பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்387

 

குறிப்பு. என்னை? இவற்றின் காரணமாக நாயனார் திருப்புகலூரை இறைஞ்சுதலும், அங்கு ஆளுடைய பிள்ளையாருடன் கூடி எழுந்தருளியிருந்து அதன் தொடர்பாகப் பலகாலம் இவ்விரு பெரு மக்களும் ஒருங்கு சென்று உலகுக்குச் சைவ நெறி பாலிப்பதும், திருவீழிமிழலையிற் சிவனடியார்களுக்குச் சோறிட்டுக் காப்பதும், திருமறைக்காட்டில் இறைவரைத் தமிழ் வேதத்தால் நேர்காணச் செய்வதும், பின்னர் அங்கு நின்றும் தொடர்ந்துகொண்டு ஆளுடைய பிள்ளையாரது திருவவதார உண்மைகளாகிய பரசமய நிராகரிப்பும் திருநீற்றின் ஆக்கமும் பாண்டி நாட்டின்கண் நிகழ்வதும், நாயனாரது திருக்கயிலாய யாத்திரை நிகழ்வதும் கூடின ஆகலான் என்க. இத்திருவருட் குறிப்பே பின்னர் இறுதியில் நாயனார் திருப்புகலூரிற் சேர்ந்து இறைவருடைய திருவடி நீழலில் சிவானந்த ஞான வடிவேயாகி அமர்ந்திருக்கப் பெறும் நிகழ்ச்சியினையும் கூட்டுவதாயிற்று என்பதும் கொள்ளப்படும்.

ஒருப்படுதல் - ஒன்றுபட்ட மன எழுச்சி சேறல்.

ஒருவாறு தொழுதகன்று - பிரியமாட்டா நிலைமையால் ஒருபடியாகத் துணிந்து.

உள்ளம் வைத்து - மனத்தைத் திருவாரூரினிடமாகப் பதித்து. நாயனாரது திருமேனி மட்டில் ஒருவாறு ஆரூரினின்றும் பிரிந்ததேயன்றித் திரு உள்ளம் அங்கு நின்றது என்னும்படி. இது "முத்து விதானம்" என்னும பதிகத்தாலும், பிறவாற்றலு மறியப்படும். திருவாரூர் தொழுதவர் அங்கு மனம் வைக்காமல் நீங்க வியலாது என்பதனை ஆளுடைய பிள்ளையார், நம்பிகள், சரித நிகழ்ச்சிகளாலுமறிக.

பதி பிறவும் - இவை திருப்பள்ளியின் முக்கூடல், திருவிற்குடி, திருப்பனையூர் முதலாயின.

230

திருப்பள்ளியின் முக்கூடல்

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

ஆராத வின்னமுதை யம்மான் றன்னை யயனொடுமா லறியாத வாதியானைத்
தாராரு மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச் சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானை நீள்விசும்பா யாழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநா னுழன்ற வாறே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆராத இன்னமுது, நினைவார் நெஞ்சிற் படிந்தான், தன்னடியே சிந்தை செய்வார் வருந்தாமைக் காப்பான், நெதியாளன் தோழன், கலந்துருகி நைவார்தந் நெஞ்சினுள்ளே பானவன் என்பன முதலான அறியப்படுகின்ற பள்ளியின் முக்கூடலின்கண் எழுந்தருளிய இறைவரைப் பயிலாது பாழில் என் வாணாள் கழித்தவாறுதான் என்னே!

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஆர்தல் - நிறைதல். ஆராத - என்றும் நிறைவு பெறாத. பயிலுதல் - மனம் வாக்குக் காயங்களால் வழிபட்டு அவ்வொழுக்கத்துள் நிலைபெறுதல். - (2) சாமம் - சாம கானம். - (3) பொன்வரையே போல்வான் - "பொன்னார் மேனியன்." மேலான் - மேல் எழுந்தருள்பவன். ஆதியன் - முதல்வன். ஆதிரை நன்னாள் - சிவனுக்குகந்த நாள் ஆதலின் நன்னாள் என்றார். ஆளுடைய பிள்ளையார் அவதரித்ததும், அவரழுது ஞானப்பாலுண்டதும், பரவையார் அவதரித்ததும் இந்நாளாகும். நரசிங்க முனையரைய நாயனார் ஆதிரை நாள் தோறும் அடியாரை உபசரித்துப் பொன் கொடுத்துப் பேறு பெற்றார். - (4) தென்றிசைக்கே செல்ல - இறக்க என்னும் பொருளில் வந்தது. -