பக்கம் எண் :


392திருத்தொண்டர் புராணம்

 

துச் சொல்வீராக!" என்று கேட்க; அவரும் எதிர் அருளிச் செய்வார் - அவரும் எதிரில் விடையருள் செய்வாராகி,

234

1500. (இ-ள்.) வெளிப்படை. "மனத்துள் நிலவும் தென் திருவாரூர் நகரை ஆளுகின்ற, நீலகண்டராகிய பெருமானுடைய திருவாதிரைத் திருநாளின் மகிழ்வுடைய செல்வமானது இன்ன தன்மையுடையது, என்று என்ன சொல்வேன்!" என்று, "முத்து விதான மணிப்பொற்கவரி" என்று தொடங்கும் மொழி மாலையாகிய திருப்பதிகத்தினை அருளிச் செய்தனர்.

235

இந்த இரண்டும் பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1499. (வி-ரை.) அரசர் எதிர் சென்று இறைஞ்சப், பிள்ளையார் எதிர் வணங்கி, "உரைப்பீர்" என்று கூற, வாய்மையவரும் எதிர் அருளிச் செய்வாராய், "என்மொழிகேன்" என்று மொழிமாலை அருள் செய்தார் என இந்த இரண்டு மாக்களையும் கட்டி முடித்துக்கொள்க.

எதிர் சென்றிறைஞ்ச - பிள்ளையார் நாயனாரை "எதிர் கொள்ளும் விருப்பினோடும் ... எதிரே சென்றார்" (1497); அதுகேட்டு நாயனாரும் "மகிழ்ந்து வந்தார்" (1498); இவ்வாறு ஒருவரை ஒருவர் கண்டு வணங்கும் விருப்போடுவரும் இருபெரு மக்களுள் யாவருடைய ஆர்வம் மிக்கது? யாவர் முன்னே கண்டு வணங்கினர்? எனின், நாயனாரே பிள்ளையார் தம்மைக் காண்பதற்குமுன் முதலில் எதிர் சென்று பிள்ளையாரை யிறைஞ்சினர் என்பதாம். "திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே, யங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்த" (753) என்றதும், "அன்பின் வந்தெதிர் கொண்டசீ ரடியா ரவர்களோநம்பி யாளுவர் தாமோ, முன்பி றைஞ்சின ரியாவரென் றறியா முறைமையாலெதிர் வணங்கி மகிழ்ந்து" (244) என்றதும் ஈண்டுக் கருதத்தக்கன. பிள்ளையார், தம்மை எதிர்கொள்ள வந்தாரெனினும், தாமே முன்பு அவரை எதிர் சென்று கண்டு வணங்க வேண்டுமென்பது நாயனாரது திருவுள்ளம் என்க.

பிள்ளையார் எதிர்வணங்கி - நாயனார் இறைஞ்ச அதுபோலத் தாமும் எதிர் வணக்கம் செய்து. உரைப்பீர் - உரைப்பீராக! என வேண்டிக்கோடற் பொருளில் வந்த முன்னிலை ஏவல் வினைமுற்று.

அருநாமத்து அஞ்செழுத்தும் பயில் வாயமையவர் - சிவனது நாமமாகிய அரிய திருவைந் தெழுத்தினையும் மிகப்பயின்ற வாய்மை விளங்கிய நாயனாரும். இத்தன்மை, கடனடுவுள் கல்லிற்பிணைத்து நூக்கப்பட்டபோது "கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினு நற்றுணையாவது நமச்சிவாயவே" என்று நவச்சிவாயப் பதிகம் ஓதி அந்த வாய்மையால் கரையேறிய தன்மையாலும், "படைக்கலமாகவுன் நாமத் தெழுத்தஞ்சென் னாவிற் கொண்டேன்று", "நரப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து" என்பன முதலி திருவாக்குக்களாலும் விளங்கும். நாயனாரது திருவாக்கு எப்போதும் சிவனது திருநாமத்தையே சொல்லிக்கொண்டிருக்கும் என்பது. தெய்வவாய்மை, அஞ்செழுத்தும் பயில்வாய்மை என இரு பெருமக்களையும் வாய்மையாற் சிறப்பித்தமை காண்க. எதிர் - மறுமொழியாக.

திருவாரூர் நிகழ்பெருமை வகுத்துரைப்பீர் என்று கூற - ஒருவரை ஒருவர் கண்டபோது மக்களாற் கேட்கப்படுவது சிவன் பெருமையே யாம் என்பது குறிப்பு. பலநாட் பிரிந்து திரு ஆலவாயில் தம்மைக் காணவந்த சிவபாதவிருதயராகிய அந்த அப்பரைக் கண்டபோதும், ஆளுடைய பிள்ளையார் "எனையறியாப் பருவத்தே யெடுத்தாண்ட, பெருந்தகையெம் பெருமாட்டி யுடனிருந்ததே?"