| பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி யரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து விரும்புநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக் கரும்பினுட் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே. |
4 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- இயமனது பயத்தைப் போக்கவல்லவர் திருக்கடவூர் இறைவர். அவர், விதிப்படி வழிபட்டு நினைபவர்க்கு இனியவற்றை இனிதாக அருளவல்லார். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பொள்ளத்த - பொள்ளல்களை உடைய. பொள்ளல் - ஓட்டை. மாதர் வெள்ளம் - பெண் இச்சைப் பெருக்கு. உள்ளத்த - உள்ளமாகிய. உள்ளம் - இங்கு உயிர் என்னும் பொருள் குறித்தது. "உடம்பெனும்" என்ற தனித் திருநேரிசையுள் "உயிரெனுந் திரிமயக்கி" என்றது காண்க. உணருமாறு உணர்தல் - திருவடிஞானங் காட்டக் காணுதல். கள்ளம் - ஆணவம். -(2) தருமராசன் - கூற்றுவன். விலக்குவார் ஆர்? - இவரைத் தவிர வேறு யாவர்? இவரே கூற்றினைக் குமைத்தவர் என்பது. கண்ணிடை மணியர் - கண்ணினுள் மணிபோன்றவர். கண்மணி காட்டுமுபகாரம் செய்தல்போல், வீரட்டனார் உயிர்க்கு உள் இருந்து காட்டுகின்றார். -(3) பொருந்திய - எழுவகைத் தாதுக்களாற் பிணைத்துக் காட்டப்பட்ட. களிறு - ஐம்பொறி. உருவகம். -(4) சரியை நெறியை விரித்துக் கூறுவது இத்திருப்பாட்டு. இத்தலத்துப் பணிசெய்து பேறடைந்த குங்குலியக்கலயர் வரலாறுங் குறிப்பு. நாயனார் இங்கு அவர் திருமடத்தில் உபசரிக்கப்பட்ட சரிதமும் நினைவுகூர்க. -(5) தலக்கம் - இழிசெயல். "விளக்கத்திற்கோழி போன்றேன்" (பழமொழி). விளக்குச் சுடரைச் சுடும்பொருள் என்றெண்ணாது, உண்ணும் பழம் என்று எண்ணிப்போய் வீழ்ந்து இறப்பது ஒரு விட்டிற்பூச்சி போல, உலகில் உழன்று இறக்கும் மக்களியல்பு குறிப்பு. "மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்" (11 திருமுறை - கோயினான் - 28.) கோழி - விட்டில்.-(6) பாழுக்கே நீர் இறைத்து; உருவகம். "உயிர்நிலை யுடம்பே காலா" (திருவாரூர் - நேரிசை - 7) என்றதில் "பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீ ரிறைத்து" என்றது காண்க. இப்பதிகம் 8-வது பாட்டில் பாழுக்கே நீரிறைத்தேன் என்பதுமிது. வழியிடை - நல்வழியில். கழியிடைத் தோணி, - மேல் ஏறமாட்டாது அதனுள்ளே அகப்பட்டு உழலுதல். களியில் தோணி ஒருபுறம் கடலினுள் போனால் அமிழ்ந்து விடுமாதலின் அங்கும் போகாது, மற்ற ஒருபுறம் கரையேறவு மாட்டாது, கழியினுள்ளே உழல்வது. -(7) பேய் - பிறரை அலைப்பது; பிறரால் அஞ்சி ஒதுக்கப்படுவது. கூகை - ஒளியின் வாராது இரவிற். சரிப்பது. -(8) "உற்றலாற் கயவர்தேறார்" (பழமொழி). கட்டுரை - பழமொழி. கீழ்கள் தாமே கட்டங்களை அனுபவித்தால் தெரிவதன்றி நல்லோர் சொற்கொண்டு தெளியார். - (9) காலனை உதைப்பவர் - தல சரிதம். மாலினைத் தவிர நின்ற - மால் - இங்கு மயக்கந் தந்து உயிர் போக்கும் மரணம் குறித்தது. -(10) இருவர் - பிரமா - விட்டுணுக்கள். மூவர் - உருத்திரன், மகேசன், சதாசிவன், கந்திருவங்கள் - கீதங்கள். குறிப்பு :- இப்பதிகத்துள் 5,6,7,8 பாட்டுக்கள் "கடவூர் வீரட்டனீரே" என்று முன்னிலை முடிபும், ஏனைய பாட்டுக்கள் "கடவூர் வீரட்ட னாரே" என்று படர்க்கை முடிபும் பெற்றுள்ளன. இவை வெவ்வேறு பதிகங்களைச் சேர்ந்தனவோ என்பது ஐயம். II திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய் இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச் சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே யுருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே. |
திருச்சிற்றம்பலம் |