பக்கம் எண் :


450திருத்தொண்டர் புராணம்

 

மணிநீள் வாயில் வணங்குவார் - கோயில் வாயில்களை வணங்கி உட்புகுதல் மரபு. வணங்குவார் - வினைப்பெயர். வணங்குவார்களாகிய - பெரும்புகழார் - அறிந்தார் என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. மணி - அழுகு. மணிகள் கட்டிய என்றலுமாம். நீளுதல் - புகழாலும் பெருமையாலும் மிகுதல்.

265

1531.(வி-ரை.) தொல்லை....அணையாமை - வாயில் அடைத்தே நிற்கின்றமைக்கும், அதனால் அன்பர் வேறு வாயில் வழிச் சென்று தொழுதமைக்கும் காரணம் கூறியபடி. இவை யிரண்டினுக்கும் இடையில் அணையாமையை வைத்துக் கூறிய கருத்துமிது.

வாயில் தொடர்வு - வாயில்கள் கூட்டி மந்திரத் தாழ் இட்ட பிணைப்பு. வல்ல அன்பர் - வன்மையாவதுமறைகளின் மந்திர வலிமையின் முன் நின்று அதனை அவிழ்க்கத் தக்க (அதனை ஒத்த) மந்திரம் ஒதிச் செயல்செய்யும் ஞான வலிமை. இதனைப் பிற்சரித நிகழ்ச்சியாற் கண்டு கொள்க.

"அருமறைக டிருக்காப்புச் செய்து வைத்தவக்கதவள் திறந்திடவம் மறைகளோதும், பெருகியவன் புடையடியா ரணைந்து நீக்கப் பெறாமையினால்" (திருஞான - புரா - 580) என்று இதனை ஆசிரியர் பின்னர் விளக்குதல் காண்க. "அம் மறைகள் ஒதும்" என்றமையால் தமிழ் வேதம் திறக்கவும் அடைக்கவும் செய்யக் கண்டபடி. அ என்ற கூட்டின் றிறங்கொண்டு முன் பூசித்துத் திருக்காப்புச் செய்த மறையும் தமிழ் மறையேயன்றி வடமொழியன்று என ஆராய்ச்சி செய்து முடிப்பாருமுண்டு. அகரச்சுட்டு அந்த மறையே போன்றதென்ற பொருளில் வந்ததன்றிப் பிறிதில்லை. நேற்று உண்ட அந்த அரிசி - உண்ட பழம் - கேட்டபாட்டு என்பனபோலக் கண்டு கொள்க. "உண்டதே யுண்டும் உடுத்ததே யுடுத்தும் அடுத்தடுத் துரைத்ததே யுரைத்தும், கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும் கழிந்தன கடவநா ளெல்லாம்" (பட்டினத்துச் சுவாமிகள்) என்றதில் இப்பொருள் வெளிப்பட விளங்குதல் காண்க. மறைகள் அடைத்த கதவத்தை அந்த மறைபோன்றதொன்று தான் திறக்கற்பாலது. ஒரு கோல்கொண்டு பிணைத்த பூட்டு அத்திறவுகோல் கிடையாதபோது அதனை ஒத்த மற்றொன்றினால் திறக்கவும் அடைக்கவும் பட்டதாம் என்பது. திருஞானசம்பந்தர் புராணம் 592-வது பாட்டில் இதனை ஆசிரியர் விளக்குவது காண்க.

மருங்கு ஒர்வாயில் - அதன் தென்பால் இட்ட ஒர்வாயில் என்ப.

அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி - அடியார்கள் என்ற எழுவாய் வருவிக்க. அருச்சிப்பார்களாகிய அடியார் தொழுவார் என்று, அருச்சிப்பார் என்ற தனை எழுவாயாக்கி யுரைப்பினுமையும். படி - படியினை - தன்மையினை. இரண்டனுருபு தொக்கது.

கண்டு இதனைக் கேட்டு - அறிந்தார் - கண்டும் கேட்டும் இவ்வரலாறுகளை அறிந்தார். கண்டது - கதவம் அடைத்தே நிற்பதனையும், மருங்கோர்வாயில் வழி யெய்தித் தொழுவாராம்படியினையுமாம். கேட்டது - அவ்வாறு நிகழ்வதாய் மறை திருக்காப்பிட்ட அன்றுமுதல் இன்றுவரை அடைத்தே நிற்பதுவும், மருங்குவழி யெய்தி தொழுது வருவதுவும், அதன் காரணம் தொடர்வகற்ற வல்ல அன்பரணையாமை என்பதுவுமாம்.

இதனை - "தொல்லை...ஆம்படி" என்ற இதனை.

கேட்டறிந்தார் - கண்டது கொண்டு காணாத முன்நிகழ்ச்சி கேட்டறிதற்பால தாதலின் கேட்டு என்றார்.


திருநாவுக்கரசு நாயனார் சோழ நாட்டு யாத்திரைப்படம்