பிள்ளையாரது திருமணத்திற் சேவித்து வீடுபெறம் சிறப்பும், பிறவும் கருதி இவ்வாறு விதந்தோதினார். அவர்தம் புராணம் பார்க்க. திருமடம் - என்ற குறிப்பும் அது. மேவும் காலை - கேட்டருளி எதிரே சென்றார் - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக்கொள்க. 1497. (வி-ரை.) "ஆண்ட அரசு...மீண்டருளினார்" என்று கேட்டருளி - இஃது பிள்ளையார் கேட்டருளிய செய்தி. இதனால் பிள்ளையார் நாயனாரது நிகழ்ச்சிகளைக் கேட்க ஆவல் கொண்டிருந்தமையும், இவ்விரு பெருமக்களிடை வளர்ந்த அன்புப் பெருக்கினை அறிந்த அடியார்கள் அவர்கள் செய்திகளை அறிவித்து வந்தமையும் கருதப்படும். முன்னரும் "ஆண்ட வரசெழுந் தருளக் கேட்டருளி" (1446) என்றது காண்க. முன் அறியாமலேயும் உடைய மறைப்பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார்" (1442) என்றமையால் அடியார்கள், சிவன் திருவருணிகழ்ச்சிகளையும் அடியார் பெருமைகளையுமே பேசியும் கேட்டும் வந்தார்கள் என்பதும், இந்த நாளிற்போல வீண் வார்த்தைகள் பேசி வீணாட் கழித்தலில்லை என்பதும் ஈண்டுக் கருதப்படும். "மருவியாண் புறு கேண்மை யற்றை நாள்போல் வளர்ந்தோங்க" (1452) , "அன்புகொண்டு மீண்டருளினார்" (1453), "பின்னாக வெய்த விறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்" (திருஞான - புரா - 274) என்பவையும் கருதுக. நீண்ட சுடர் மாமணி - நீண்ட - காலமெல்லாவற்றையும் கடந்து நீண்ட. "நீள் சுடர் மாமணிப் புற்றுகந்தார்" (1486) அமர்ந்து வாழும் - அமர்தல் - விரும்புதல். வாழ்தல் - நிலைபெற வீற்றிருத்தல். மீண்டருளினார் - மீளுதல் - வருதல் என்னும் பொருளில் வந்தது. வடக்கினின்றும் திருப்பெருவேளூரிலும், திருவிளமரிலும் கும்பிட்டுத், திருவாரூருக்கு எழுந்தருளிய நாயனார், அங்கு நின்றும நேர் கிழக்காகத், திருக்கீழ்வேளூர் - திருச்சிக் கல் - திருநாகைக்காரோணம் முதலிய தலங்களுக்குச் செல்லாது, நேர் வடக்கில் திருப்புகலூர் நோக்கி மீண்டருளினார் என்பதும் குறிப்பு. இச்செயல் இறைவரது திருவருளினால் நிகழ்வதாயிற்று என்று (1495-ல்) முன் உரைத்ததும் ஈண்டுக் கருதற்பாலது. எதிர்கொள்ளம் விருப்பினோடும் - எழுந்தருளி எதிரே சென்றார் - முன்னர்க் "காண்டகைய பெருவிருப்புக் கைமிக்க திருவுள்ளக் கருத்தினோடும் ... எழுந்தருளி முன்னே வந்தார்" (1446) என்றது காண்க. பின்னர்த் திருப்பூந்துருத்தியில் பிள்ளையார் எழுந்தருளுவதைக் கேட்ட நாயனார் "எண்பெருகும் விருப்பெயத் வெழுந்தருளி எதிர்சென்றார்" (திருநா புரா - 393) என்பதும் இங்குச் சிந்திக்க. இச்செயல்கள் இவர்களது பெருமையினையும், அடிமைத் திறத்தின் சிறப்பையும் உணர்த்துவன. 232 1498. | கரண்டமலிதடம் பொய்கைக்காழியர்கோ னெதிரணையுங்காதல்கேட்டு வரன்றுமணிப் புனற்புகலூர் நோக்கிவரும் வாகீசர் மகிழ்ந்துவந்தார்; திரண்டபெருந் திருநீற்றுத் தொண்டர்குழா மிருதிறமுஞ் சேர்ந்த போதில் இரண்டுநில வின்கடல்க ளொன்றாகி யணைந்தனபோ லிசைந்தவன்றே. |
(இ-ள்.) வெளிப்படை. நீர்க்காக்கைகள் நிரம்பிய பெரிய பொய்கைகளையுடைய சீகாழியிலவதரித்த ஆளுடைய பிள்ளையார் அவ்வாறு தம்மை எதிர்கொண்டு அணைகின்ற அன்பின் திறத்தைக் கேட்டு, மணிகளை வாரி வரும் புனல் வளமுடைய திருப்புகலூரை நோக்கி வருகின்ற நாயனார் திருவுள்ள மகிழ்ச்சியுடன் எழுந்தருளி வந்தனர்; கூடிப் பெருகி வருகின்ற திருநீற்றுத் தொண்டர் கூட்டம் இருதிறத்திலும் சேர்ந்தபோதில் நிலவின் கடல்க ளிரண்டு ஒன்றுகூடி அணைந்தன போலப் பொருந்தியன அப்போதே. |