இனித் திருப்பூந்துருத்தியில் எதிர்கொள்ளும் வரலாறும் பின்னர்க் காண்க. (திருநா - புரா - 393.) உடன் உறையும் - "அன்பரொடு மரீஇ" என்ற சிவஞான போதப் பன்னிரண்டாஞ் சூத்திரத்தின் முடிந்த உண்மைக்குச் சிறந்த இலக்கியம் இதுவே என்க. "உடன்உறைவின் பயன் பெற்றார்" (1509) என்று இப்பொருளைப் பின்னர் மேலும் சிறக்க ஆசிரியர் விளக்கியருளுதல் காண்க. வள்ளலார் சிறுத்தொண்டர் - இப்புராணத்தினுள் சிறுத்தொண்ட நாயனாரைக் குறிப்பிக்கும் முதல் இடம் இதுவாதலின் அவர் தம் பெருமை, மற்று யாவராலும் கொடுக்கும் தன்மைத்தல்லாத பெருங்கொடையாம் என்பார் வள்ளலார் என்றார். அவரது சரிதக் குறிப்பாகும். எழுந்தருள - எழுந்தருளினார் - அருட் பெரியோர்களது வருகையைச் சிறக்கக் கூறும் சைவ மரபு வழக்குப் போற்றப்பட்டது. எள்ளரும் சீர் - "நிறையினார் நீலநக்க னெடுமா நகரென்று தொண்ட, ரறையுமூர் சாத்தமங்கை" என்று ஆளுடைய பிள்ளையாரால் திருப்பதிகத்துச் சிறப்பிக்கப்பட்ட சிறப்பு. எள்ளரும் - குறைவில்லாத - இகழ்ச்சியொன்றும் இல்லாத. தாமும் - முன் எழுந்தருளிய சிறுத்தொண்டருடன் அவரும் என உம்மை இறந்தது தழுவியது. பிள்ளையாரும் அரசுகளும் திருப்புகலூரில முருகநாயனாரது திருமடத்தில் ஒரு சேர எழுந்தருளியிருக்கும சிறப்புக்கேட்டு இந்த இரண்டு நாயன்மார்களும் அவர்களைக் கண்டு தொழுது போற்றி உடனிருக்கும் வாழ்வு பெறற் பொருட்டு எழுந்தருளினர். இஃது அடியார் தன்மை. "ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட் டவர்கரும முன்கரும மாகச் செய்து, கூசிமொழிந் தருண்ஞானக் குறியி னின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே" (12-2) என்று இத்தன்மையைச் சிவஞானசித்தியார் பேசுவது காண்க. இவ்வாறு மற்றும் பல அடியார்களும் எழுந்தருளிச் சேர்ந்ததும் காண்க. 242 1508. | ஆங்கணையு மவாகளுட னப்பதியி லந்தணராம் ஓங்குபுகழ் முருகனார் திருமடத்தி லுடனாகப் பாங்கில்வருஞ் சீரடியார் பலருமுடன ப்யில்கேண்மை நீங்கரிய திருத்தொண்டி னிலையுணர்ந்து நிகழ்கின்றார். |
243 1509. | திருப்பதிகச் செழுந்தமிழின் றிறம்போற்றி மகிழ்வுற்றுப் பொருப்பரையன் மடப்பாவை யிடப்பாகர் பொற்றாளில் விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்துரைத்தங் கொருப்படுசிந் தையினார்க ளுடனுறைவின் பயன்பெற்றார். |
244 1508. (இ-ள்.) ஆங்கு ஆணையும் அவர்களுடன் - அவ்வாறு வந்த சிறுத்தொண்ட நாயனார், திருநீலநக்க நாயனார் என்னுமவர்களோடும்; அப்பதியில்.......திருமடத்தில் - அத்திருத்தலத்தில் அந்தணராகிய ஓங்கும் புகழினையுடைய முருக நாயனார் திருமடத்திலே; உடன் ஆக - உடன் கூடியவர்களாக; பாங்கில்வரும்....நிகழ்கின்றார் - அந்தப் பாங்கில் வரும் சிறப்புடைய அடியார் பலர்களும் உடன் பயிலும் அன்பின் சிறப்பினால் நீங்குதற்கரிய திருத்தொண்டின் நிலைமையினை உணர்ச்சியிற் கைவரப்பெற்று நிகழ்கின்றாராகி, 243 1509. (இ-ள்.) திருப்பதிகம்........மகிழ்வுற்று - திருப்பதிகங்களாகிய செழுந்தமிழின் திறத்தினைத துதித்து மகிழ்ந்து; பெருப்பு அரையன் மடப்பாவை இடப்பாகர் பொற்றாளில் விருப்புடைய - மலையரசனதுமகளாராகிய உமையம்மையாரை இடப்பாகத்து வைத்த சிவபெருமானது திருவடிகளில் மிக்க அன்புடைய; திருத்தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து - திருத்தொண்டர் |