பக்கம் எண் :


292திருத்தொண்டர் புராணம்

 

பாவலர்செந் தமிழ்த்தொடையாற் பள்ளித் தாமம்
         பலசாத்தி மிக்கெழுந்த பரிவி னோடும்
பூவலயத் தவர்பரவப் பலநாட் டங்கிப்
         புரிவுறுகைத் திருத்தொண்டு போற்றிச் செய்வார்.

191

1457.

எறிபுனல்பொன் மணிசிதறுந் திரைநீர்ப் பொன்னி
         யிடைமருதைச் சென்றெய்தி யன்பி னோடு
மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி
         வண்டமிழ்ப்பா மாலைபல மகிழச் சாத்திப்
பொறியரவம் புனைந்தாரைத் திரநாகேச் சுரத்துப்
         போற்றியருந் தமிழ்மாலை புனைந்து போந்து
செறிவிரைநன் மலர்ச்சோலைப் பழையா றெய்தித்
         திருச்சத்தி முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.

192

1456. (இ-ள்.) வெளிப்படை. குளிச்சியையுடைய ஆவடுதுறையில் எழுந்தருளியுள்ள இறைவரை அடைந்து உய்ந்தேன் என்ற கருத்தையுடைய அளவு படாத திருத்தாண்டகத்தை முன்னர் அருளிச்செய்து, பொருந்திய திருக்குறுந்தொகையும், திருநேரிசையும், சந்த விருத்தங்களும் ஆகிய வெவ்வேறு பாக்களின்றன்மை மிகுந்த செந்தமிழ் மாலைகளால் திருப்பள்ளித்தாமங்கள் பலவற்றையும் சாத்தி, மிகுதியாய் மேன்மேல் எழுந்த அன்பினோடும் உலகம் போற்றும்படி பல நாட்கள் அங்குத் தங்கி இடைவிடாது நினைந்து செய்யும் கைத்திருத்தொண்டாகிய உழவராப் பணியைப் பாராட்டிச் செய்வராகி,

191

1457. (இ-ள்.) வெளிப்படை. எறியும் நீரினால் பொன்னையும் மணிகளையும் சிதறும் அலைகளையுடைய காவிரிக்கரையில் உள்ள திருவிடைமருதூரைச் சென்று சேர்ந்து, மானைப் பொருந்திய கையினையுடைய சிவபெருமானை அன்பு கூர வணங்கி, அங்குத் தங்கி, வளப்பமுடைய தமிழ்ப்பாமாலை பலவற்றையும் மகிழச் சாத்திப், பொறிகளையுடைய பாம்புகளைப் புனைந்த பெருமானைத் திரு நாகேச்சுரத்தில் போற்றி, அரிய தமிழ்மாலை புனைந்து சென்று, மணம் நிறைந்த நல்ல மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த பழையாறையை யடைந்து திருச்சத்திமுத்தத்திற் சென்று சேர்ந்தனர்.

192

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1456. (வி-ரை.) "ஆவடுதண் டுரையாரை யடைந் துய்ந்தேன்" என்பது பதிக ஈற்றுக் குறிப்பும் கருதுமாம். பதிகப் பாட்டுக்களின் ஈற்றடி பார்க்க.

அளவில் திருத்தாண்டகம் - பெருமையை அளக்க முடியாத பதிகம். பதிகக் குறிப்புப் பார்க்க.

முன் - இது முதன்முறை தரிசித்தபோது பாடியருளியது. அதுவன்றியும் ஆவடுதுறையில் அருளிய பல பதிகங்களுள் முதலிற் பாடியருளியது இத்திருத்தாண்டகமேயாகும். இக்கருத்து "அடைந்து உய்ந்தேன்" என்றதனாற் பெறப்படும் என்க.

வேறு வேறு பா அலர் செந்தமிழ்த் தொடை - குறுந்தொகை - நேரிசை - சந்த விருத்தங்கள் எனுமிவை வெவ்வேறாகிய தமிழ்ப்பாவினங்களாலாவன.

தமிழ்த்தொடையாற் பள்ளித்தாமம் - தமிழ் மாலைகள்.

பலநாள் தங்கி என்றது பதிகங்களாற் பெறப்படும் குறிப்பு.