பக்கம் எண் :


324திருத்தொண்டர் புராணம்

 

கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்து - அப்பூதியாரது திருமனையினின்று பதிகம் பாடினும் இறைவர் அருள் புரிவாராயினும் திருக்கோயிலின் முன் கொணர்வித்தமை யென்னை? எனின், அச்செயல் "அரன்தான் செய்யும் தன்மையை அன்பர்க்கு ஆக்கியிடும்" திருவருட்டுணையாலாவது என்பதனை உலகறியச் செய்வதற் கென்பதாம். ஆளுடைய பிள்ளையார் திருமயிலாப்பூரில் சிவநேசரை நோக்கி "உலகவரறிய" அவது மகளென்பு நிறைந்த குடத்தைப் பெருமயானத்து நடம்புரிவார் பெருங்கோயிற் றிருமதிட் புறவாய் தலிற் கொணர்கென்று செப்பிய வரலாற்றினையும் ஆண்டு உலகவரறிய என்று இதன் நுட்பத்தினை ஆசிரியர் அறிவித்தமையும் கருதுக. (திருஞான . புரா - 1080).

கோயிலின் முன் - திருமதில்வாயிற் புறத்து. கொணர்வித்து - கொண்டுவரும்படி செய்து திருக்கோயிலின் முன் கொணரச்செய்து அங்குப் பதிகம் பாடிய செயலை இங்கு வரலாற்று முறையில் கூறிவிட்டனராதலின், பின்னர் விரிவு கூறும் அப்பூதியார் புராணத்தினுள் ஆசிரியர் விரித்துக் கூறாராகி, "முன் னெழுந்து சென்றே, யாவிதீர் சவத்தைநோக்கி யண்ணலா ரருளும் வண்ணம், பாவிசைப் பதிகம் பாடி" (அப்பூதி - புரா - 35) என்றும். "கூட வோங்கிய மனையிலெய்தி" (மேற்படி 38) என்றும், குறிப்பாலுணர்த்திய மட்டில் அமைந்தனர். ஆயின் முன்னர் எல்லாம் விரித்தமைபோல இச்செயலினையும் அப்புராணத்துள் விரிவு செய்யாது குறிப்பாலுணர வைத்து ஈண்டு விரித்தோதியமை என்னையோ? எனின், இவ்வாறு கொணர்வித்தமை நாயனராது அருளிச் செயலாதலின் இது அவர் புராணத்துள் விரித்தோதத் தக்கதென்பது.

ஒன்றுகொலாம் - இது திருப்பதிகத்தொடக்கச் சொற்றொடர். முதற்குறிப்பு. எடுத்து - தொடங்கி.

உடையான் - உலகங்களையும் உயிர்களையும் தமது உடைமையாக உடையவன். சீர் இவை இத்திருப்பதிகத்துள் ஒன்று கொலாம் என்பதாதியாகப் பத்துக் கொலாம் என்பதீறாக நாற்பதுவகையாற் பேசப்படுவன்.

பின்றை - பின்னை என்பது பின்றை எனத் திரிந்து வந்தது. பாட அதன்பின் என்க. பின்றைவிடம் - முன்னை ஊழினான் வந்ததன்று; பின்றை அருளால் வந்ததென்றுரைத்தலுமாம்."தொண்டினை மண்மேற் காட்டச்,செழுந்திருமலரை யின்று சினக்கரி சிந்தத் திங்கட், கொழுந்தணி வேணிக் கூத்த ரருளினாற் கூடிற்று"(598) என்ற வரலாற்றினைக் கருதுக.

உணர்ந்து எழுந்திருந்தான் - உணர்ந்து - துயிலுணர்ந்து எழுவானைப்போன்று. உணர்ந்தான் போன்று. வினையெச்சம் உவமைப்பொருள் தந்துநின்றது. "மேவியவுறக்க நீங்கி விரைந்தெழு வானைப் போன்று"(அப்பூதி - புரா - 36) என்று இப்பொருளை ஆசிரியர் பின்னர் விரித்துக் காட்டியமை காண்க. "உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு" (குறள்) என்றதும் காண்க.

எழுந்திருந்தான் - ஒரு சொல் நீர்மைத்தாய் எழுந்தான் என்ற பொருள்தந்து நின்றது. விடம் நீங்கி எழுந்தவுடன், பிள்ளை நாயனாரது திருவடியிற் பொருந்த வணங்கி அவரளித்த புனிதநீற்றினைப் பெற்று அணிந்து நின்றனன் என்று (அப்பூதி - புரா - 36) அறியப்படுதலின் இங்கு, எழுந்து - இருந்தான் என்று பிரித்து, முன்னை விடத்தால் உணர்வு நீங்கி வீந்தபோது, அதனை அருந்தவ ரமுதுசெய்யத் தாழ்க்க யார்க்கும் அறையேன் என்று திருந்திய கருத்தினோடு வீழ்ந்தானாதலின், இங்கு விடம் நீங்கி எழுந்தவுடன் அத்திருத்தொண்டின் நினைவின் தொடர்ச்சியிலே நின்று அங்கு முன்னே நின்ற தந்தையார் முதலியவரைச் சாராது,