அடிகள் கீழைகோபுர வாய்தலினும், பத்திரகிரியார் மேலைக்கோபுர வாய்தலினும் உள்ளனர்; அவை, அவ்விரு பெருமக்களும் பலநாள் தங்கித் தவம் புரிந்து அருள் பெற்ற இடங்களாகும். வடநாட்டில் உள்ள மல்லிகார்ச்சுனம் என்ற சீபர்ப்பதத்துக்கும், தெற்கே பாண்டி நாட்டில் உள்ள திருப்புடைமருதூர் என்ற தலத்துக்கும் இடையில் உள்ளதாலும, இம்மூன்றற்கும் ஒன்றுபோல மருது தலமர மாதலாலும் இது இடைமருது எனப் பெயர் பெறும். மௌனமாய்த் தவஞ்செய்தலின்மூகாம்பிகை எனப்படும் அம்மையாரது கோயில் அம்மை கோயிலின் வெளியில் தென்புறத்தில் உள்ளது. சுவாமி - மகாலிங்கேசுவரர் - மருதவாணர். அம்மையார் - நன்முலை நாயகி. தீர்த்தம் - காவிரி - அயிராவணத்துறை. மரம் - மருது. பதிகம் - 12. சுவாமி - மகாலிங்கர் என்ற பொதுச் சிறப்புப் பெயரால் விளங்குதற்கேற்ப, இத்திருத்தலத்தினைச் சுற்றிலும் சிவாலய அமைப்பினை யொட்டி, நடேசர் சந்நிதி சிதம்பரமாகவும், தட்சிணாமூர்த்தி சந்நிதி ஆலங்குடியாகவும், நவக்கிரகக் கோயில் சூரியனார் கோயிலாகவும், விநாயகர் சந்நிதி திருவலஞ்சுழியாகவும், முருகர் சந்நிதி சுவாமிமலையாகவும், வைரவர் சந்நிதி சீகாழியாகவும், சண்டீசர் சந்நிதி திருச்சேய்ஞலூராகவும் இவ்வாறு பரிவார சந்நிதிகள் அவ்வத் தனிச் சிறப்புடன் தனித்தலங்களாகவே அவ்வவற்றுக்குரிய இடங்களில் விளங்குதல் இதன் பெருமையை விளக்கும். இது திருவிடைமருதூர் என்ற இருப்புப்பாதை நிலயத்தினின்றும் வடக்கே மட்சாலை வழி நாழிகையளவில் அடையத்தக்கது. திருநாகேச்சரம் I திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| கச்சைசே ரரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும் பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாளர் போலும் இச்சையான் மலர்க டூவி யிரவொடு பகலுந் தம்மை நச்சுவார்க் கினியர் போலு நாகவீச் சரவ னாரே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- நாகவீச்சரவனாகிய இறைவர் கறைமிடற்றர் - பிச்சை யேற்றுண்பர் - பேரருளாளர் - முதலிய பண்புகளுடையார்; அவர் தம்மை நச்சு வார்க் கினியர்; தொழுதெழுவார்கட்கெல்லாம் நற்றுணையாவர்; இறைவனே என்று தம்மை நம்புவார்க் கன்பர்; வஞ்சகர்க்கரியர், ஆயின், மருவினார்க் கெளியர். பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) பிச்சை கொண்டுண்பர் - பேரருளாளர் - பிச்சைகொண்டுண்பது அவரது பேரருளின்றிறம். "எற்றுக் கிரக்கும்? - நிரந்தரமாக நினையு மடியார், இரந்துண்டு தன்னடி யெட்டச் செய்தானே" (திருமந்திரம்). இச்சையால்........இனியர் - மனம் வாக்குக் காயங்களால் எப்போதும் விரும்புபவர்க்கு இனிமையர். நச்சுதல் - விரும்புதல்.- (2) சேடு - வெள்ளநீர். நாடறிபுகழர் - உலகங்களெல்லாம் அறிந்தேத்தும் புகழ்.- (6) மறைஊறு மொழியர் - வேதங்களைச் சொன்னவர்.- (8) மோடி - துர்க்கை.- (9) வக்கரை - திருவக்கரை. தொண்டை நாட்டில் தேவாரப் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. நக்கரை மருவர் - நிர்வாணமான இடையை உடைய உருவர்.- (10) தன்மை - பதித்தன்மை. II திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்; வல்லர் வல்வினை தீர்க்கு மருந்துகள்; பல்லி லோடுகை யேந்திப் பலிதிரி, செல்வர் போற்றிரு நாகேச் சரவரே |
1 |