களுடைய பெருமையை விரித்துப்பேசி; அங்கு - அத்தன்மையினால்; ஒருப்படு சிந்தையினார்கள் - ஒன்றுபடும் மனமுடையவர்களாகி; உடன் உறைவின் பயன் பெற்றார் - அடியாருடன் உறைதலால் வரும் சிவானந்தமாகிய பெரும்பயனைப் பெற்றார்கள். 244 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1508. (வி-ரை.) அந்தணராம் ஓங்கு புகழ் முருகனார் - முருக நாயனராது சிறப்பும் புகழும் பற்றி 1021 முதலிய திருப்பாட்டுக்களில் விரித்துப் பேசப்பட்டது. உடனாக - சீர் அடியார் பலரும் உடன் பயில் - உடன் பயில் என்றது ஒருங்கு கூடித் தங்கியதனையும், உடனாக - என்றது சிவஞான உணர்ச்சியிற் கலந்து ஒன்று பட்ட தன்மையினையும் குறித்தன. அவர்களுடன் - உடனாகப் - பயில் என்று கூட்டுக. பாங்கில் வரும் - பாங்கு - செம்மை மனப் பண்பாகிய அன்பின் திறம். கேண்மை - கேண்மையினால் நீங்கரிய திருத்தொண்டின் நிலை - எக்காலத்திலும் திருவடிப்பற்றினை விடாது திருத்தொண்டில் நிலைபெற்றிருத்தல். இந்நிலையின் தன்மை "இடரினுந் தளரினும்" என்ற ஆளுடைய பிள்ளையாரது திருவாவடுதுறைப் பதிகத்துள் விரித்துக் கூறப்படுவது காண்க. இளையான் குடிமாறனார் முதலிய நாயன்மார்களது சரித வரலாறுகளையும் கருதுக. நிலை உணர்தலாவது - மனத்தினுள் அனுபூதியில் வருதல். சிவானுபவம் சுவானுபூதிகமாய் வருதல். நிகழ்கின்றார் - அவ்வுணர்ச்சியிற் பிறழாது ஒழுகுகின்றாராய்; முற்றெச்சம். நிகழ்கின்ற தன்மை மேல்வரும் பாட்டில் விரிக்கப்படுவது. நிகழ்கின்றா(ராய்ப்) - போற்றி - மகிழ்வுற்று - உரைத்து - சிந்தையினார்க(ளாகி) மகிழ்வுற்றார் என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. அவர்களுடன் - உடனாகப் பாங்கில் வரும் என்றது சிறுத்தொண்டர் - திருநீல நக்கர் என்ற அவர்களுடனே வந்த அடியவர்களும், அவர்கள் வரவினையும் அரசுகள் பிள்ளையார் இவர்களது வரவினையும் கேட்டு அணைந்த ஏனைய அடியவர்களும், பாங்கு - சிவனடிமைத்திறத்தின் பாங்கு. வெறும் சோற்றின் பொருட்டும், ஏனை உலகநிலைகளின் பொருட்டும் கூடும் ஏனை வீண் கூட்டத்தினின்றும் பிரிக்கப் பாங்கில் வரும் என்றார். பாங்கமரும் - என்பது பாடம். 243 1509.(வி-ரை.) திருப்பதிகச் செந்தமிழின் திறம் - ஆளுடைய பிள்ளையாரும் அரசுகளும் அருளிய தேவாரத் திருப்பதிகங்களினது செந்தமிழ் ஆகிய சொற்றிறமும், அவற்றாற் கிடைக்கப்பெறுவதாகிய சிவானந்தப் பொருட்டிறமும். போற்றுதல் - பலகாலும் பயின்று சிந்தித்துப் பாராட்டுதல். இவ்வாறு அடியார்கள் பலருங்கூடித் திருப்பதிகங்களைப் பயின்றதனைக் கேட்டு இங்கு நாகணப் புட்களும் அப்பதிகங்களைத் தமது இனிய குரலில் பாடுவன என்று "சாரு மடமென் சாரிகையின், பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந்தேன் பொழியுமால்" (1019) என உரைத்ததுவும், ஆண்டுரைத்தவையும் நினைவு கூர்க. அந்நாளில் மக்கள் திருப்பதிகங்களைப் பயின்றுபயனடைந்தது போல இந்நாளிலும் பயில்வாராகில் நலந்தரும்! விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை - அன்பிற் சிறந்த பிள்ளையார் அரசுகள் என்ற இவர்களுடைய பெருமைகளையும் அவர்களாற் பாராட்டப்பட்ட தொண்டர்களது பெருமைகளையும். உரைத்து அங்கு ஒருப்படு சிந்தையினார்கள் - உரைத்து அதன் பயனாகச் சிந்தையின் ஒருமைப்பாடு பெற்றவர்களாகி என்க. உரைத்து - காரணப் பொருளில் வந்த வினையெச்சம். தொண்டர்களது பெருமையினை உரைத்த அதனால் |