பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்277

 

இப்பால் - அன்புகொண்டு பிள்ளையார் மீண்டருளியபின் அவர்பானிகழ்ந்தன அப்பால்; விடைகொண்டு நாயனார் செல்வது இப்பால். நாயனாரது சரித நிகழ்ச்சிகள் கூறப்படுவனஆதலின் நாம் அவரைப் பின்றொடர்ந்து செல்லுமாறு அண்மைச் சுட்டினாற் கூறினார்.

விரும்பு பதிகள் - உயிர்கள் தம்மை எளிதிற் கண்டுவந்து அடையும் பொருட்டு விரும்பி வீற்றிருக்கும தலங்கள். வேண்டுதல் வேண்டாமை யிலராதலின் வேதநாயகருக்கு வேறு விருப்பு இல்லை என்க.

கருப்பறியலூர் - இது மேலைக்காழி என்றும் தலைஞாயிறு என்றும் வழங்கப்படும். சீதாழிக் கோயில்போன்ற அமைப்புக்கள் உடையது. புள்ளிருக்கு வேளூர் என்னும் வைத்தீசுவரன் கோயிலிலிருந்து மேற்கில் 5 நாழிகையளவில் அடையத்தக்கது. (பழங்) காவிரியாற்றின் வட கரையில் 27-வது தலம்.

புன்கூர் - திருப்புன்கூர் - 261-வது பாட்டின்கீழ்த் தலவிசேடம் பார்க்க.

நீடூர் - திருநீடூர் புன்கூரினின்றும் 2 நாழிகையளவில் அடையத்தக்கது. முனையடுவார் நாயனாரது தலம். சுவாமி "செம்மேனியம்மான்" என்றதற்கேற்பச் சிவந்த திருமேனி. காவிரிக்கு வடகரையில் 21-வது தலம்.

திருக்குறுக்கை - வீரட்டங்களுள் ஒன்று. காமனை எரித்த வீரம்நிகழ்ந்ததலம்.

திருநின்றியூர் காவிரிக்கு வடகரையில் 19-வது தலம்.

காண்தகைய நனிபள்ளி - ஆளுடைய பிள்ளையாரது திருத்தாயார் பிறப்பிடம் பாலை நெய்தலாகப் பாடியருளிய அற்புதம் நிகழ்ந்த தலம்.

கலந்து - காவிரியின் வடகரைத் தலங்களும் தென்கரைத் தலங்களுமாகக் கலந்து திருப்பணி செய்து மனவொருப்பாடுடன் கலந்து என்பாருமுண்டு.

செல்வார் - செல்வாராகி. முற்றெச்சம். செல்வார் சார்ந்து - பாடி - பாடிப் - போற்றிப் - பணிந்து - போந்தே - அணைந்து - பணிந்து சார்ந்தார் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க.

புகழ்ப்பறியலூர் - நீடூர் திருக்குறுக்கை - நீடுதிருநின்றியூரும் - வணங்கிச் செல்வார் - என்பனவும் பாடங்கள்.

189

1455. (வி-ரை.) புனல்மேவு பொன்னி என்க. "பூந்தண் பொன்னி யெந்நாளும் பொய்யாதளிக்கும் புனனாட்டு" (1206) "வருநாளென்றும் பிழையாத் தெய்வப் பொன்னி" முதலியவை காண்க.

இருகரையுஞ் சார்ந்து - காவிரியின் வடகரை தென்கரை யிரண்டினிலும் சிவதலங்கள் உள. அவற்றுட் சில தலங்ள் நேர் எதிர் எதிராகவும் மற்றுஞ் சில மிகஅணிமையிலும் காண உள்ளன கண்ட கண்ட தலங்ளைக் கண்ட கண்டபோதே கண்டு வணங்குதல் முறையாதலின் வடகரைபற்றியேனும் தென்கரை பற்றியேனும் ஒரே வரிசையாகச் செல்லாமல் இருவரையும் சார்ந்து வணங்கினர் என்க. சோழநாட்டில் இப்பகுதியில் யாத்திரை செய்தோருக்கு இதன் தகுதி நன்கு விளங்கும்.

திருச்செம்பொன்பள்ளி - சோழநாட்டில் காவிரிக்குத் தென்கரை 42-வது தலம். செம்பொன்னார் கோயில் என வழங்குவது.

காவுயரும் மயிலாடுதுறை - இது சோழநாட்டில் காவிரிக்குத் தென்கரை 39-வது தலம். கௌரி மாயூரம் என வழங்கப்படுவது. உயரும் கா - என்றது காவிரியின் செழிப்பினால் எங்கும் சோலைகள் சூழ்ந்திருக்கும சிறப்புக் குறித்தது. தன்மையணி, நீள் பொன்னிக்கரைத் துருத்தி வேள்விகுடி - துருத்தியும் வேள்விக் குடியும் காவிரி யிருகரையிலும் எதிர் எதிர் உள்ளன. இரண்டும் ஒரு தலமாகக் கருதப்படுதல் மரபு. துருத்தி - குத்தாலம் என வழங்கப்படுவது.