பக்கம் எண் :


328திருத்தொண்டர் புராணம்

 

இன்சொற்களா லமுதூட்டுதல் முதலாயின. இவை யெல்லாம் அப்பூதியார் புராணம், 39-40-41 பாட்டுக்களில் விரித்துரைப்பது காண்க. விருந்து - புதுமை. ஆகுபெயராய்ப் புதிதாய் வருவோரைக் குறிக்க வழங்கப்படும். இங்கு நாயனார்க்கு அப்பூதியார் புதியராயினரன்றி, நாயனார் உணர்ச்சியில் அப்பூதியாருக்னார்க்கு பழைமையாயினரா யிருப்பவும், விருந்தென்ற தென்னையோ? எனின், "இக்கொடியிடைதோள், புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்" (திருக்கோவை - 9) என்ற அகப்பொருளிற் கூறியபடி, அவரது கூட்டம் என்றும் பழைமையாகாது புதிது புதிதாய் விளைந்து நிற்ப தொன்றாதலி னென்க. கணுந்தோறுங் காணுந்தோறும் புதிதுபுதிதா யிருத்தலின் திருவம்பலத்துக்கு அற்புதம் என்று பெயர் வழங்குமென்பது கோயிற்புராணத்துள் அறியப்படுதலும், "அற்புதத் கோல நீடி" (351) என்று இக்கருத்துப்பற்றி ஆசிரியர் துதித்தலும் இங்கு நினைவு கூர்தற்பாலன.

அமுது செய்தருளி - அப்பூதியாரும் மைந்தரும் தமது ஆணை வழியமைந்து, மருங்கு உடனிருந்து அமுது செய்யவும், சிந்தை மிக்கு இல்ல மாதர் திருவமுது எடுத்து நல்கவும் அமுது செய்தருளினார் என்று விரித்துக் கொள்க.

விருப்பினுடன் மேவுநாள் - அங்கு அப்பூதியாரும் அமர்தலைத் தாம்விரும்ப, நாயனாருடனிருத்தலை அப்பூரியார் விரும்ப, இவ்வாறு இருபாலும் எழுந்த விருப்பினோடு பொருந்தித் தங்கும் நாட்களில். "காதனண் பளித்துப் பன்னாள் கலந்துடனிந்த பின்றை" (அப்பூதி - புரா - 42) என்று பின்னர் இதனை விளக்குதல் காண்க. அப்பூதியார்தம்மிடத்திதுக் கொண்ட காதலால் விளைந்த அன்பின்றிறத்தின் பயனை அவர் பெறும்படி கொடுத்து என்க. கலத்தல் உணர்வால் ஒருவர் ஒருவரிற் கூடுதல்.

209

1475. (வி-ரை.) திருமறையோர் - அப்பூதியார். அவரும் சுற்றத்தாரும் ஏனை மறைவர்களும் எனினும் பொருந்தும்."பெருஞ் சுற்றமுடன் களிகூரத் தொழுது" (1476) என்றது காண்க.

பின்செல்ல - பெரியவர்களுக்கு முன்செல்ல லாகாது என்பது முறை.

பைங்கண் - கண்ணுக்குப் பசுமையாவது கருணை நோக்கமுடைமை.

தங்குபெருங் காதல் - முன்னே உள்ளத்திற் றங்கிக்கிடந்த முற்றிய பேரன்பு. காதல் - தம்பா லின்ப அன்புடைய அப்பூதியாரால் வழிபட வீற்றிருந்தமையால் பெருகிய அன்பு. "பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக், கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே" (பிள்ளையார்) என்ற கருத்துக்காண்க. "அப்பூதி, குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய்" என்ற தேவாரம் கருதுக.

தம் - தம்மையும் அப்பூதியாரையும் உளப்படுத்தியது.

பொங்கிய அன்புஉற - பெருங் காதலுடன் கழல் சார்ந்தார்க்கு, அவர் திருமுன்பு நின்றபோது உணர்ச்சியில் அன்பு உள்ளூறிப் பொங்கிப் பெருகிற்று என்க. தாமிருவரும் எண்ணாமலே உண்ணின்று கூட்டி வைத்து அன்பு பெருக ஊட்டிவைத்த திருவருட்டிறத்தை எண்ணியது அன்பு பெருகக் காரணமாயிற்று.

போற்று இசைப்பார் - பாடினார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

அன்பொடு - என்பதும் பாடம்.

210

1476. (வி-ரை.) புடை - (சடையின்) பக்கத்தில். புடை - திரண்ட என்பாருமுண்டு. மாலை - அந்தி மாலை. மாலை மதி - இங்குப் பிறையைக் குறித்தது. "மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கும் முடிச்சென்னி" என்ற தேவாரக் கருத்து. கண்ணி - கொண்டை மாலை. "அந்தியிளம் பிறைக்கண்ணி யண்ணலார்" (திருமூலர் புரா - 1). "மாதர்ப் பிறைக்கண்ணி யானை" முதலிய தேவாரங்களும் காண்க.