தகுதியரா யுலகத்துக், காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்" (பிரமபுரம்) என்பது பிள்ளையார் திருவாக்கு. பார் வாழும் பொருட்டே வீதிப் பணி செய்து, பணிந்து, ஏத்தி, பரவி, செல்வார் என்றதை விளக்கும் பொருட்டு அதனை முதற்கண் வைத்தார். நெல் விளைய மழை பெய்தல் என்புழிப் போலக் காரணப் பொருட்டு. திருவீதிப் பணிசெய்து - பணிந்தேத்தி - பரவி - என்றவைகளை எதிர் நிரனிறையாகக் கொண்டு உழவாரப்படை, திருவாயின் மாலைகள், மழைவாருந் திருவடிவுஎன்றவற்றின் செயல்களாக முறையேவைத்து உரைத்துக்கொள்க. ஏத்துதல் வாயினாலும், பரவுதல் மனத்தினாலும் நிகழ்வனவாதலின் கூறியது கூறலன்மை யுணர்க. பரவுதல் - தியானித்தல் என்னும் பொருட்டு. பரவிச் செல்வாராய், நயந்து செல்வாராகி, (1492) அமருநாளில் என மேல்வரும் இரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்து கூட்டி முடிக்க. "தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனி (1405) என்ற திருப்பாட்டு இறைவன் தம்மைச் சமண் சிறையினின்று மீட்டவுடன் அப்பேரருளை நினைந்து, நாயனார் திருவதிகைக்கு மீண்டு திருவீதியுட் புகுந்தபோது, அடியார் காட்சிக்குப் புலப்பட்ட கோலங் காட்டிற்று. "சிந்தையிடை யறாவன்பும்" (திருஞான - புரா - 270) என்ற திருப்பாட்டு, அந்த அன்பு மேலும் பெருகிய நிலையில் நாயனார் ஆளுடைய பிள்ளையாரைக் காணும் விருப்போடு சீகாழியில் திருவீதியுட் புகுந்த போது ஆளுடைய பிள்ளையாரது அருட்காட்சிக்குப் புலப்பட்டபடி தொண்டர் திருவேடப் பொலிவாகிய கோலங் காட்டிற்று. இத்திருப்பாட்டு அடியார்க் கடிமையாந் திறமும் கிடைக்கும்படி கருணை புரிந்து ஆரூர்ப் பெருமானது பேரருளை நினைந்து ஆரூர்த் திருவீதியுள்ளே அவ்வன்பு மேலும் மிகப் பெருகிய நிலையில் நாயனார் புகுந்தபோது உள்ள கோலங் காட்டிற்று. இம்மூன்று திருப்பாட்டுக்களும் நாயனாரை நமது மனத்துள் நேரே கண்டு தியானித்து வணங்கி யுய்வதற்குப் பேருதவி புரிவன. நாயனாரது அன்பு வளர்ந்து முதிர்ந்து பெருகும் நிலையினை, முதற்பாட்டு ஐந்து சீருடைய கலித்துறையாலும், இரண்டாவது பாட்டு அதனினும் பெரிய அறுசீர்க்கழிநெடில் விருத்தத்தாலும், மூன்றாம் பாட்டு அதனினும் பெரிய அறுசீர்க்கழிநெடிலடி விருத்தத்தாலும் யாத்து அருளிய சிறப்பினால் ஆசிரியர் அறிவிக்கின்ற தெய்வக் கவிநலம் கண்டு களிக்க. இக்கருத்துக்களையே உட்கொண்டு நாயனாரது துதியாகக் காஞ்சிப் புராணத்தினுள் "இடையறாப் பேரன்பும்" என்ற பாட்டினுள் மாதவச் சிவஞான முனிவர் வைத்துப் போற்றிய திறமும் காண்க. இவ்வாறு அன்பு நிலை திருவாரூரில் மிகப் பெருக நிகழ்ந்தது ஆண்டானடிமையோடு அடியார்க் கடியராந் தன்மையும் பெறுவித்த பேரருள் நினைந்தமையாலாகியது என்க. "தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே" என்ற பதிகக் கருத்துக் காண்க. "தன்சீரடியார் குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்தோன்" என்ற திருக்கோவையார்க் கருத்தும் சிந்திக்க. 255 1491. (வி-ரை.) நீடுபுகழ் - என்றும், மணி - என்றும், நிலவும் - என்றும் வரும் அடைமொழிகள் முறையே திருவாரூரும், புற்றும், இடமும் என்ற இவற்றின் சிறப்பினைஉணர்த்தின. நிலவும் - இடம் என்று கூட்டுக. நிலவுதல் என்றும் நிலைபெற வீற்றிருத்தல். நீடுபுகழ் என்ற கருத்து "ஒருவனாய் உலகேத்த" என்ற திருத்தாண்டகப் பதிகத்துள் "முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக்கொண்ட நாளே" என்று மகுடத்தால் விளக்கப்பட்டிருத்தல் காண்க. மணி -அழகு; செம்மணி என்றலுமாம். புற்றினுள் அரவும், அரவினுள் மணியும்போல, இங்குத் திருவாரூர் - புற்று - நிருத்தர் - என்பவை ஆசனம் - மூர்த்திமான் என்று |