தலவிசேடம் :- திருக்கடவூர் - இது காவிரிக்குத் தென்கரையில 47-வது தலம். இறைவர் செய்த வீரங்கள் எட்டனுள் மார்க்கண்டரைக் காக்கும் பொருட்டுக் கூற்றுவனை உதைத்த வீரம் நிகழ்ந்த இடம். காலசங்கார மூர்த்தி விளக்கமாய்த் தனியே எழுந்தருளியுள்ளார். இராதாந்தர கற்பகத்தில் திருமால் முதலிய தேவர்கள், தூய்தான ஓரிடத்தில் வைத்து உண்ணவேண்டுமென்று கொணர்ந்து இங்கு வைத்த அமுதகடம் அமுதலிங்கமாக உருப்பட்டமையின் சுவாமி அமுதநடேசர் எனவும், இத்தலம் கடபுரி - கடவூர் எனவும் வழங்கப்பெறும் என்க. கடம் - கலயம், குடம். சுவாமிக்குக் கலயர் என்ற பெயரும் இப்பொருள்பற்றியது. சுவாமியின் இப்பெயரை இத்தலத்து அவதரித்துப் பேறு பெற்ற (குங்குரியக்) கலயநாயனாருக்கு இட்டு வழங்கினது காண்க. கடவூர் - இயம் வாதனையைக் கடத்தற்குதவும் ஊர் என்றலுமாம். பாத்தும கல்பத்தில் சிவபெருமானிடம் சிவஞானம் பெறும்பொருட்டுப் பிரமதேவர் பெற்ற சிவஞான விதையை விதைத்துத் தோன்றிய வில்வ மரத்தையுடைமையால் இது வில்வரணியத் தலம் என்றும் பெயர்பெறும். அகத்தியர் வழிபட்ட பாபவிமோசனலிங்கமும, புலத்தியர் வழிபட்ட புண்ணியவர்த்தன லிங்கமும் கோயிலினுள் வடக்குச் சுற்றினுள் சிறக்க வீற்றிருக்கின்றன. குங்குலியக்கலய நாயனாரும், காரி நாயனாரும் பேறுபெற்ற தலம். இங்குச் சத்த கன்னியர், வாசுகி, துர்க்கை முதலியோரும் பூசித்து வரம்பெற்றனர். மார்க்கண்டேயர் காசியினின்றும் கங்கையைத் திருக்கடவூர்மயானத்தி னருகில் உள்ள காசித் தீர்த்தத்தில் கொணர்ந்து, பிலத்துவாரத்தின்வழி வந்து, நாடோறும் அத்தீர்த்தத்தினால் அமுதகலயநாதரை மஞ்சனமாட்டி வழிபட்டனர் என்பது தலவரலாறு. அவர் வந்த பிலத்தின் வாயில் திருக்கோயிலின் வடக்குச் சுற்றில் இன்றும் காண உள்ளது. அந்தக் காசிக் கங்கை நீர்தான் இன்றும் அமுதகலய நாதருக்குத் திருமஞ்சனமாகும். மேற்கு நோக்கிய சந்நிதி. சுவாமி - அமிர்தகடேசர்; அம்மை - அபிராமியம்மை; பிள்ளையார் - கள்ளவாரணப் பிள்ளையார்; தீர்த்தம் - அமிர்த புஷ்கரணி, கங்கை, காலதீர்த்தம் முதலியன; மரம் - வில்வம், சாதி; பதிகம் - 5. இத்தலத்துத் தேவி உபாசகராகிய அபிராமிப் பட்டர் அபிராமியந்தாதி பாடி அமாவாசையைப் பவுர்ணமியாகக் கண்டனர் என்ப. இத்தலம் மாயூரம் - தரங்கம்பாடி கிளை இருப்புப் பாதையில் திருக்கடவூர் நிலயத்தினின்றும் கிழக்கே மட்சாலை நாழிகையளவில் அடையத்தக்கது. இது திருக்கடையூர் என உலக வழக்கில் வழங்குவது பெருந்தவறு. 1513. | சீர்மன்னுந் திருக்கடவூர்த் திருமயா னமும்வணங்கி, யேர்மன்னு மினனிசைப்பாப் பலபாடி யினிதமர்ந்து, கார்மன்னுங் கறைக்கண்டர் கழலிணைக டொழுதகன்று தேர்மன்னு மணிவீதித் திருவாக்கூர் சென்றணைந்தார். |
248 (இ-ள்.) வெளிப்படை. சிறப்புப் பொருந்திய திருக்கடவூர்த் திருமயானம் என்ற தலத்தினும் சென்று வணங்கி, அழகு பொருந்தும், இனிய இசையுடைய தேவாரப்பாடல்கள் பலவற்றையும் பாடித் தொழுது, இனிதாக அங்கு எழுந்தருளியிருந்து, மேகத்தின் தன்மை பொருந்திய நீலகண்டரது திருவடிகளைத் தொழுது அங்கு நின்று புறப்பட்டுத், தேர்மன்னும் அழகிய வீதியையுடைய திருவாக்கூரிற் சென்று அணைந்தனர் (நாயன்மார்களிருவர்களும்.) (வி-ரை.) சீர்மன்னும் - சீர் - சமயாசாரியர்கள் மூவராலும் சிறந்த அருமையான பாடல்பெற்ற சிறப்பு. மன்னுதல் - அச்சிறப்பும், அத்திருப்பாட்டுக்களாற் போதும் பயனும் என்றும் நிலைத்திருத்தல். பதிகங்கள் பார்க்க. திருக்கடவூர்த் திருமயானம் - திருக்கச்சிமயானம், திருநாலூர் மயானம் என்பவற்றினின்றும் பிரித்துணரும் பொருட்டு அணிமையில் உள்ள திருக்கடவூர் என்ற |