செல்லும் முன்பும், அங்கு நின்றும் அப்பூதியாருடன் திரும்பிய பின்பும், இங்கு வணங்கினர். அதன்பின் அருகில் உள்ள திருச்சோற்றுத்துறை முதலிய பல தலங்களையும் வணங்கிப் போந்த பின்பும் இங்குவந்து பலநாட்கள் தங்கியருளினர். இவை அப்பூதியாரது அன்பின் மேன்மையாலாகியன என்பது. தம்...சேவடி நினைந்து - தாம் விண்ணப்பித்ததனை எற்றுத் தமக்குத் திருவடி தீக்கைசெய்து ஆட்கொண்ட பேரருள் கருதி மீண்டும் அங்கு வணங்கச் சென்றனர். "நல்லா ரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே" என்ற ஆன்னேறார் திருவாக்கின்படி அப்பூதியடிகளது அன்பின் மேன்மை கருதி அடியார் கூட்டங் காரணமாகப் பலமுறை திருப்பழனம் சென்று வணங்கியும், அமர்ந்தும், இந்த நாயனார், தம்மை அடிசூட்டி ஆண்டானது பூசை கருதி அவ்வாறே திருநல்லூரினையும் வணங்க நினைந்தனர் என்பது. சூலைதந்து ஆட்கொண்ட திருவதிகைத் தலத்திற்கும் மீளச்செல்லாத நிலையிலுள்ள நாயனார் இத்தலத்தினைப் பல முறையும் நினைந்து தொழச் சென்றார் என்பது திருவடி தீக்கையின் உயர்ந்த பயனைக் காட்டுவதாம். இவையெல்லாங் குறிக்கத் தந்தலைமேற் றாள்வைத்த என்றும், அடிநினைந்து என்றும் கூறினார். தென்கரை யேறிச்சென்று - திருப்பழனம் காவிரிக்கு வடகரையில் உள்ள தலமாதலால், தென்கரையில் உள்ள திருநல்லூருச்குச் செல்பவர், காவிரியைத் தாண்டி அதன் தென்கரையேறிச் செல்லுதல்வேண்டும். திருப்பழனத்திலிருந்து முன் போந்த வழியே மீண்டும் திரும்பிக் காவிரியையும் குடமுருட்டி யாற்றையும் கடந்து காவிரிக்குத் தென்கரையில் சாலைவழியாய்க் கிழக்கு நோக்கிச் சென்றால் திருநல்லூரை அடையலாம். ஏறிசென்று என்றவற்றால் இத்துணையும் அறியவைத்தார். முன்பாட்டில் தானங்கள் பல பாடி என்றவிடத்துரைத் தவை பார்க்க. மணிமாடம் - இங்கு அழகிய மாடக்கோயில் என்ற பொருளில்வந்தது. மாடங்களையுடைய என்றுரைப்பாருமுண்டு. திருநல்லூர் மாடக்கோயில்களுள் ஒன்று. அமர்நீதிநாயனார் புராணத்திறுதியில் தலவிசேடம் பார்க்க. மாடத்திருநல்லூர் - இறைவன் எழுந்தருளியிருக்கும் மாடத்தினையுடைய ஊர். 1479. | அங்கணைந்து, தம்பெருமா னடிவணங்கி, யாராது பொங்கியவன் பொடுதிளைத்துப், போற்றிசைத்துப், பணிசெயுநாட், டங்குபெருங் காதலினாற் றாமரைமேல் விரிஞ்சனொடு செங்கண்மா லறிவரியார் திருவாரூர் தொழநினைந்தார். |
214 (இ-ள்.) வெளிப்படை. அங்குச் சேர்ந்து தமது பெருமானது திருவடிகளை வணங்கி ஆராது பொங்கி யஅன்பினோடு ஆனந்தித்துத் துதித்துத் திருப்பணி செய்திருக்கும் நாட்களில், தங்கிய பெரும் காதலினாலே, தாமரையில் இருக்கும் பிரமதேவனோடு செங்கண்ணையுடைய மாலும் அறிதற்கரிய சிவபெருமானது திருவாரூரைச் தொழுவதற்கு நினைவு கூர்ந்தனர். (வி-ரை.) தம்பெருமான் அடி - தமக்கு அருள்புரிந்து தலைமேற்சூட்டிய திருவடி. ஆராது பொங்கி அன்பொது திளைந்து - ஆராமை - நிறைவு பெறாமை. பொங்கிய அன்பு - உள் வற்றாது மேன்மேலும் வரும் அன்பு. திளைத்தல் - அந்த அனுபவத்தினுள் அழுந்துதல். போற்றிசைத்தல் - திருப்பதிகங்களைப் பாடுதல். |