பக்கம் எண் :


354திருத்தொண்டர் புராணம்

 

கும் - தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்டு கொலோ? என்றது அன்பர் பணி அரனருள்வழி பெற்ற பின்னே அடையத்தக்கது என்பதை விளக்குவதாம். முதல்வனது சீபாதங்களை யணையு மாறுணர்த்தும் பதினோராஞ் சூத்திரத்தின் பின் அணைந்தோர் தன்மையில் வைத்து "அன்பரொடுமரீஇ" என்று பன்னிரண்டாஞ் சூத்திரத்தில் உணர்த்தியது காண்க. "அன்பர்பணி செய்யவெனையாளாக்கி விட்டுவிட்டால், இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே" என்பது ஆன்றோர் வாக்கு. -(8) கரப்பர்கள் மெய்யை - வெற்றரையாகிய உடலைப் பாயினால் மூடுவர். தலைபறிப்பச் "சுகம்" என்னும் - தலைபறிக்கும்போது "இப் - துக்; பிற் - சுக்" (இப்போது துக்கம் - பின்னால் சுகம்) என்ற மந்திரம் சொல்லிக் கொண்டு பறித்தல் அமணர் வழக்கு. விருப்பமர் - பொருப்பனுக்கு விருப்பமானதையே தாமும் விரும்பும் தொண்டர் என்க. அமர்தல் - விரும்புதல். "அகனமர்ந்து", "வேண்டும் பரிசொன்றுண்டென்னி லதுவு முன்றன் விருப்பன்றே" (திருவா) என்றவை காண்க. -(9) கையில் இடுசோறு நின்று உண்ணும் - சமண அடிகண்மார்க்குப் பலிப்பாத்திரத் தன்றிக் கையில் கவளமாக இட, அந்த உணவை நின்ற நிலையில் அவர் உண்ணுதல் வழக்கு. (10) உற்ற கருமம் - பிறவி பெற்ற உறுதிபெறச் செய்யும் செயல்.

1486.

சூழுந் திருத்தொண்டர் தம்முடன் றோரண வாயினண்ணி,
வாழி திருநெடுந் தேவா சிரியன்முன் வந்திறைஞ்சி
யாழி வரைத்திரு மாளிகை வாயி லவைபுகுந்து
நீள்சுடர் மாமணிப் புற்றுகந் தாரைநேர் கண்டுகொண்டார்.

221

(இ-ள்.) வெளிப்படை. தம்மைச் சூழ்ந்த அத்திருத்தொண்டர்களுடனே தோரணங்கள் தூக்கிய திருவாயிலை யடைந்து, வாழ்வையுடைய திருவினால் நீண்ட தேவாசிரிய மண்டபத்தின்முன் வந்து வணங்கிச் சக்கரவாள மலைபோன்ற திருமாளிகையினது திருவாயில்களுட் புகுந்து, ஒளிவீசும் பெரிய அழகிய புற்றினில் விரும்பி எழுந்தருளிய இறைவரை நேரே கண்டுகொண்டனர்.

(வி-ரை.) சூழும் - தம்முடன் வந்தவர்களும் தம்மை எதிர் கொண்டவர்களுமாகிச் சூழும்.

தோரண வாயில் - திருப்பூங்கோயிலின் கோபுரத்தின் முன் வாயில்.

வாழி திருநெடுந் தேவாசிரியன் - வாழி - வாழ்வுடைய; வாழ்வைத்தரும் என்றலுமாம். வாழி - அசையென்றொதுக்குவாருமுளர். திரு - நெடும் - என்ற அடைமொழிகள் தேவாசிரியனுடைய சிறப்புணர்த்தின. திரு - இறைவனது அருட் டிரு. அதனால் நீளுதலாவது அத்திருவை நிறையப் பெற்ற பெரியோர் பலரும் என்றும் வீற்றிருத்தலும், அத்திருவைப்பெறும் பொருட்டுத் தேவர்களும் மற்றும் யாவர்களும் வந்து ஒழியாது வாயில் காத்துக் கொண்டிருத்தலுமாம். தேவாசிரியனைப் பற்றி 136 - 139 - பார்க்க. தேவாசிரியம் என்பது தேவாசிரியன் என மருவி வழங்குவதாயிற்று. ஆழிவரைத் திருமாளிகை - சக்கரவாள மலை போன்று அமைந்த பெரிய திருக்கோயில். இது பூங்கோயில் எனப்படும்.

வாயில் அவை - வாயில் - பால்பகா அஃறிணைப் பெயர். அவை - பகுதிப்பொருள் விகுதி. இனி, வாயிலவை - வாயிற்றொகுதி என்றலுமாம். "அவனவளது வெனுமவை" என்புழிப்போலத் தொகுதி பொருளது என்றலுமாம். பூங்கோயிலின் முதற் கோபுர வாயிலினைக் கடந்து சென்றால் திருமுற்றத்தில் முதலிற் காண