பக்கம் எண் :


398திருத்தொண்டர் புராணம்

 

1504.

தேவர் பிரானைத் தென்புக லூர்மன் னியதேனைப்
பாவியன் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடும்
மேவிய காலந் தோறும் விரும்பிற் கும்பிட்டே
யோவுத லோவு திருப்பணி செய்தங் குறைகின்றார்,

239

1505.

சீர்தரு செங்காட் டங்குடி நீடுந் திருநள்ளா
றார்தரு சோலை சூழ்தரு சாந்தை யயவந்தி
வார்திகழ் மென்முலை யாளொரு பாகன் றிருமருகல்
ஏர்தரு மன்பாற் சென்று வணங்கி யின்புற்றார்.

240

1504. (இ-ள்.) வெளிப்படை. தேவர்களுக்கெல்லாம் தலைவரை, அழகிய புகலூரில் நிலைபெற்று எழுந்தருளிய தேன் போன்றவரைப், பாக்களின் தன்மை முற்றும் பொருந்திய செந்தமிழ் மாலைகளைப் பாடி, அன்புடனே, பொருந்திய காலங்களிலெல்லாம் விருப்பத்ோடு கும்பிட்டே, நீக்குதலில்லாத திருப்பணிகளைச் செய்துகொண்டு அங்குத் தங்குவாராகி,

239

1505. (இ-ள்.) வெளிப்படை. சிறப்புத் தருகின்ற திருச்செங்காட்டங்குடியும், திருநீடும் நள்ளாறும், பூமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த. மங்கை - யவந்தியும், வாருடன் விளங்கும் மெல்லிய முலையினையுடைய அம்மையை ஒரு பாகத்துடைய பெருமானது திருமருகலும், சிறப்புடைய அன்பினாற் சென்று வணங்கி இன்பமுற்றார்.

240

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1504. (வி-ரை.) தேவர்பிரானை - "தேவர்க்குந் தேவராவார்" (நேரிசை - 8) என்ற இத்தலப் பதிகக் குறிப்பு. தென புகலூர் - தென் - அழகு. பூம்புகலூர் என்பது காண்க.

புகலூர் மன்னிய தென் தேனை - என்று கூட்டித், தென் - சுவை என்று கொண்டு புகலூரில் உள்ள சுவையுள்ள தேன் போன்றவர் என்றுரைத்தலு மொன்று. தேனினுமினியர்என்பது. "கரும்புங்கைத்தது தேனும்புளித்தமே" (திருமந்திரம்).

பா இயல் - பா - பாக்களின் தன்மை; இயலுதல் - முற்றும் பொருந்தி நிகழ்தல். இயற்பா மாலை என்று கூட்டி உரைத்தலுமாம். தமிழ் - தேவாரத் திருப்பதிகங்கள்.

காலம் - பூசைக்குரிய காலங்கள். "காலங்களில்" (1491). தோறும் - என்றதனால் திருப்பள்ளியெழுச்சி முதலாகத் திருவத்த யாமம் வரை பூசைகள் நிகழும் காலங்களிளெல்லாம் கும்பிடுதல் உரியதாகும் என்பதும், அன்புசிறந்தோர் இவ்வெல்லாக் காலங்களிலும் சென்று கும்பிடுவர் என்பதும் பெறப்படும். இவையொழிந்த நேரங்களில் மற்றும் உரிய வேலைகளைச் செய்வர் என்க. "சொன்மாலை யாற்காலமெல்லாந் துதித்திறைஞ்சி" (திருஞான - புரா - 164).

ஓவுதல் ஓவு - ஓவுதல் - நீங்குதல். ஓவுதல் ஓவு - நீங்குதலை நீங்கிய - நீங்குதலில்லாத; எதிர்மறை முகத்தாற் கூறினார் இடையறாத உறுதிப்பாட்டினை யுணர்த்தற்கு. "ஓவுநாள் உணர்வழியுநாள் ... என்றலாற் கருதேன்" (தேவா - நம்பி - கொடுமுடி). "அரியறியா மலர்க்கழல்க ளறியாமை யறியாதார்" (875) என்ற விடத்துரைத்தவை பார்க்க.

திருப்பணி - மனம் வாக்குக்காயம் என்ற மூன்றாலும் செய்யும் பணிகள். 1490 பார்க்க. இங்கு உழவாரத் திருப்பணியாகிய கைத்திருப்பணி என்றமட்டில் கொள்வாருமுண்டு.