பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்409

 

                           (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு சில நாள்கள் சென்ற பின்னே, திருவாரூர்த் திருநகரை ஆட்சிபுரியும் பவளம் போன்ற சடையினையுடைய கண்ணுதலாராகிய இறைவரைத் தொழுது கொண்டு, இப்பால், மெய்ப்பொருளாகிய ஞானத்தினை உண்டருளிய சீகாழியிலவதரித்த முப்புரி நூலணிந்த மார்பினராகிய எமது ஆளுடைய பிள்ளையாரும திருப்புகலூரில் வந்தருளினர்.

                            (வி-ரை.) அப்படி சின்னாள் சென்ற பின் - அப்படி - முன்பாட்டிற் கூறியவாறு திருப்புகலூரையும் பிரியாது, திருச்செங்காட்டாங்குடி, திருநள்ளாறு, திருமருகல் முதலிய தலங்களையும் கும்பிட்டு, நாயனார் மீண்டும் திருப்புகலுரில் வதிந்தருளியபடி. பிள்ளையார் திருவாரூரைத் தொழுது வந்தே உம்முடன் வந்திருப்பன் என்று சென்றருளியபின், அவரது வருகையை எதிர்நோக்கி நாயனார் திருப்புகலூரிலும், அணிமையில உள்ள ஏனைத் தலங்களிலுமாகத் தங்கிச் சில நாள் தொழுதிருந்தனர் என்பது.

                           துப்பு - பவளம். வேணி - சடை. இறைவரது சடை சிவந்த நிறத்தால் பவளம் போன்றது. "செஞ்சடைவானவர்" - அருண சடேசர் முதலிய வழக்குக்கள் காண்க.

                           ஞானம் பெற்றவராகிய மார்பரும் - தொழுது - இப்பால் - புகலூரில் - வந்தார் என்று கூட்டுக.

                            மார்பரும் - நாயனார் எதிர் பாத்திருந்த அவரும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.

இப்பால் - அணிமைச் சுடடுப் பிள்ளையார் நாயனாரிருந்த புகலூரை நோக்கி வந்தமை காட்டி நின்றது.

மெய்ப்பொருள் ஞானம் - சிவஞானம். "சிவனடியே சிந்திக்கும்" (திருஞான - புரா - 70) பார்க்க. மெய்ப்பொருளை அறியும், அறிவிக்கும், அனுபூதியாகக் கூட்டும், ஞானம் என்று எல்லா வகையாலும் உரைகக் நின்றது. மெய்ப்பொருள் ஆகிய இறைவன் தந்த ஞானம் என்றலுமாம்.

                            எங்கள் - எம்மை ஆளுடைய உரிமை குறித்தது.

                            வந்தார் புகலூரில் - நாயனார்பால் அருளியபடி அவரை நினைந்த வண்ணமாகப் பிள்ளையார் வந்த செயலின் விரைவு குறிக்கப் பயனிலையை முன் வைத்தார். "நங்கடந்திரு நாவினுக் கரசரை நயந்து" (திருஞான - புரா - 517) என்றது காண்க.

241

வேறு

1507.

பிள்ளையா ரெழுந்தருளப் பெருவிருப்பால் வாகீசர்
உள்ளமகிழ்ந் தெதிர்கொண்டங் குடனுறையு நாளின்கண்
வள்ளலார் சிறுத்தொண்டர் மற்றவர்பா லெழுந்தருள
எள்ளருஞ்சீர் நீலநக்கர் தாமுமெழுந் தருளினார்.

242

(இ-ள்.) வெளிப்படை. பிள்ளையார் எழுந்தருள - ஆளுடைய பிள்ளையார் அவ்வாறு எழுந்தருளினாராக; பெருவிருப்பால்....நாளின்கண் - பெருவிருப்பினாலே திருநாவுக்கரசு நாயனார் மனமகிழ்ந்து அவரை எதிர்கொண்டு அழைத்து வந்து திருப்புகலூரிலே அவரோடு உடனாக உறைத்திருக்கும் நாளில்; வள்ளலார்...எழுந்தருளினார் - வள்ளலாராகிய சிறுத்தொண்ட நாயனார் அவ்விரு பெருமக்களிடதது எழுந்தருளக், கெடுதலில்லாத சிறப்புடைய திருநீலநக்க நாயனாரும் எழுந்தருளினார்

(வி-ரை.) உள்ளமகிழ்ந்து எதிர்கொண்டு. "ஆரூர் கும்பிட்டே உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன்" (1501) என்று பிள்ளையார் அருளிச் சென்றாராதலின், அவரது வரவையும், உடன்மரும் இன்பத்தினையும் எதிர் நோக்கியிருந்த நாயனார் மிக மகிழ்ச்சியுடன் ஊர்க்குப் புறம்போந்து எதிர் கொண்டனர் என்க.