பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்311

 

வும் எனவும் உரைக்க நின்றது. முதலிய என்ற பொருட்குச் சேலூர் - பட்டீச்சரம் - முதலிய என்க.

திருநல்லூர் ஒருகாலும் பிரியாதே - முன் சொன்ன தலங்களைச் சென்று தொண்டு செய்கின்ற நாயனார், அதனோடு திருநல்லூரையும் எந்நாளும் பிரியாது பணிகின்றாராயினர். முன் சொன்ன மூன்று தலங்களும், பிறவும் திருநல்லூரை அடுத்துச் சில நாழிகையளவில் உள்ளன. நாயனார் அவற்றை முறையே வழிபடச் செல்பவர், திருநல்லூரிற்றங்கிப் பணிந்தபடியே அவற்றுக்குச் செல்வதும், நாளும் மீண்டும் திருநல்லூரைப் பிரியாது திரும்பி விடுவதுமாக ஒழுகினர் என்பது ஈண்டுக் கருதப்படும். இவ்வாறன்றி வேறு தலத்துக்குச் சென்று வழிபடினும் திருநல்லூரிறைவர் தமக்குச் செய்த பேரருளை ஒருகாலும் மனத்துணின்றும் பிரியாது வைத்துப் பணிந்து ஒழுகினர் என்றலுமாம். திருவேட்களம் திருகழிப்பாலை தொழுது கொண்டு, "நினைப்பவர் மனங் கோயிலாக்கொண்ட அம்பலக் கூத்தனைத் தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனே?" என்றுபாடி மீண்டு தில்லை சார்ந்து வழிபட்டிருந்த நாயனாரது ஒழுக்கம் நினைவுகூர்தற்பாலது.

உள் உருகுதலாவது மன நைந்து கரைதல். "நினைந்துருகு மடியாரை நைய வைத்தார்" என்ற நிலை கைவருதல்.

பணிகின்றார் - இவ்வாறு பணிதல் பல நாளும் பல காலமும் எப்போதும் நிகழ்ந்தது என்பார் நிகழ்காலத்தாற் கூறினார். பணிகின்றாராகிய நாயனார் எனவினைப் பெயராக்கி, அருள்பெற்று - அகன்றுபோய் - அணைந்து - நேர்பெற்றார் என மேல்வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க.

பலவும் சென்று - என்பதும் பாடம்.

198

1464. (வி-ரை.) ஆளுடைய நாயகன் - திருவடி சூட்டியமையால் ஆளாகக் கொள்ளுதலையுடைய திருநல்லூரிறைவர். தலத்துச் சுவாமி பெயர்க் குறிப்புமாம்.

அங்கு - அங்கு நின்றும். திருநல்லூரினின்றும். நீக்கப் பொருளில் வரும் ஐந்தனுருபு தொக்கது.

வாளைபாய் புனல் - நீர்ச்சிறுப்புக் குறித்தது. "மடையில் வாளை பாய" (தேவாரம்).

புனற் பழனத் திருப்பழனம் - பழனம் என்ற தலப் பெயரின் பொருள் விளக்கும் வகையால் சொற்பின் வருநிலையில் வைத்தது ஆசிரியரது கவிநயம். "திருவாமூர் திருவாமூர்" (1277) என்றவிடத் துரைத்தவையும், பிறவும் பார்க்க. "செல்வநீடூர் திருநீடூர்" முதலியவையும் காண்க.

மருங்கு அணைந்து - மருங்கு சென்று அதனுள் அணைந்து. "அங்ககன்று" என்றவிடத்துப்போலக் காணக்.

காளவிடம் உண்டு இருண்ட கண்டர் - பணிக்கலன் பூண்டு ஆடுவார் - இதனை அடுத்து அப்பூதியார் மகனை அரவு தீண்டவும், பின்னர் அம்மகன் அருளால் உயிர்பெற்றெழவும் நிகழவிருக்கும் திருவருட்செயல் குறிப்பு.

காளவிடம் உண்டிருண்ட கண்டர் - திருநீலகண்டம். விடமுண்ட புராண வரலாறு பற்றி 363-ம் பாட்டின்கீழ்த் திருநீலகண்டம் என்ற தலைப்பில் உரைக்கப்பட்டவை காண்க. சிவபெருமானது பேரருளுடைமை வரம்பிலாற்றலுடைமை முதலிய குணங்களை இஃது எடுத்துக்காட்டி நிற்கின்றது. உயிர்களின் குற்றமே காளவிடம் என்றும், உயிர்களுக்காக மாயையினின்றும் உலகங்களையும் - உடல்களையும் தோற்றுவிக்க இறைவன் நடனத்தாலியக்கப்படும் மாயையின் மண்டிலங்