பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்323

 

திருஞானசம்பந்த நாயனாரது சிவிகையைத் தாங்குவோருடன், வேறு எவரும் அறியாதே தமது திருத்தோளில் நாயனார் தாங்கிச் சென்றவுடனே, திருஞானசந்பந்த நாயனாரது திருவுள்ளத்தில் திருவருளால் வேறு ஒரு குறிப்புத் தோன்ற, அவர் "அப்பர் எங்குற்றார் இப்பொழுது?" என்று கேட்கவும், நாயனார் "அடியேன் சிவிகை தாங்கும் பெருவாழ்வு பெற்று இங்குற்றேன்" என்று சொல்லவும், அதனால் நாயனாரது அடிமைத்திறம் உலகில் விளங்கவும் காரணமாய் நின்ற திருவருட்டுணையை இங்கு நினைவு கூர்க. அங்குத் திருஞானசம்பந்தரது "புந்தியினில் வேறொன்று நிகழ்ந்திட" என்பதும் காண்க.

நம்பர் - தம்மை உயிர்கள் நம்பிவந்து அடையும் தலைவர். நம்புதலாவது - "நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே விதற்கு நாயகமே" (திருவாசகம்) என்ற மனநிலை கைவருதல். நம்பராதலின் அருள்புரிந்து தடுமாற்றத்தை உளதாக்கினர் - என்று குறிக்க இப்பெயராற் கூறினார். நாயனார்க்கும், அப்பூதியார்க்கும் நம்பர் என்க. அப்புதியார் நம்பி அமைந்து அடைந்திருந்தமை, "நம்மையுடை யவர்கழற்கீழ் நயந்ததிருத் தொண்டாலே, யிம்மையிலும் பிழைப்பதென வென்போல்வா ருந்தெளியச், செம்மைபுரி திருநாவுக்கரசர்" (அப்பூதியார் - புரா - 14) என்றதனாலும், பிறவாற்றாலுங் காண்க.

நவை - துன்பம். அன்பர்க்கு அடாத தீங்கு. "நாகம் தீங்கிழைக்க" (1470) என்ற தீமை.

207

1473.(வி-ரை.) மறைத்ததனுக்கு - புதல்வன் விடத்தின்வீந்த செய்தியினையும், அதனைக் காட்டக்கூடிய அவனது சவத்தினையும் மறைத்ததுவும் அன்றி, "பூதி சாத்தக் காதலால் இவர்க்கு மூத்த சேயையும் காட்டு" கென்று தாம் கேட்டபோது "இப்போ திங்கவ னுதவான்" என்று மறை பொருள்பட விடை கூறியதும் குறிப்பு. அவ்வாறு மறைத்ததனை அப்பூதியார் உற்றது பகரக்கேட்டுக் கருணை பூண்டனர். அப்பூதியார் புரா - 34, 35 பார்க்க.

அளவிறந்த கருணையராய் - மைந்தன் விடத்தால் வீந்தனன் என்பதினும், அதனை அவர்கள் மறைத்த செயலே நாயனராது திருவுள்ளத்தில் அளவுபடாத கருணையைப் பூக்கச் செய்தது. கருணை அளவுகடந்து பெருகியது புதல்வன் மாட்டன்று; அவனை இழந்த அப்பூதியார், மாட்டுமன்று; ஏன்? உலகில் இறத்தல் உயிர் கட்கியல்பு; புதல்வனை யிழத்தலும் இயல்பு; இவை யெல்லாம் இறைவனது நியதி. ஆதலின் செத்தாரை செயல்லாம் பிழைக்கச் செய்யவோ, இனியாரைச் சாகக் கொடுத்தாரது துன்பங்களை யெல்லாம் நீக்கச் யெ்யவோ முயல்வேன் என்பதில் நல்லாசாரியராவார் முயலார். அவ்வாறு முயல்வது இறைவரது நியதி அறியாதார் செய்கை. ஆனால் இங்கு நாயனார்பாற் கருணையை மிகச் செய்தது அவர்கள் மறைத்த அந்தச் செயலேயாம். அஃது அடியவர்பாற் கொண்ட அன்பின் மிகுதியின் விளைவு. ஆதலின் அது கருனையை விளையச் செய்யவே, நாயனார் நவை தீர்ப்பாராயினர். இவ்வாறே, திருப்புக்கொளியூரில் முன்னாள் முதலை விழுங்கியதா லிறந்துபட்ட மகனை நினைந்து வருந்தியழுத மறையவனும், மனைவியும் ஆளுடைய நம்பிகளது வரவு தெரிந்து, வந்து, மகவிழந்த சித்த சோகந் தெரியாமே அவரை முகமலர்ந்து "அன்பு பழுதாகாமலெழுந்தருளப் பெற்றோ" மென்று தொழுதது கண்டு, "மைந்தன் றன்னை யிழந்ததுயர் மறந்து அடியார் வந்தணைந்ததற்கு மகிழ்ந்த இவரது துயர்தீர இறைவரது அருளால் மைந்தனை யழைத்துக் கொடுப்பேன்" என்று அருள்செய்து, இடர் தீர்ப்பாராய், நம்பிகள் புகுந்தனர் எனவரும் சரித வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது. (வெள்ளானைச் சருக்கம் - 8)