பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்355

 

வுள்ளது தேவாசிரிய மண்டபம். "மூதெயிற் றிருவாயின் முன்னாயது" (136) என்றதுகாண்க. அதனை வணங்கிச் சென்றால் திருமாளிகையின் முதல் வாயில் உள்ளது. அது இறைவர் ஆளுடைய நம்பிகளுக்குக் காட்சி கொடுத்துத் திருத் தொண்டத்தொகை பாடும்படி அருளிச் செய்து முதலெடுத்துக் கொடுத்தருளிய இடம். அவை - அத்திருவாயிலைத் தாண்டி உட்சென்றால் திருமூலட்டான நாதரை நேர் காணும்வரை உள்ள திருவாயில்கள்.

புற்றுகந்தார் - வன்மீகநாதர். "புற்றிடங்கொண்ட புராதனனை" (271) முதலியவை பார்க்க. அவர் திருமூலட்டானநாகர் எனப் பெறுவர். அவரது திருமுன்பு நின்றும் சென்றால் தரிசிக்க உள்ளது வீதி விடங்கர் என்னும் தியாகேசர் சந்நிதி. 271-ம் 275-ம் பார்க்க.

நேர் கண்டு கொண்டார் - அறிவு முழுதினும் நிரம்ப வெளிப்படக் கண்டார். "உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை யொழிவின்றி யுருவின்கண் - அணையு மைம்பொறி யளவினு மெளிவர" (திருஞான - புரா - 161) என்றபடி கண்டனர். கண்டார் என்னாது கண்டு கொண்டார் - என்றது கண்டு அதனால் விளைந்த ஆனந்தத்தினுள்ளே திளைத்துக் கொண்டனர் என்றதாம். கொள்ளுதல் - உட்கொள்ளுதல்.

221

1487.

கண்டு தொழுது விழுந்து கரசர ணாதியங்கங்
கொண்ட புளகங்க ளாக வெழுந்தன்பு கூரக்கண்க
டண்டுளி மாரி பொழியத் திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித் திருத்தாண் டகம்புனைந்து,

222

1488.

"காண்ட லேகருத் தாய்நினைந்" தென்னுங் கலைப்பதிகந்
 தூண்டா விளக்கன்ன சோதிமுன் னின்று துதித்துருகி
 யீண்டு மணிக்கோயில் சூழ வலஞ்செய் திறைஞ்சியன்பு
 பூண்ட மனத்தொடு நீடிரு வாயிற் புறத்தணைந்தார்.

223

1487. (இ-ள்.) வெளிப்படை. கண்டு, தொழுது, கீழே நிலம் பொருந்த வீழ்ந்த வணங்கிக், கை கால் முதலிய அங்கங்கள் எல்லாம் மயிர்க்கூச்செறிய, எழுந்து, அன்பு பெருகுதலினாற் கண்களினின்றும் நீர்த்துளிகள் மழைபோலப் பொழியத், திருமூலட்டான நாதரை அவரது தாமரை போன்ற பாதங்களைத் துதித்துப் போற்றித் திருத்தாண்டகப் பதிகத்தை அருளிச்செய்து,

222

1488. (இ-ள்.) வெளிப்படை. அதன்பின், "காண்டலே கருத்தாய் நினைந்து" என்று தொடங்கும் கலைப்பதிகத்தைத் தூண்டாவிளக்குப் போன்ற சுயஞ் சுடர்ச் சோதியாகிய புற்றிடங் கொண்டநாதர் திருமுன்பு நின்று துதிசெய்து, உள்ளுருகி, அன்பர்க்கணிய அழகிய அத்திருக்கோயிலினைச் சூழ்ந்து வலஞ்செய்து, வணங்கி, அன்பு பொருந்திய மனத்துடனே, நீண்ட திருவாயிற் புறத்தில் அணைந்தனர்.

223

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1487. (வி-ரை.) கண்டு - முன்பாட்டிற் கண்டபடி நேர் கண்டு.

தொழுது - மூன்றங்கம் பொருந்த அஞ்சலிசெய்து. விழுந்து - நிலத்திற் றிருமேனி முழுதும் பொருந்தக் கீழே விழுந்து.

கரசரணாதி அங்கம் - கரம் - கைகள். சரண் - கால்கள். ஆதியென்றதனால் உடலில் கொண்ட ஏனை மார்பு முதலிய எல்லாம் கொள்க.

புளகம் - எழுந்த மயிர்க்கூச்சு. மயிர்க் கூச்செறிதல் அன்பு மிகுதியின் மெய்ப்பாடுகளுள் ஒன்று.