பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்325

 

நாயனாரது திருவடிச் சார்பினையே, பற்றியிருந்தான் என உரைத்தலுமாம். இப்பொருளில் இருந்தான் - என்பதற்குத் தொண்டின் ஒழுக்கத்தில் நின்றான் என்க.

208

விடந்தீர்த்த திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்

பொது - பண் - இந்தளம்

ஒன்று கொலாமவர் சிந்தை யுயர்வரை, யொன்று கொலாமுய ரும்மதி சூடுவர்
ஒன்று கொலாமிகு வெண்டலை கையது, வொன்று கொலாமவ ரூர்வது தானே.

1

அஞ்சு கொலாமவ ராடர வின்படம், அஞ்சு கொலாமவர் வெல்புல னாவன,
அஞ்சு கொலாமவர் காயப்பட் டான்கணை, அஞ்சு கொலாமவ ராடின தாமே.

5

பத்துக் கொலாமாவர் பாம்பின்கண் பாம்பின்பல்,
பத்துக் கொலாமெயி றுந்நெரிந் துக்கன,
பத்துக்கொலாமவர் காயப்பட் டான்றலை,
பத்துக் கொலாமடி யார்செய்கை தானே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக்குறிப்பு :- "ஆவிதீர் சவத்தை நோக்கி அண்ணலா ரருளும் வண்ணம், பாவிசைப் பதிகம்பாடி" என்று ஆசிரியர் அறிவிப்பது காண்க. அப்பூதியாரது மகனைத் தீண்டிய அரவின்விடத்தைத் தீர்த்து அவனை எழச்செய்தல் சிவபெருமானுடைய திருவருளின் சிறப்பு என்பது "உடையான் சீர்பாட" என்றதனாலறிவிக்கப்பட்டது.

இக்குறிப்புடன் இத்திருப்பதிகம் அருளிச் செய்யப்பட்ட தென்பது "ஒன்று கொலாமவர் சிந்தை யுயர்வரை" என்று தொடங்கிப் (எடுத்து) "பத்துக் கொலா மடியார் செய்கை தானே"என்று முடிக்கும் வகையால், அடியார்களது அன்பின் உறைப்பும் தன்மையும் குறிக்கப்படுதலானும், "அஞ்சு கொலாமவராடர வின்படம்". - (5) "பத்துக் கொலாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்" - (10) என்று அரவின் விடம் போக்க அரவங்களுக்கு மூலமாய்ச் சிவபெருமான் அணியும் ஐந்தலையரவினைத் குறித்தலானும், உயரும்மதி சூடுவர் - என்றது அமிர்த கலையினை வளரவைத்த சிருட்டியினையும், வெண்டலைகையது என்றது சங்காரமாகிய ஒடுக்கத்தினையும் ஊர்வது ஊர்தியின் பாதங்கள் என்றவை ஒடுக்கமும் தோற்றமும் செய்தற்குக் காரணமாகிய அருளினையும் உணர்த்தி நிற்பனவாதலானும், சனனம் முதற்றோற்றமும் (4), ஊழி படைத்தன (7), வாசல் வகுத்தன (9), முதலியவை மரணத்தின்பின் புனருற்பவத் தொழில் உணர்த்துதாலானும், பத்துக்கொலா மெயிறுந் நெரிந்துக்கன (10) என்றது விரைவில் விடந்தீருந் தன்மையை உறுதிபற்றி யிறந்த காலத்தாற் குறிப்பித்துலானும், பிறவாற்றானும் அறியப்படும். அடியாரைப் பேணுதலும் ஆண்டானைப் பரவுதலுமே மக்காளயினார்க்கு உறுதிப்பொருளாவன என்பதுண்மை என அறுதியிட்டுரைத்தவாற்றால் எலும்பைப் பெண்ணாக வரச்செய்தும், மந்திரமாவதுநீறு என்றெடுத்துத் "திரு வாலவாயான்றிறுநீறே" எனவும், "ஆல வாயான் றிருநீறே" எனவும் பதிகத்தின் இருபகுதியால் முறையே கனற்சுரத்தை வலப்பாகத்தினின்றும் இடப்பாகத்தினின்றும் நீக்கியும், ஒன்றுகொலாம் என்பது முதலாக இங்கு வினாக்குறிப்புப் படப் போற்றியது போன்றே "உடையாய் தகுமோ இவளுண் மெலிவே" என்று வினாலிவிடந்தீர்த்தும், ஆளுடைய பிள்ளையார் இயற்றி யருளியவற்றை இங்கு நினைவு கூர்தல் பயனுடைத்தாகும்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஒன்று கொலாம் அவர்சிந்தை உயர்வரை - அடியார் திறமொன்றினையே பற்றி நின்ற அப்பூதியடிகளது சிந்தையின் பெருமை குறித்தது போலும். உயரும்மதி ஒன்று என்று கூட்டுக. இடு - பலியிடும். ஊர்வது - விடை. -(2) இலங்குந்தோடும் குழையும் ஆகிய இரண்டும் பெண்ணும் ஆணுமாகியதோர் தொன்மை உருவத்தை உணர்த்துவன. இனம்பற்றித் தோடு