1454. (இ-ள்.) ஆண்ட அரசு ... மீண்டருளினார் - ஆளுடைய அரசுகள் புறப்படவே அவருடனே சென்று திருக் கோலக்காவைப் பணிந்து ஆன்பு விடைபெற்றுத் திரும்பியருளினார்; அவரும் விடைகொண்டு - நாயனாரும் பிள்ளையாரிடம் விடைபெற்றுக்கொண்டு; இப்பால் - இதன்மேல்; வேதநாயகர் ... கலந்து செல்வார் - வேதநாயகராகிய சிவபெருமான் விரும்பி எழுந்தருளிய பதிகளாகிய பெருமையால் நீண்ட திருக்கருப்பரியலூரும், திருப்புன்கூரும், திருநீடுரும், திருநீடும் குறுக்கைவீரட்டமும், திருநின்றியூரும், காணுந் தகைமையுடைய திருநனிபள்ளியும் முதலானவற்றைச் சேர்ந்து கண்ணுதலாருடைய திருவடிகளைத் தொழுது கலந்து மேற்செல்வாராய், 189 1455. (இ-ள்.) மேவு ... சார்ந்து - நீர் இடையறாது பொருந்திய காவிரியின் இரண்டு கரைகளிலும் சார்ந்து; விடையுயர்த்தார் ...... போந்தே - இடபக்கொடியை உயர்த்திய பெருமானது திருச்செம்பொன்பள்ளியினைப் பாடிச் சோலைகள் உயரமாகச் சூழ்ந்த திருமயிலாடுதுறையையும் நீளும் காவிரியின் இருகரையிலும் உள்ள திருத்துருத்தி - வேள்விக்குடியையும், திருஎதிர்கொள்பாடியையும், வணங்கிச் செந்தமிழ்ப் பாட்டுக்களாகிய மாலையினைப் பாடித்துதித்துப் பரமசிவனது திருத்தலங்கள் ஏனைப் பலவற்றையும் பணிந்து கொண்டுபோய்; ஆவுறும் ... பணிந்து - ஆனைந்தையும் ஆடுகின்ற பெருமானது திருக்கோடிகாவில் அணைந்து பணிந்துபோய்; ஆவடுதண்துறையைச் சார்ந்தார் - தண்ணிய திருவாடுதுறையைச் சார்ந்தனர். 190 இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1451. (வி-ரை.) வண்டு பயில் பண் அறை சோலை என்க. பயிலுதல் முன்னர்ப் பலகாலும் பாடிப் பழகுதல். "சிவந்த வண்டு, வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடு மிழலை யாமே" முதலிய திருவாக்குக்கள் காண்க. பரமர் திருக்கோபுரத்தைப் பணிந்து - திருக்கோபுரம் திருக்கோயிலின்முன் உள்ளது. கோபுரம் தூலலிங்கம் எனப்படும். ஆதலின் அதனைப் பரமராகவே கண்டு பணிதல் வேண்டுமென்பது விதி. விண்பணிய ஒங்கும் பெருவிமானம் - இவை உள்ளிருக்கும் கோயில்களின் விமானங்களும் திருத்தோணியின் சிகரமும். அப்பர்! உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர்! - அப்பர் - ஆப்பரே. இயல்பின் வந்த அண்மை விளி. உங்கள் தம்பிரானார் - பிரானாரைத் தம்மிலும் அவர்க்கு உரிமைப்படுத்தி உரைத்தது அருமைப்பாடாகியதொரு வழக்கு. "உங்கணாயகனார்" (478) என்ற விடத்துரைத்தவை பார்க்க. பயிலும் புனல் கண் பொழிய என்றும், கலை பயிலும் வாய்மைமொழி (வாய்) பொழிய என்றும் மாற்றியும் கூட்டியும் உரைத்துக் கொள்க. பயிலும் புனல் - இடைவிடாது பெருகும் நீர். கண் பொழிய என்றதற்கேற்ப, வாய் பொழிய என்று வருவித்துரைக்க. கலை பயிலும் வாய்மைமொழி - கலை - சிவகலை. சிவத்தை உணர உதவி செய்யும் கலை. வாய்மை மொழி - என்றும் பொய்யாது சத்தாய் விளங்கும் மொழி. "அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதம்." கசிந்து - மனத்தின்றொழில். முன்நின்று - போற்றி - போந்து - அமுதுசெய்து - ஓங்க - வைகும் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக்கொள்க. புனல் பொழிந்த அரசும் - என்பதும் பாடம். 186 1452. (வி-ரை.) பெரிய பெருமாட்டி - பெரியநாயகி யம்மையார். பிரான் - தோணியப்பர். |