருடைய திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து; மருவிய நண்பு உறு கேண்மை யற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க - பொருந்திய நண்புடன் கூடிய கேண்மையானது அன்றுபோலவே பின் என்றைக்கும வளர்ந்தோங்கும்படி; உடன் - உடனாக; பலநாள் வைகும் நாளில் - பலநாட்கள் இருந்த காலத்தில்,

187

1453. (இ-ள்.) அத்தன்மை ... நாளில் - அந்தத் தன்மையிற் பயின்ற அரசுகளும் ஆளுடைய பிள்ளையாரும் ஒருவரோடொருவர் அளவளாவியதனாற் பெற்ற மகிழ்ச்சி அளவில்லாது பெருகிய மனமகிழ்ச்சியுடனே செல்லும் நாட்களில்; மை தழையும் மணி மிடற்றார் பொன்னி நாட்டு மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற - விடம் தழையும் அழகிய கண்டத்தையுடைய சிவபெருமான் காவிரி சூழ்ந்த சோழ நாட்டில் நிலைபெற எழுந்தருளிய தானங்களை யெல்லாம் வணங்கித் துதிக்கவேண்டும் என்று; திருநாவுக்கரசு தமது திருவுள்ளம் தன்னில் மெய்த்து எழுந்த பெரும் காதல் - திருநாவுக்கரசு நாயனாரது திருவுள்ளத்தில் உண்மைத் திறத்தினால் நிறைந்து மேல் எழுந்த பெருங்காதலினை; பிள்ளையார்க்கு விளம்புதலும் - ஆளுடைய பிள்ளையார்க்கு எடுத்துச் சொல்லுதலும்; அவரும் அதுமேவி. நேர்வார் - அவரும் அதனையே திருவுள்ளம் பொருந்தி ஒப்புக் கொள்வாராய்;

188