பதிகக் குறிப்பு :- பதினெண் புராணங்களாலும், இப்புராணத்தாலும் பேசப்படும் ஒவ்வோர் சரிதத்தை ஒவ்வோர் பாட்டில் கூறி அதன் மூலம் இறைவனது புகழைப் பரவுதல். பதிகப்பாட்டுக் குறிப்பு - (1) பிரமன் அர்ச்சனை செய்தது. வேதங்களை உணர்தற்காகப் பிரமதேவர் சிவபெருமானை அர்ச்சித்தனர். சோதியிற்சுடர் - எல்லா ஒளிகளுக்கும் உள்ளே நின்று அவ்வவற்றிற்கும் ஒளி கொடுப்பவர் சிவபெருமானே. "தேயமார் ஒளிக ளெல்லாம் சிவனுருத் தேச தென்னார்" (சித்தியார் - 1சூத்). சொல்லினை இறந்தார் - சொல்லி லடங்காது மேற் செல்பவர். -(2) மார்க்ண்டற்காகக் கூற்றினை உதைத்த சரிதம். நீற்றினை ... ஆட்டும் அந்தணன் - இது மார்க்கண்டர் கைக்கொண்டொழுகிய தவத்தின் சிறப்பு. ஆட்டியதனால் என்று கூற்றத்தை உதைத்தற்குக் காரணங் கூறியவாறு. அவ்வாறு சிவனையே எண்ணிக் கிடப்பார்க்கு இயமவாதனை இல்லை என்பது. சிவனை அடைவோர்க்குப் பிறவியில்லை என்பது இதன் கருத்து. "வஞ்ச நமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும், அஞ்சி யுனையடைந்தே னையா பராபரமே" (தாயுமானார்). நிறைய - உருவார; ஆர்வத்தோடு. நியமம் - சிவாகமங்களின் விதித்தவாறே மேற்கொள்ளும் ஒழுக்கம். இயமமாதி அட்டாங்க யோகமும் ஆம். பூரித்தல் - நிறைத்தல். ஆட்டுதல் - சிவனுக்கு அபிடேகித்தல். அந்தணனார் - மார்க்கண்டர். சாற்றுநாள் - பதினாறு வயது என்று ஈந்த வரத்தின் எல்லை. தருமராசன் - இயமன். கூற்று - இயமதூதன். குமைத்தல் - வதைத்தல். -(3) சண்டீசநாயனார் சரிதம். புராணம் பார்க்க. தாபரம் சிவன்றிருமேனி. சிவன்பூசை கொள்ளும் உருவம் தாபரம் - சங்கமம் என்றிரு வகைப்படும். அவற்றுள் தாவரமாவது அதனை மண் முதலிய பொருள்களாலாக்குதல். ஏனையது சிவனடியார் திருவுருவம். "சந்தி மூன்றிலுந் தாபரவாமை - செய்யும் முத்தி. அமுதம் என்றதற்கேற்பக் குழைத்தது என்றார். "எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி" (திருஞான - புரா - 68). -(4) கோச்செங்கட்சோழநாயனார் சரிதம். புராணம் பார்க்க. சோணாடு - சோழநாடு. -(5) விட்டுணுவுக்குச் சக்கரம் கொடுத்த சரிதம் :- ஏறுடன் ஏழடர்த்தான் - விட்டுணு - கண்ணனாக வந்த அவதாரச் செய்கைகளுள் ஒன்று. ஆயிரம்பூ - தாமரை மலர்கள். இச்சரிதம் திருவீழிமிழலையில் நிகழ்ந்த தென்பர். திருவீழிமிழலை நேரிசைப் பதிகம் "நீற்றினை நிறையப் பூசி" என்ற பாட்டுப் பார்க்க. வேறுமோர் பூ - என்றது திருவருளால் ஒரு பூ குறைந்த குறிப்பு. மலர்க்கண் - தாமரையையொத்தகண். மீண்டுதல் - தோண்டுதல் - அகழ்ந்தெடுத்தல் குறித்தது. கூறும் - எடுத்துச் சொல்லப்படும். (அசுரனைக்) கூறு செய்விக்கும என்றலுமாம். -(6) சாக்கிய நாயனார் சரிதம். புராணம் பார்க்க. கஞ்சி தாமுணும் - சாக்கியர்களின் வழக்குக் குறித்து நின்றது. "கண்டான் கழுவா முன்னே யோடி கலவைக் கஞ்சியை, உண்டார்" (பிள்ளையார் - தேவா). சோறுணாமே - இறைவனைக் கல்லினாலெறிந் தர்ச்சிக்க மற்ந்து சோறு உண்ணப்புக்குப், பின் நினைந்தோடி, எறிந்து, அப்போதே முத்தி பெற்றாராதலின் உணாமே என்றார். நீள்விசும்பு - சிவலோகம் குறித்தது. எல்லி - இரவு. இங்கு மாசங்கார ஊழி குறித்தது. கொல்லி - பண். நேரிசைக்குரியது. -(7) கண்ணப்ப நாயனார் சரிதம். புராணம் பார்க்க. காப்பது - இறைவனை இரவில் விலங்குகள் அணுகாது காப்பதும், வேட்டையாடி இறைச்சி கொண்டு ஊட்டிக்காப்பதுமாகத் துன்பம் வராமலும் இன்பரம் வரவும் காத்தல். தீப்பெரும் கண்கள் - ஞாயிறு - திங்கள் என்ற இரண்டும் |