பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்413

 

1510. (வி-ரை.) தமக்கேற்ற திருத்தொண்டின் நெறி - இறைவரைப் பாடியும், சரியை கிரியையாதி நெறிகளிற் சரித்துக் காட்டியும் உலகரை வழிபடுத்துவது. இந்த யாத்திரையில் பரசமாய நிராகரிப்பும் சைவசமயத் தாபனமும் நிகழ்வது குறிப்பு.

ஆற்றுதல் - செய்தல் : நடத்துதல்.

நெறிஆற்ற - ஏத்தி - தொழுவதற்கு - என்று கூட்டுக. பதி பலவும் சென்று ஏத்துதலும், தாள் தொழுதலும் தொண்டின் நெறி எனப்பட்டன.

தொழுவதற்குத் - தொழுது - பிறபதிகளிற செல்வார் தாமிருந்த பதியில் அரனாரைத் தொழுது அருள் விடைபெற்றுப் போவது மரபு.

முன்னாக - நேர்ந்தவாறு பின்னும் போந்து வணங்குவார் என்பது குறிப்பு. "பொனினிநா டதுவணைந்து, வாம்புனல்சூழ் வளநகர்கள் பின்னும்போய் வணங்கியே" (திருநா - புரா - 412). இப்போது புகலூரினின்றும் புறப்பட்டுச் சென்று பல பதிகள் வணங்கிப் போந்த நாயனார் மீண்டு வருங்கால் போந்தவாறே பல பதியும் வணங்கிப் "பூம்புகலூர் வந்தடைந்தார்" என்பதும் கருதுக.

தொழுது அகன்றாராகிய பிள்ளையாருடன் அரசும் - வணங்கினார் - என்று மேல்வரும் பாட்டும் கூட்டி முடிக்க. அகன்றார் - பெயர். வினைமுற்றாகக் கொண்டு எழுவாய் வருவித்துரைத்தலுமாம்.

245

திருப்புகலூர்

II திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி
பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ
மின்னக் கன்னவெண் டிங்களைப் பாம்புடன்
என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே?

1

மின்னி னேரிடை யாளுமை பங்கனைத்
தன்னை நேரொப் பிலாத தலைவனைப்
புன்னைக் கானற் பொழிற்புக லூரனை
என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே.

4

விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
யெண்ணி நாமங்க ளேத்தி யெழுத்தஞ்சுங்
கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனில்
புண்ணி யன்புக லூருமென் னெஞ்சுமே.

5

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- புகலூரிறைவரைத் தலைவராகக் கொண்ட தலைவி அசதியாடிய குறிப்பு முதற்பாட்டு. தலைவரை நினைந்திரங்கல் 4வது பாட்டுக் குறிப்பு. 2 - 3 பாட்டுக்கள் தலைவி நிலைகண்டு நற்றாயிரங்கல். புகலூரிறைவரை மனத்துள் வைத்துப் புகலூரைத் தொழுது புறப்பட்ட குறிப்புடையது இத்திருப்பதிகம். "புகலூருமென் னெஞ்சுமே" (5); "தொழுது மதிப்பவர் புண்டரீகத்துளார் புகலூரர்" (6); "புகலூரைத் தொழுமினே" (10); என்ற குறிப்புக்கள் பூம்புகலூர் தொழுதகன்றார் (1510) என்று ஆசிரியர் அறிவித்ததற்கு அகச்சான்றாவன.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) துன்னக் கோவணம் - தைத்த கோவணம். "கருந்துணி பல தொடுத்திசைத்த ஒரு துணி." பொன் நக்கு அன்ன - மின் நக்கு அன்ன - நகுதல் விளங்குதல் என்னும் பொருளில் வந்தது. இல்பொருளுவமை. - (2) இரைக்கும் - பெருமுச்சுவிடும். இது நற்றாயிரங்கள் என்னும் அகப்பொருள்.