பக்கம் எண் :


422திருத்தொண்டர் புராணம்

 

அதனில் மூலாதாரம், இருதயம், கண்டம், நாவினடி, புருவத்தினிடை, பிரமரந்திரம் என்ற ஆறிடங்களில் கீழ்நோக்கிய தாமரை மொட்டுக்க ளிருப்பதாகவும், கண்டு, அவற்றை உரிய பாவனை, கிரியை, மந்திரங்களால் மேனோக்கியனவாக மலரச்செய்து, அவற்றில் இறைவனை வழிபடும் சிவாகம பூசை முறை இங்குக் குறிக்கப்பட்டது. இதனைச் சுழுமுனாத் தியானம் என்பது மரபு. விரிவு சிவாகமங்களுட் காண்க. குற்றேவல் தாமகிழ்ந்த - அத்தொண்டர் செய்யும் குற்றேவலைத் தாம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்ட எனவும், அத்தொண்டர்க்குத் தாம் ஏவலாளராகக் குற்றேவல் செய்வதனை மகிழ்ந்த எனவும் உரைக்க நின்றது. "கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்" (தாண் - ஆரூர்). பொதிசோறு இரந்தளித்தல். தூது செல்லுதல், விறகு விற்றல், மண்சுமத்தல் முதலிய வரலாறுகளின் நுட்பங்களை இங்கு வைத்துக் காண்க. அடித்தாமரை மேல் வைத்தார் - அடியாகிய தாமரையை என் முடிமேல் வைத்தார். நாயனாருக்குத் திருவடி சூட்டிய சரிதக் குறிப்பு. என் என்றது தொக்கி நின்றது. -(2) ஓதிற்று...இல்லை - போலும் - தாமே ஞானங்களுக்கெல்லா மிருப்பிடமாயுள்ளார். காப்பார் - வாராமற் காப்பர். கவலையும் அது காரணமாய் வரும் இடும்பையும் என்க. "தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான், மனக்கவலை மாற்ற லரிது" (குறள்) என்றதனை இங்கு வைத்துக் காண்க. ஆதிக்கு அளவாகி நிற்றலாவது ஆதியென்பவற்றை யெல்லாம் கடந்தவராய், அவற்றை அளப்பவரா யிருத்தல். "ஊழியளக்கவல்லான்" (தேவா). அளவு - அளக்கும் கோல். -(3) வையார் - கூர்மை பொருந்திய. வளர் ஞாயிறு - இளஞ்சூரியன். -(4) வடி - கூர் வடித்தல். பொடி - திருநீறு. -(5) ஏகாசம் - உத்தரீயம்; போர்வை. "மானுரிதோ லுடையாடை, யோகவிட்டுகந்த வெரியாடி", "பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தார்க்குரு" (கந்தரலங்காரம்); மேகாசம் கட்டழித்த - மேகாசு அம்கட்டு ஆழ்ந்த - மேல் உள்ள தோல் - நிணம் - முதலிய குற்ற நீக்கிய. அம் -சாரியை; மா காரம் - மா - பெரிய; காசம் - பிரகாசம். (இவை ஸ்ரீமத் முத்துக்குமாரத்தம்பிரான் சுவாமிகளது உரைக்குறிப்புக்கள்.)-(7) கொலான் - கோல் - அம்பு. இங்கு மலரம்பு குறித்தது. கோலான் - காமன். கோவழல் கண் அழல். பெரிய ஆற்றல் படைத்த தீ.-(8) எண் ஆயிரங் கோடி - எண் - எண்ணத்தக்க ஆயிரங்கோடி - அனேகம் என்னும் பொருளில் வந்தது. அண்ணா - அணுகமுடியாதது. திரு அண்ணாமலை. அடியார் புகலிடமது ஆனார் - இது இப்பதிகத்துச் சிறந்த கருத்தாக ஆசிரியர் சார்ந்தார்தம் புகலிடத்தை (1514) என்று இங்குத் தொடக்கத்தில் எடுத்துக் காட்டியது காண்க.-(10) தேர்ந்தவர்கள் - ஆராய்ந்தவர்களாய் - முற்றெச்சம்.

தலவிசேடம் :- திருஆர்க்கூர்த் தான்றோன்றிமாடம் - தலப்பெயரும் கோயிலின் பெயரும் சேர்த்து வழஙகப்படுவது; "சாத்தமங்கை யயவந்தி", "ஆவூர்ப் பசுபதீச்சரம்" என்பனபோல. வள்ளன்மையால் மிக்குயர்ந்த தாளாளர்கள் வாழும் பதி என்று இதன் சிறப்பை ஆளுடைய பிள்ளையார் பதிகத்துள் அருளினர். அதனை, இத்தலத்து வாழ்ந்து சிவனடியார்களுக்கு மாகேசுவர பூசை செய்து பேறடைந்த சிறப்புலி நாயனார் புராணத்துள் எடுத்து ஆசிரியர் விதந்து காட்டியருளியதும் காண்க. இது மாடக்கோயில்களுள் ஒன்று. சுவாமி சுயம்புவாதலின் தான்றோன்றியப்பனார் எனப்படுவார் பதிகம் காண்க. சுவாமி - சுயம்புநாதர்; அம்மை - கட்கநேத்திரி; பதிகம் - 2.

இது மாயூரம் - தரங்கம்பாடி இருப்புப்பாதைக் கிளையில் ஆக்கூர் என்ற நிலயத்தினின்றும் வடக்கில்  நாழிகையளவில் உள்ளது.