தூயவர் - ஆதலின், என்று அமுது செயத் தொடங்காமைக்குக் காரணங் காட்டுவார் உடம்பொடு புணர்த்தி ஓதினார். அது - அச்செய்தி. ஒளித்தார் - முற்றெச்சம். ஒளித்தாராகி. மேற்பாட்டில் மறைத்து என்றதனுடன் கூட்டிமுடிக்க. தழலரவம் - என்பது பாடம். 206 1472. (வி-ரை.) தம்புதல்வன் சவம் - "தெருமந்து - விழக்கண்டு" என்ற மட்டில் மேற்பாட்டில் அறிவித்த ஆசிரியர், வேறுரையாராகி, இங்குச் சவம் என்றதனால் அவனது உயிர் நீங்கிற்று என்பதறிவித்தனர். "ஆவிதீர் சவத்தை நோக்கி" (அப்பூதி - புரா - 35) என்பது காண்க. தடுமாற்றம் இலராகி - தடுமாற்றமாவது "தூயவரிங் கமுதுசெயத் தொடங்கார்" என்றதனால் வந்த மனக்கலக்கம். இலராதல் - நீங்குதல். அது, மகன் வீழ்ந்து உயிர் நீத்த செய்தியும், அதனைத் தெரிவிக்கக்கூடியதாகிய அவனது சவமும் மறைக்கப்பட்டமையால் உளதாயது. மகன் வீழ்ந்ததனாலாகும் தடுமாற்றம் என்றுரைப்பாரு முண்டு. அஃது அவர்பால் நிகழவில்லை. என்பது துணிபு. "வீந்தா னென்று துளங்குதலின்றி" (அப்பூதி - புரா - 28) என்பது காண்க. எம்பொருமான் - எமது என்றது இறந்த மகனை உள்ளிட்ட எங்கள் குடி முழுதும் என்ற குறிப்பையும் கொண்ட வாய்மையாவது பிற்சரித விளைவினாற் காண்க. "அமுதுசெய்ததெங், குடிமுழு துய்யக் கொள்வீ ரென்றவர் கூற" (அப்பூதி - புரா - 30) என்பது காண்க. திருத்தொண்டர் - அரசுகள். அப்பூதியார் என்றுரைப்பாருமுண்டு. அது பொருந்தாது. அவர் உள்ளத்திற் றடுமாற்றமிலரென்பது முன் உரைக்கப்பட்டது. "அன்பர் செவ்விய திருவுள்ளத்து ஓர் தடுமாற்றஞ் சேர" (அப்பூதி - புரா - 33) என்று இதனைப் பின்னர் விளக்குவது காண்க. உள்ளத்தில் தடுமாற்றம் திரு அருளால் அறிந்து - "வானந் துளங்கிலென்" என்றுகூறி," மலையேவந்து விழினும் - நிலையினின்று" கலங்காது, "அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்ச வருவதுமில்லை" என எஞ்ஞான்றும் துளங்காது நிலை நிற்கும் தன்மையுடையது நாயனாரது செவ்விய திருவுள்ளத்தில் ஒரு தடுமாற்றம் சேர்ந்தது. அது என்ன என்று அறிதலுற்றனர். அறிந்து - "சேர நோக்கி" என்றது காண்க. அருளி - அருள் புரிவாராகி. "அளவிறந்த கருணையராய்" என்று மேல் வருவது காண்க. அப்பூதியார் அழைத்தலும் நாயனார் அமுது செய்தருளும் பாங்கினிலிருந்தனர்; அப்பூதியாருக்கும் பிள்ளைகளுக்கும் திருநீறளிக்கும்போது மூத்த பிள்ளையை அழைக்கச்சொல்ல, "அவன் இப்போது இங்கு உதவான்" என்று அப்பூதியார் கூறக்கேட்டு, நாயனாரது செவ்விய திருவுள்ளத்து ஒரு தடுமாற்றம் சேர்ந்தது; "மெய்விரித்துரையும்" என்று நாயனார் கேட்க, அப்பூதியார் நிகழ்ந்ததை உரைத்தனர்; அரசுகள் கேட்டு "நன்று நீர்புரிந்த வண்ணம்! வேறு யாவர் இத்தன் - என்ற இவ்வளவும் இங்கு அருளி என்ற இவ்வொரு சொல்லாற் பெறவைத்த குறிப்பும் சிறப்பும் காண்க. அப்பூதியார் புராணத்தின் 29 முதல் 35 வரை 7 பாட்டுக்களால் இதனை அங்கு விரித்துக் கூறியவாறெல்லாம் இங்கு வைத்துரைத்துக் கொள்க. தடுமாற்றம் சேர்ந்ததும், அறிந்ததும் திருவருளால் ஆயின. இவை தவமுடைய பெரியோர்க்கு இறைவன் உண்ணின்று உணர்த்தும் முறை. திருப்பூந் துருத்தியில் எழுந்தருளி யிருந்த நாயனாரைக் காணும் விருப்போடு எழுந்தருளிய |