வேறு 1515. | வீழி மிழலை வந்தணையு மேவு நாவுக் கரசினையுங் காழி ஞானப் பிள்ளையையுங் கலந்த வுள்ளக் காதலினால் ஆழி வலவ னறியாத வடியா ரடியா ரவர்களுடன் வாழி மறையோ ரெதிர்கொண்டு வணங்க வணங்கி யுள்புக்கார். |
250 (இ-ள்.) வெளிப்படை. திருவீழிமிழலையில் வந்து அணைகின்ற (முன்னர்) மேவிய திருநாவுக்கரசு நாயனாரையும்,(பின்னர் மேவிய) திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், அன்பு கலந்த உள்ளத்தில் எழுந்த ஆசையினால், சக்கரத்தையுடைய திருமாலும் அறியாத அடியாரடியார்களுடன் மறையோர்களும் நகர்ப்புறத்துவந்து எதிர்கொண்டு வணங்கத், தாமும் அவர்களைவணங்கித், தலத்தினுள்ளே புகுந்தார்கள் (அவ்விரு பெருமக்களும்). வாழி - அசை. (வி-ரை.) வந்தணையும் - முன் பாட்டின்கீழ் உரைத்தபடி முன்னர்வந்து அணைகின்ற என்க. நாவுக்கரசு - ஞானப்பிள்ளை என்ற வைப்பு முறையாலும் அவர்கள் முன்னும் பின்னுமாகப் போந்த முறையை உணர்த்தினார். கலந்த உள்ளம் - கலத்தலாவது "உணர்ச்சிதான், நட்பாங் கிழமை தரும்" (குறள்) என்றபடி அன்பினாலே முன்னரே கூடுதல். காதல் - அவ்வன்பு மேலும் பெருகுநிலை. ஆழி வலவன் - திருமால். ஆழி - சக்கரம். வலவன் - வல்லவன் என்பது வலவன் என நின்றது. வல்லமையாவது அது பெறும் பொருட்டுப் பெருந்தவஞ்செய்தும் கண்ணையிடந் தப்பியும் அதனை அரனிடத்திற் பெற்றதும், அதனை அரிதின் எந்தித்திரித்து உலகங் காத்தலும், பிறவுமாம். ஆழி வலவன் - ஆழியை வலத்தில் ஏந்தியவன் என்றலுமாம். இத்தலத்தில் திருமால் ஆழிபெற்ற சரிதக்குறிப்புப் பெற இங்கு இத்தன்மையாற் கூறினார். அறியாத அடியாரடியார் - தெரிய முடியாத திருவடியினையுடையவருடைய அடியவர்கள், தெரியாத என்பதனை அடியவர்கள் என்றதனுடன் கூட்டி, அப்பெருமையுடைய அடியார்க்கடியவர்கள் என்றுரைத்தலுமாம் அவர்களுடன் வாழிமறையோர் - ஏனையோர் யாவரினும் அடியார்களது சிறப்பு நோக்கி அவர்களை முன் வைத்ததுமின்றி உடன் - உருபை அவர்களோடு சார்த்தி வைத்து ஓதினார். வீழிமிழலையுள் வாழ்வார்களுள் மிகுதிபற்றி மறையோர் என்று விதந்தோதினார். எதிர்கொண்டு - பெருந்திரளாய் வந்த இத்திருக்கூட்டத்தைத் திருவீழிமிழலையின் அடியார்கள் எதிர்கொண்ட சிறப்பினைத் "தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும், விரும்பி யெதிர்கொள்வார் வீழிமிழலையே" என்று பிள்ளையார் தேவாரத்துட் பாராட்டியருளியது அவர்களது அன்பின் பெருக்கை உணர்த்துவதாம். இதன் பயனாகவே அவர்களின் பொருட்டு நாயன்மார் இருவருக்கும் மிழலைநாயகனார் படிக்காசு வைத்துப்பஞ்சகாலம் முழுமையும் அவர்கள் வருந்தாமைக் காத்தருளினர் என்பது குறிப்பாகும். வணங்க வணங்கி - அடியார் வணங்கத் தாமும் எதிர் வணங்கி. அவர்கள் பின் வணங்குமாறு - வணக்கம் பின்னதாகுமாறு - தாம் முன் வணங்கி என்றலுமாம். உள் - திருநகரத்தினுள். உள் என்றதனால் எதிர் கொண்டமை நகர்ப்புறத்து நிகழ்ந்ததென்க. |