பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்327

 

வந்து புகுந்து; வாகீசத் திருமுனிவர்....மேவும்நாள் - திருநாவுக்கரசராகிய திருமுனிவர், அவர்கள் அன்புடன் அளித்த விருந்தமுதினை அமுது செய்தருளி, அவர்கள்பால் விருப்பத்துடனே அங்கு எழுந்தருளியிருக்கு நாட்களில்,

209

1475. (இ-ள்.) வெளிப்படை. திருங்களூரினின்றும் திருமறையோராகிய அப்பூதியார் தம்மைப் பின்பற்றிவரப், பைங்கண் விடையினை யூர்தியாகவுடைய ஒப்பற்ற சிவபெருமானது திருப்பழனப்பதியிற் புகுந்து தங்கு பெருங்காதலுடனே தமது பெருமானது கழல்களைச் சார்ந்து பொங்கிய அன்பு பொருந்த வணங்கித் திருமுன்பு நின்று துதி செய்வாராய்,

210

1476. (இ-ள்.) புடை - பக்கத்தில்; மாலை மதி - மாலைக்காலத்திற் றோன்றும் பிறைச்சந்திரனாகிய; கண்ணிப் புரிசடையார் பொற்கழற் கீழ் - கொண்டை மாலையை அணிந்த புரிசடையினையுடையாரது பொற்பாதங்களின் கீழே; அடைமாலைச் சீலம் உடை அப்பூதியடிகள் தமை - அடைகின்ற இயல்பாகிய சீலத்தினையுடைய அப்பூதியடிகளை; நடை மாணச் சிறப்பித்து - ஒழுக்கத்தை மிக உயர்வாகப் பாராட்டி; நன்மை புரி...பாடினார் - நன்மையினையே சொல்லும் இனி ய தமிழின் இனிய தொடை மாலையாகிய திருப்பதிகச் "சொன்மாலை" யினைப் பாடினார்.

211

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1474. (வி-ரை.) அரும்...கண்டும் - உம்மை உயர்வுசிறப்பு. அருமையான மகனென்றும், அவன் இழந்த உயிரைப் பெற்றா னென்றும், அதனை நேரிற்கண்டு வைத்தும் என்றும் என மூன்று வகையானும் உயர்வுதோன்றச், சிறப்புமையை இறுதியிலமைத்து மூன்று பொருள்களையும் தழுவவைத்தார்.

கண்டும் - தளர்வெய்தி இடருழந்தார் - உயிர் இழந்தமை கண்டபோது தளர்வெய்தி இடருழத்தல் மக்கள் இயல்பு; இழந்தஉயிர் வெய்தி இடருழத்தல் மக்கள் இயல்புக்கு மாறுபட்டது. இத்துன்பத்தினை மெய்ப்பாடுகளால் உணர்ந்த நாயனார், மகனால் நேர்ந்த இடையூற்றினால் தாம் அமுது செயக் காலந்தாழ்த்தமையே அதற்குக் காரணமென்று கண்டார். ஆதலின் அது நீங்க விரைவில் அவர் மனையிற் புகுந்தனர் என்க. அப்பூதி - புரா - 37 - பார்க்க.

வருந்தும் - நாயனார் திருவமுது செய்தற்குரிய காலந்தாழ்க்க நேர்ந்து விட்டமை பற்றி வருந்தும். "சிந்தை நொந்தார்" என்பது காண்க. "யான்மிக வருந்துகின்றே னேயர்கோ னார்தா முற்ற, வூனவெஞ் சூலை நீக்கி யுடனிருப் பதனுக் கென்றார்" (ஏயர்கோன் - புரா - 401) என்றது காண்க.

மனைப்புகுந்து - பிள்ளையின் சவத்தை மறைத்து முன்பு வந்தபோது "எம்பெருமான் ! அமுதுசெய வேண்டுமென"ச் சொல்லி இறைஞ்சினார். இப்போது இந்நிகழ்ச்சியின்பின் அவ்வாறு கூறாமல் வாட்டத்துடன் நின்றனர். அதனைக் குறிப்பினால் அறிந்த நாயனார் தாமே திருக்கோயிலினின்றும் புறப்பட்டு அவர்தந் திருமனையில் புகுந்து அமுது செய்யும் பாங்கினி லமர்ந்தனர் என்க. "ஆங்கவர் வாட்டந்தன்னை அறிந்துசொல் லரசர் கூட, வோங்கிய மனையி லெய்தி யமுது செய் தருளவுற்ற, பாங்கினி லிருப்ப" (அப்பூதி - புரா - 38) என்பது காண்க.

வாகீசத் திருமுனிவர் - நாயனார். "வருஞானத் தவமுனிவர் வாகீசர்" (1266)

விருந்து அமுது செய்தருளி - விருந்து - இங்கு விருந்துக்குச் செய்யும் உபசார வகையெல்லாங் குறித்தது. ஆகுபெயர். அவ்வுபசாரங்கள், பூமியைக் கோமயத்தால் நீவிப் பொலிவுசெய்தல், சுதை போக்குதல், விளக்கு ஏற்றுதல், ஆசனம் இடுதல் பரிகலம் உரியபடி இடுதல், கை நீவ நீரளித்தல், அருச்சித்தல், நான்குவிதத்தால் ஆறுசுவை உணவு வகைகளை உரியபடி அமைத்து வைத்தல்,