பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்447

 

பதிகக் குறிப்பு :- மறையணிநாவினான், மறப்பிலார் மனத்துளான், பலபல திறத்தினாலும் பேதனாய்த் தோன்றினான், குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தரதை, பிறவியை மாற்றுவான், முற்றிய ஞானத்தான், பிண்டமே யாயினான், என்றித் திறத்தனவாய்ப் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பேணினானை, உரைக்குமா றுரைக்குற்றேன்; உணருமா றுணர்த்துவேன்; இறைஞ்சுமா றிறைஞ்சுவேன்; நாடொறும் வணங்குவேன்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (!) பேணினான் - இத்தலத்துச் சுவாமியின் பெயர். ஆளுடைய பிள்ளையார் பதிகத்துட் "பிரியார்" என்பது காணக். - (2) பலபல திறத்தினாலும் பேதனாய்த் தோன்றினான் - சிருட்டியிற் காணும் பலபேதமும் தானேயாகி உள்ளவர். "அவையே தானயோய்" (சிவஞான போதம் - 2) "உலகெலாமாகி வேறாய்" (சித்தியார் - 2) உரைக்குமாறு - உரையளவில் என் உரையில் வரும் அளவில் - அமைவுபடா னாயினும். -(3) குறவி - வள்ளியம்மை. உறவு - அன்பு. உணருமாறு - உணர்தற் கெட்டானாயினும் அருள்கொண்டு உணரும் அளவு.- (4) மைஞ்ஞவில் - கைஞ்ஞலில் - பொய்ஞ்ஞெக - நகரம் ஞகரமாய் வந்த எழுத்துப் போலி. பொறி - அறிவுட்கொள்ளும் தன்மை. - (6) இறைஞ்சுமாறு - விதித்தபடி வணங்க. - (7) பிறரும் - புறம் - அகப்புறம் - என்ற சமயத்தவரும். அவர்கள் எத்தும்வகை மேல் 9-வது பாட்டில் அருளப்பட்டது. - (8) முற்றிய ஞானத்தான் - நிறைவாகிய பேரறிவுடையவன். நிறைந்த ஞானத்தில் வெளிப்படுபவன். பிண்டம் - உலகமாகிய உடல். - (9) விரிவிலா...பரிவினால் - சைவத்தின் நிறைந்த நிலை காட்டுவது இத்திருப்பாட்டு ஞானசாத்திரங்களுள் எடுத்தாளப்படுவது. விரிவிலா அறிவினர்கள் ஆதலின், என வேறு ஒருசமயம் செய்ததற்குக் காரணங்கூறியபடி. செய்து - தாமாகக்கட்டி. "பொய்யே கட்டி நடத்திய" (திருத்தொண்டர் புராண வரலாறு - 20). எரிவினால் - கோபம் முதலிய தாமதகுணங்களாற் றூண்டப்பட்டு. எம்பிராற்கு ஏற்றதாகும் பரிவினால் - எமது பெருமான் எங்கும் நிறைந்துள்ளாராதலின் அந்தப் பக்குவத்தினும் அமைந்து ஏற்றவாறு அருள்வர் என்ற அன்பினால். பெரியோர் - விரிவிலா அறிவினார்கள் போலல்லாது முதிர்ந்த ஞானமுடையோராய்ச் செயற்கரியவற்றையும் செய்வோர். - (10) உருகிய - அன்பினால் மனமுருகப் பெற்ற.

தலவிசேடம் :- பெருவேளூர் - காவிரிக்குத் தென்கரையில் 92-வது தலம். ஐயன்பேட்டை என வழங்கப்படும். சுவாமி - பிரியாத நாதர் - பேணினார்; அம்மை - ஏலவார்குழலி. பதிகம் 2.

குழிக்கரை என்ற புகைவண்டி நிலையத்தினின்றும் வடக்கே மட்சாலைவழி ஆற்றைப் பரிசினாற்கடந்து நான்கு நாழிகையளவில் உள்ள திருக்கண்ணமங்கையை அடைந்து, அங்குநின்றும் மேற்கில் ஒருநாளிகை யளவில் உள்ள திருக்கரவீரத்தினின்றும் வடமேற்கில் மட்சாலை வழி 1 நாழிகை யளவில் அடையத்தக்கது இத்தலம்.

சாத்தங்குடி - தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று; திருக்கரவீரத்தினின்றும் தெற்கில்  நாழிகையில் மட்சாலை வழி யடையத்தக்கது.

குறிப்பு :- இடைப்பட்ட தலங்களாக மேற் குறித்தவற்றுள் திருக்கரவீரம் முதலிய தலங்களுக்கு நாயனார் பதிகங்கள் கிடைத்தில; அவற்றின் குறிப்புக்கள் ஆளுடைய பிள்ளையார் புராணத்துட் காண்க.

1529.

மன்றல் விரவு மலர்ப்புன்னை மணஞ்சூழ் சோலை யுப்பளத்தின்
முன்றி றோறுஞ்சிறுமடவார் முத்தங் கொழிக்கு மறைக்காட்டுக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த கோயில் புகுந்து வலங்கொண்டு
சென்று சேர்ந்தார் தென்புகலிக் கோவு மரசுந் திருமுன்பு.

264