என்று, (திருஞான - புரா - 880) பெருமானது நலம் கேட்டருளும் செயலையும் இங்கு நினைவு கூர்க. நாமும் நமது அன்பர்களைக் காணுங்கால் அழியுந்தன்மையான உலக நலங்களை வினவிப் போதுபோக்காது இவ்வாறு இறைவரது தன்மைகளை வினவி வாழ்வுபெறப் பயில்வது நலந்தரும். ஆரூர்தொழுது அங்குநின்றும் புகலூர் தொழும் நோக்கத்துடன் அரசுகள் எழுந்தருளினார் என்றறிந்தமையால் பிள்ளையார் அவர்பால் ஆரூர் நிகழ் பெருமை கேட்டருளினார் என்க. 234 1500. (வி-ரை.) சித்த நிலாவும் - உமது சித்தத்தில் பொருந்தும் எனவும், "அங்கு உள்ளம் வைத்து" (1495) என்றபடி அங்கு நின்றும் போந்தாலும் தமது மனம் அதனையே கொண்டுள்ளது எனவும், "பூதம் யாவையு முள்ளலர் போதென, வேத மூலம் வெளிப்படும்" (43) என்றபடி தேவர் முதலிய யாவடைய சித்தத்திலும் நிலாவுவது எனவும் உரைக்க நின்ற நயம் காண்க. தென் திருவாரூர் நகர் - திருவாரூர் நகருள் இறைவர் எழுந்தளிய பூங்கோயில் இருக்கும் பகுதி தென்றிருவாரூர் எனப்படும் என்ப. "தென்றிருவாரூர் புக், கெல்லை மிதித்தடியே னென்றுகொ லெய்துவதே" (நம்பிகள் - ஆரூர் - புற நீர்மை. 1) முதலிய திருவாக்குக்களும் காண்க. 1501-லும் இவ்வாறே கூறுவதும் காண்க. விறன்மிண்ட நாயனார் புராணத்திறுதியில் 631, 632 பக்கங்களில் அடிக்குறிப்புப் பார்க்க. ஆருர் நகர் ஆளும் - ஆளுதல் - விளங்கவீற்றிருந்து அங்குத் தம்மை அடைந்தாரைக் காவல் பூண்டருளுதல். "அமரர்நா டாளாதே யாரூ ராண்ட" (தாண்), "காவல்கொண்டு தனியாளும் கடவுட் பெருமான்"? "எல்லையிலா ஆட்சி புரிந்து" முதலிய திருவாக்குக்கள் பார்க்க. ஆதிசை நாளின் மகிழ் செல்வம் - நீர் வருநாளில் திருவாரூர் நிகழ் பெருமை உரைப்பீர்! என்று கேட்ட பிள்ளையாருக்கு அப்பெருமை - அங்கு நிகழ் பெருமை - யாவது திருவாதிரைத் திருநாளே யாகும் என்று குறிப்பித்து அதனைக் கூறத் தொடங்கினர். செல்வம் - அருமைப்பாடும் சிறப்பும் குறித்தது. "இத்தகைமைத்து என்று என் மொழிகேன்?" - அச்சிறப்பினை யான் எவ்வாறு சொல்வேன்?; அது சொல்ல முடியாதபடி அத்துணைச் சிறப்பினது என்றபடி. "இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்?, அங்ங னிருந்ததென்றுந்தீ பற" என்ற ஞான சாத்திரமுங் கருதுக. என்மொழிகேன் என்று அருள் செய்தார் - மொழிமாலை - இது பதிகக் கருத்து ஆசிரியர் கண்டு காட்டியபடி. திருவாதிரைச் செல்வம் சொல்லுந் தரமன்று! ஆயினும் நீர் கேட்டருளியவாற்றால் சொல்லும் அளவில் இவ்வாறிருந்தது அச்செல்வம் என்றதாம். "முத்துவிதானம் மணிப்பொற் கவரி" - என்று தொடங்கும் பதிகமாகிய மொழிமாலை என்க. இது பதிகக் தொடக்கம். இப்பாட்டு அத்திருப்பதிக யாப்பில் அமைந்த கவிநயமும் காண்க. என்றுரை செய்தார் - என்பதும் பாடம். 235 திருவாரூர் - திருவாதிரைத் திருப்பதிகம் XIX திருச்சிற்றம்பலம் | பண் - குறிஞ்சி |
| முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே பக்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள் அத்த னாரூ ராதிரை நாளா லதுவண்ணம்! |
|