தலைவராகிய ஆளுடையபிள்ளையார்; தாம்....போனார் - அவரைப் பிரித்து தாம் மட்டும் மிகுந்த அன்புடன் தமிழ் நாடாகிய பாண்டிநாட்டுக்கு எழுந்தருளினார். 288 இந்த ஐந்து பாட்டுக்களும் சொல்லாலும் பொருளாலும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1550. (வி-ரை.) வந்து - அவ்வாறு போதவிட்டார் சிலர் என்ற எழுவாய் முன் பாட்டிலிருந்து வருவிக்க. (போதவிட்டார் சிலர்) வந்து - எய்தி - அறிவித்து - வணங்க - வினவ - என்றுரைப்பான் (1550) - எனத், திருமறையோர் கேட்டே - நினைந்தெழுந்தார் (1551) - ஆயபொழுது, - புகலி ஆண்டைகைக்குத் - திருநாவுக்கரசு - "இசையேன்யான்" என்றா (ராக), (1552) - உடைய பிள்ளையார் - என்றார் (1553) - என்ன - உரைத்தவரை - மறுக்கமாட்டாது - அரசு இருப்ப - ஞானத் தலைவனார் - தமிழ் நாட்டில் ஆதரவாற் போனார் (1554) - என்று இந்த ஐந்து பாட்டுக்களையும் தொடர்ந்து கூட்டி முடித்துக் கொள்க. வேணுபுரி - வேணுபுரம்; சீகாழி. வேணுபுரி அந்தணாளர் - ஆளுடைய பிள்ளையார். அறிவித்து - அவரது பெருமடத்தில் சேர்ந்து வாயிற் காவலர்கள் மூலம், தாங்கள் வந்த செய்திகளின் வரலாற்றை யெல்லாம் சொல்லிப் பிள்ளையாருக்கு அறிவித்தார்கள். "பெருமடத் தணைய வந்து பெருகிய விருப்பிற் றாங்கள், வருமுறைத் தன்மை யெல்லாம் வாயில்கா வலர்க்குச் சொன்னார்" (திருஞான - புரா - 609). அவர்பால் எய்தி - வாயிற் காவலர் உட்சென்று பிள்ளையாருக்கு அறிவிக்கப், பிள்ளையார் கேட்டு அருள் கூர்ந்து அகமலர்ந்து அழையுமென் றருளிச் செய்ய, அவ்வாறே அவர்கள்வந்து அழைக்கச், சென்று எய்தி என்க. (திருஞான - புரா - 610 - 611) இவ்வரலாறுகளும், பின் நிகழ்ச்சிகளும் ஆளுடைய பிள்ளையார் புராணத்தினுள் விரிக்கத் தகுவன ஆதலின் இங்குச் சுருக்கிக் கூறினார். தீதின்மை வினவ - அந்தணாளர் வினவ. தீதின்மை - தீங்குகளினீங்கிய நிலைமை. தீதின்மை வேறு"; நலமுண்மை வேறு. தீதின்மை நலமுண்மைக்கு இன்றியமையாது வேண்டப்படும் முதற்படியாம். ஆதலின் நலமா? என்று வினவுவார் தீதிலாரா யுள்ளாரோ? என்று வினவினார். "தீங்குளவோ" (1321) என்றதும், ஆண்டுரைத்தவையும் இங்குச் சிந்திக்கற்பாலன. "தீங்கும் உள ஆமோ இந்த உலகம் உயவந்தீர் இருநாள் நினைவார்க்கு" என உரைப்பார் - "நினைவார்க்குத் - தீய உளவாமோ?" என்று கூட்டுக. நினைத்தல் சாதனம்; தீங்கு சாராமை பயன். உறுதியும் விரைவும் குறித்தற்குப் பயனை முன் வைத்துக் கூறினார். ஆளுடைய பிள்ளையாரது திருவடிகளை நினைவார்க்கு எவ்விடத்தும் எஞ்ஞான்றும் எத் தீமையும் சாரா என்பது. "பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனுந் தோற்றோணி கண்டீர்" (மும் மணிக்கோவை 11), "ஒண்கலியைப், பொன்றுங் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே" (மேற்படி. 3) என்ற நம்பியாண்டார் நம்பிகளது திருவாக்குக்கள் காண்க. இந்த உலகம் உயவந்தீர் - பரசமய நிராகரிப்பும் சைவத்தின் ஆக்கமும் ஆளுடைய பிள்ளையாரது திருவவதார உள்ளுறை. அவர் புராணம் 19 - 26 பாட்டுக்கள் பார்க்க. உளஆமோ - வருவீர் - தாள் - நினைவார்க்கு - இதுவரை தீமை சார்ந்து இருப்பினும் இனி அவை உள்ளன ஆகுமா? தேவரீர் அந்நாட்டுக்கு எழுந்தருளி வருவீர்; அதனை யாங்கள் வேண்டுகின்றோம்; அரசியாரும் அமைச்சனாரும தேவரீரது திருவடிகளை நினைத்த வண்ணமாக உள்ளார்கள் என்ற குறிப்புக்கள்பட உரைத்தனர்; வந்தவர் அறிவுடை மாந்தர்களாதலின். (திருஞான - புரா. 607) |