பக்கம் எண் :


396திருத்தொண்டர் புராணம்

 

யாரை முருகனார் எனவே கொண்டு வழக்குரைப்பாருமுளர்.அது பொருந்தாமை மேல் அவர் புராணத்துட் காட்டப்படும்.

கும்பிட்டே - ஏகாரம் உறுதியும் தேற்றமும் குறித்து நின்றது; கும்பிட்ட பின்பே. "அழைத்துக் கொடுத்தே யவிநாசி எந்தை பெருமான் கழல்பணிவேன் என்றார்" (வெள் - சருக - 9) என்பது காண்க.

உம்முடன் வந்த இங்கு உடன் அமர்வேன் - உம்மோடு உடன் அமர்தலை இப்போதைக்குப் பெறாவிடினும் கும்பிட்ட பின் அதனிற் றலைநிற்பேன் என்பது. அப்பருட னமர்தலைப் பிள்ளையார் பெரிதும் விருமபினார் என்பதும் பெறப்படும். அமர்வேன் - விரும்புவேன் என்ற குறிப்பும் காண்க.

மைம்மலி - உறைசெய்து என்பனவும் பாடங்கள்.

236

1502.

மாமதி லாரூர் மன்னரை யங்கு வணங்கச்செந்
தாமரை யோடைச் சண்பையர் நாதன் றானேக
நாமரு சொல்லி னாதரு மார்வத் தொடுபுக்கார்
பூமலர் வாசத் தண்பணை சூழும் புகலூரில்.

237

(இ-ள்.) மாமதில் ... வணங்க - பெரியமதில் சூழ்ந்த திருவாரூர்த் தியாகராசரை அங்கு வணங்குதற்குச்; தாமரை ... தானேக - செந்தாமரை ஓடையையுடைய சீகாழி நாதராகிய ஆளுடைய பிள்ளையார் சென்றருளினாராக; நாமரு சொல்லின் நாதரும் - காவிற்பொருந்திய வாக்கினுக்கு நாதராகிய நாயனாரும்; ஆர்வத்தோடு - மிக்க ஆசையுடனே; பூமலர் ... புகலூரில் - பூக்கள் மலர்தலால் மணம்வீசும் குளிர்ந்த வயல்களாற் சூழப்பட்ட புகலூரில்; புக்கார் - புகுந்தனர்.

(வி-ரை.) ஆரூர் மன்னர் - "ஆரூர் நகர் ஆளும்" என்றதற் கேற்ப மன்னர்
என்றார்.

அங்கு வணங்க - மன்னர் எங்கும் உள்ளவர்; பிள்ளையார் அவரை எங்கும் கண்டு வணங்கும் வலிமை வாய்ந்தவர்; ஆயினும் அங்குப் போய்த் தென்திருவாரூரில் வணங்க என்றபடி.

செந்தாமரை ஓடை - ஓடை - நீரோடை. தர்மரை ஓடைச் சண்பை என்றார் பிள்ளளையாரது. திருவடையாள மாலை குறித்தற்கு. "கடிகொள்செங் கமலத்தாதின, செவ்விநீ டாம மார்பர் திருவடையாள மாலை" (திருஞான - புரா - 1216).

சண்பையர் நாதன் தான் ஏக - நாயனாரை எதிர்கொண்டு சந்தித்து ஆரூர்ச் சிறப்புக்கேட்ட அந்த இடத்திலிருந்தபடியே, அப்பொழுதே ஆரூர் நோக்கிப் புறப்பட என்க. அவ்வாறு சந்தித்த இடமாவது "திருப்புகலூர்ப் புறம்பணையெல்லை கடந்து போந்து " (திருஞான - புரா - 493) நின்ற இடம். இது பிள்ளையாரது ஆர்வமிகுதியைப் புலப்படுத்தி நிற்பதோடு உலகரை அறிவுறுத்தி வழிகாட்டி நிற்கும் திறமும் காண்க.

நாமரு சொல்லின் நாதர் - நாவுக்கரசர். மருவுதல் - பொருந்துதல். நாமரு - என்றது விவரணம்.

ஆர்வத்தொடு புக்கார் - புகலூரில் - புகலூர் தொழுவதனை எண்ணிக் கொண்டே திருவாரூரினின்றும் சேர்ந்தனராதலின் ஆர்வமிக்குப் புகுந்தனர். புக்கார் - புகலூரில் - தாம் பின்னர்ப் புகலாக அடைந்து திருவடி நீழலிற் சிவாநந்த ஞானவடிவாகி அமரப்பெறும் அந்த ஊரில் இப்போது புகுந்தனர் என்று குறிக்கப் புக்கார் என்றார். வினைமுற்று முன்வந்தது செயல்முற்றிய விரைவும் ஆர்வமிகுதியும் குறித்தது.