"உன்னுடன் பிறந்தான் முன்னமே முனியாகி யெனையடையத் தவமுயன்றான்" (1313) என்ற சரிதப் பகுதிகளின் அகச்சான்று. செல்லாத - மீளப் பிறவியிற் செல்லாத. செந்நெறி - செம்மை நெறி.-(9) உரிய பல தொழில் - சரியை முதலிய நெறிகளின் வழிபாடுகள். உலப்பிலான் - குறைவு இல்லாதவன். உலக முழுதும கொடுப்பினும் மேலும் குறைவுபடாத திருவுடையவன். தலவிசேடம் :- திருச்செங்காட்டங்குடி - விநாயகக் கடவுள், கயமுகாசுரனை வீட்டியபோது அவனது இரத்தம் வெள்ளம் பரந்த இடம் என்ற காரணத்தால் இஃது திருச்செங்காடு எனப் பெயர் பெறும். அவ்வாறு அசுரனைச் சங்கரித்த பின் அவ்விடத்து ஓர்பால் கணபதிக் கடவுள் சிவபெருமானைத் தாபித்துப் பூசித்ததலம் இதுவாகும். இக் காாரணத்தால் கணபதீச்சரம் என்று இக்கோயிலுக்குப் பெயர் வழங்கும். "ஏடவிழலங்கற் றிண்டோ ளிபமுகத் தவுணன் மார்பி, னீடிய குருதிச் செந்நீர் நீத்தமா யொழுகும் வேலைப், பாடுற வருங்கா னொன்றிற் பரத்தலி னதுவே செய்ய காடெனப் பெயர் பெற்றின்னுங் காண்டக விருந்ததம்மா" எனவும், "மீண்டுசெங் காட்டி லோசார் மேவிமெய் ஞானத் தும்பர், தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப், பூண்டபே ரன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோாக்குக், காண்டகு மனைய தானங் கணபதீச் சரம தாகும்" எனவும் வரும் கந்தபுராணங் காண்க. (கயமுகனுற் - பட - 250, 264). சிறுத்தொண்ட நாயனார் அவதரித்துப் பேறுபெற்ற வரலாறும், ஆளுடையபிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் எழுந்தருளி அவருடன் இருந்து உபசரிக்கப்பெற்ற வரலாறும் முதலிய அவ்வவர் புராணங்களுட் காண்க. சிறுதொண்ட நாயனார் அரசனுக்காகச் சேனையுடன்போய் பகைவரது வடபுலத்து வாதாவித்தொன்னகரத்து வலிய அரணை அழித்து அங்கிருந்து கொண்டுவந்து தாபித்த கணபதி இக்கோயிலில் வாதாபி கணபதி என்ற பெயரால் வழிபடப்பெற்று விளங்குகின்றார். இசைவாணர்கள் "வாதாபி கணபதிம் பஜே". என்று தொடங்கிப் பாடும் பாட்டு இவரைப் பற்றியது என்பர். சிறுத்தொண்ட நாயனாருக்கு அருள் செய்யும் பொருட்டாக வைரவச் சைவக்கோலத்தோடு எழுந்தருளிய உததராபதியார் அமர்ந்திருந்த திருவாத்திமரம் இக்கோயிலில், அவரது உற்சவமூர்த்தி சந்நிதிக் கெதிரில் உள்ளது. சந்நிதிக் கெதிரில் சிறுத்தொண்ட நாயனார், திருவெண்காட்டு நங்கை, சீராள தேவர், சந்தனத் தாதியார் எழுந்தருளியுள்ளார். தெற்கு வீதியின் மேல்கோடியில் சிறுத்தொண்டரது திருமனை இருந்ததென்பர். அங்கு உத்தராபதியாரது திருவுருவம் அமைக்கப்பட்டு அத்திருவிழாவும் ஆண்டு தோறும் கொண்டாடப் பெறுகின்றது. சிறுத்தொண்ட நாயனாருக்கும் மனைவியார்க்கும் மகனார்க்கும் முறையே அருளும் பொருட்டு வெளிப்பட்டு இறைவர் "மலைபயந்த தையலோடும் சரவணத்துத் தனயரோடுந்" தாமணைந்து திருவடி சேர்த்துக் கொண்ட பெருமை பெற்றது இத்திருத்தலம். சிறுத்தொண்ட நாயனாரது பெருமையும் சீராள தேவரது பெருமையும் திருப்பதிகத்துப் போற்றப்பெற்றன. "சீராளன் சிறுத்தொண்டன செங்காட்டங்குடி" என்பதும் பிறவும் காண்க. சுவாமி - கணபதீச்சுரர்; அம்மை - திருக்குழனன்மாது; மரம் - திருவாத்தி; தீர்த்தம் - சூரிய தீர்த்தம்; பதிகம் - 3. நன்னிலம் என்ற புகைவண்டி நிலயத்தினின்றும் கிழக்கில் 4 நாழிகை யளவில் உள்ள திருப்புகலூரையும், அங்கு நின்று தெற்கே ஒரு நாழிகை யளவில் உள்ள திரு இராமனதீச்சரத்தையும் கடந்து சென்றால். கிழக்கே மட்சாலைவழி இரண்டு நாழிகை யளவில் இதனை அடையலாம். (இராமனதீச்சரம் என்பது கண்ணபுரம் என வழங்கப்படும் ஊரின் கிழக்கில் உள்ளது). இது காவிரிக்குத் தென்கரையில் 79-வது தலம். |